Published:Updated:

`அடிவாங்கினதுக்காக என் பதவியைப் பறிச்சிட்டாங்க!'- கொதிக்கும் குமரி காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கூட்டத்தில் தாக்கப்பட்ட சபீன்
காங்கிரஸ் கூட்டத்தில் தாக்கப்பட்ட சபீன்

அந்தக் கடிதத்தில் என்னைத் தாக்கியதற்குக் காரணமான தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சபீன், தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவராக இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சில கருத்துகளை கூறியதற்காக, மேடையிலிருந்து இறங்கிய சபீனை சிலர் தாக்கினர். அதில் அவரது மண்டை உடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர் போலீஸில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், சபீன் வகித்த மாநில மீனவர் அணித் தலைவர் பதவியிலிருந்து அகில இந்திய தலைமை அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் சபீன்.

இதுகுறித்து சபீனிடம் பேசினோம், ``அன்று நடந்த கூட்டத்துல நான் தப்பா எதுவுமே பேசல. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ரொம்ப மோசமாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. `தொண்டர்கள் பேசாமல் இருக்கிறதுனாலதான் கட்சி அழிஞ்சுபோச்சு. நீங்க பேசுனா பதவி போயிரும்னு பயப்படுறீங்களா?

சபீன் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடிதம்
சபீன் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடிதம்

சில தலைவர்கள் அவர்களின் படத்தைப் பெருசா போட்டு போஸ்டர் அடிக்கிறவங்களுக்கு சீட்டு வாங்கிக்கொடுத்தாங்க. அதுல எத்தனைபேரு வெற்றிபெற்றாங்க' என பேசினேன். இந்த கருத்தைக்கூட பேசலனா கட்சி எப்படி வளரும். இதுக்காக என்னை ஆள்வச்சு அடிச்சாங்க. தாக்குதல் நடந்தது பற்றி புகார் கொடுக்க வேண்டாம், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கிறோம் என முக்கிய நிர்வாகிகள் சொன்னார்கள். இதைத்தொடர்ந்து நான் தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர், டெல்லி தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளேன். அந்தக் கடிதத்தில் என்னைத் தாக்கியதற்கு காரணமான தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

நான் கஷ்டப்பட்டு பதவிக்கு வரவில்லை, பதவிக்கு வந்த பிறகு கஷ்டப்பட்டேன். தமிழக காங்கிரஸுக்கு மாநிலத் தலைவராக இ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தபோது என்னை நியமித்தார். நான் பொறுப்பேற்ற பிறகு எல்லா மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மீனவரணி கமிட்டியை உருவாக்கினேன். ஐந்து வருஷமா எல்லா கடலோர மாவட்டங்களிலும் கால்நடையாக நடந்து பணி செய்த என்னை கூட்டத்தில் வைத்து அடிச்சு தொரத்திட்டு, மாநில மீனவரணி தலைவர் பதவியையும் பறிச்சுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. அடிச்சவரின் பதவியை எடுக்காமல், அடிவாங்கினவனின் பதவியைப் பறிச்சுட்டாங்கன்னா என்ன நியாயம். என்னை நீக்கியதுபற்றி கட்சி விளக்கம் தரணும்.

தாக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன்
தாக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன்

மீனவரான நான் நிகழ்ச்சியில் கலந்துக்கிறது அவங்களுக்கு பிடிக்கல. மீனவரணித் தலைவர் என்பதால் எனக்கு சத்தியமூர்த்தி பவன்ல ஆபீஸ் இருக்கு, அதுவும் சிலருக்குப் பிடிக்கல. வரும் சட்டசபைத் தேர்தலில் குளச்சல் தொகுதியைக் கேட்பேன் என்பதாலும் எல்லோரும் என்னை ஓரம்கட்டுறாங்க" என்றார்.

பின் செல்ல