Election bannerElection banner
Published:Updated:

`எடியூரப்பா நீண்டநாள் முதல்வராக இருக்க மாட்டார்!’- உட்கட்சிப் பூசலால் தள்ளாடும் கர்நாடக பா.ஜ.க

கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ( ANI )

`கர்நாடக முதல்வராக எடியூரப்பா நீண்டநாள்கள் நீடிக்க மாட்டார்’ என பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகௌடா யட்னல் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக ஆளும்கட்சியான பா.ஜ.க-வில் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துவருவதாகவும், முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடக வடக்குப் பகுதி எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன. முன்னதாக, எட்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான உமேஷ் கட்டி, எடியூரப்பா அமைச்சரவையில் தாம் அமைச்சராகப் பதவியேற்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு பதிலாக வடக்கு கர்நாடகாவின் பிரதிநிதியாகத் தாம் மாநில முதலமைச்சராக விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

பசனகௌடா யட்னல்
பசனகௌடா யட்னல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் உமேஷ் கட்டி, பசனகௌடா, முருகேஷ் நிரானி, ரமேஷ் கட்டி, சி.பி.யோகிஷ்வர், ராஜூ கௌடா உள்ளிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் எடியூரப்பாவுக்கு எதிராக ரகசிய இடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தனர். இந்த விவகாரம் பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கர்நாடகா: `இனி நோ லாக்டௌன்; 5டி முறை மட்டுமே’ - முதல்வர் எடியூரப்பா

இந்தநிலையில், விஜயபுரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வான பசனகௌடா பேச்சு அம்மாநில பா.ஜ.க-வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயபுராவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பசனகௌடா, ``முதல்வராக எடியூரப்பாவின் செயல்பாடுகளால் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இதனால், எடியூரப்பா முதல்வர் பதவியில் நீண்டநாள்கள் நீடிக்க மாட்டார். விரைவில் அவர் மாற்றப்படுவார். அடுத்த முதல்வர் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவராகவே இருப்பார் என பிரதமர் மோடியும் கூறிவிட்டார்.

வடக்கு கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 எம்.எல்.ஏ-க்களாலேயே எடியூரப்பா முதல்வராக இருந்துவருகிறார். மாண்டியா உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களால் அவர் முதல்வர் பதவியில் இருக்கவில்லை’’ என்று பசனகௌடா பேசியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு