Published:Updated:

பா.ஜ.க-விற்குத் தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்? - கர்நாடகாவில் அடுத்த அதிரடி!

எம்.வடிவேல்

`சித்தராமையாவிற்கு முதல்வர் பதவி கிடைக்காத காரணத்தினால், அவர் தூண்டுதலில், அவரின் ஆதரவாளர்களான நாங்கள் ராஜினாமா செய்தோம்'

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடகாவில் முதல்வராகப் பதவியேற்றுள்ள எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 எம்.எல்.ஏ-க்களில், 17எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடக சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 207 எம்.எல்.ஏ-வாகக் குறைந்துள்ளது. எனவே, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது. ஆனால், பா.ஜ.க-விற்கு தற்போது வரை 107 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதன்படி கர்நாடக சட்டமன்றத்தில் பா.ஜ.க-வின் 105 எம்.எல்.ஏ-க்களுடன், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ என மொத்தம் 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது. இந்தநிலையில், எடியூரப்பா தனது பெரும்பான்மையை 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிரூபித்தார்.

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக சட்டமன்றத்தில் எடியூரப்பா பெரும்பான்மை நிரூபித்த அடுத்த நிமிடமே, கர்நாடகாவின் தற்போதைய சபா நாயகர் ரமேஷ்குமார், தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபா நாயகரை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. கடந்தமுறை பா.ஜ.க ஆட்சியின் போது இருந்த போப்பைய்யா-வையே மீண்டும் சபா நாயகராகத் தேர்வு செய்ய முதல்வர் எடியூரப்பா விரும்புகிறார். இதனால், கர்நாடகாவின் புதிய சபாநாயகராக போப்பைய்யாவை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

`அரசியல் விளையாட்டுகளால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை!' - கர்நாடக சபாநாயகர்

புதிய சபா நாயகர் பதவியேற்ற பிறகு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த தரப்பிலிருந்து 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி பா.ஜ.க-விற்கு ஆதரவு தர இருப்பதாக பா.ஜ.க தரப்பில் ரகசியத் தகவல் ஒன்றைத் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த தலைவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் தரப்பில் ராஜினாமா செய்துள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கின்றனர். அவர்கள், ``காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு முதல்வர் பதவி கிடைக்காத காரணத்தினால், அவர் தூண்டுதலில், அவரின் ஆதரவாளர்களான நாங்கள் ராஜினாமா செய்தோம்” என்று கூற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
ANI

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி முடிவுக்கு வந்துவிடும் என்று கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.