பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராக்களை இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ``இதன்மூலம் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவதற்கான வாய்ப்பை இந்தியா சமயோசித மாகத் தடுத்துள்ளது’’ என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுநோக்கும் நடுநிலையாளர்கள்!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபாநானக் குருத்வாராவையும், பாகிஸ்தான் நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் நான்கு கிலோமீட்டர் நீள புதிய பாதையை, நவம்பர் 9-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். 562 பேர் அடங்கிய முதல் குழு அங்கு பயணமானது. அந்தக் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடிகர் சன்னி தியோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் 117 பேர் இடம்பெற்றிருந்தனர்.

குருநானக் தேவ், வாழ்நாளின் கடைசி 18 ஆண்டுகளை தன் சீடர்களுடன் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள கர்தார்பூர் குருத்வாராவில் கழித்தார் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை. அதனால்தான் கர்தார்பூர், சீக்கியர்களின் முக்கிய புனிதத்தலமானது. கடந்த 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராவி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், கர்தார்பூர் குருத்வாரா பலத்த சேதமடைந்தது. பிறகு 1929-ம் ஆண்டு பட்டியாலா மன்னர் சர்தார் போபின்தர் சிங், குருத்வாராவைப் புதுப்பித்தார். இந்தியா, பாகிஸ்தான் தனி நாடுகளாகப் பிரிந்தபோது, சீக்கியர்களின் முக்கிய புனிதஸ்தலங்களான கர்தார்பூர், பஞ்சா சாஹிப், நன்கனா சாஹிப் ஆகியவை பாகிஸ்தான்வசமாகின. அப்போது முதல் கர்தார்பூர் பாதையும் மூடப்பட்டதால், பக்தர்கள் அங்கே செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் எல்லையில் நின்றுகொண்டு கம்பிவலைகளுக்கு அப்பால் தூரத்தில் தெரியும் குருத்வாராவை வழிபட்டனர்.

இனி அந்தச் சிரமமில்லை. தற்போதைய புதிய பாதையால் பயண தூரம் 200 கிலோமீட்டரிலிருந்து 6 கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. விசாவும் தேவையில்லை. ஆனால், பாஸ்போர்ட் அவசியம். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் இந்தத் திட்டத்தை அறிவித்தார். 2000–ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஆனால், பெரிய பலன் இல்லை. 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதற்காக பாகிஸ்தானை அணுகினார். பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை. மீண்டும் 2008-ல் விசா இல்லாமல் கர்தார்பூர் செல்லக்கூடிய ஒரு முன்மொழிவை இந்தியா சமர்ப்பித்தது. அப்போதும் பாகிஸ்தான் மறுத்துவிட்டது. 2018, நவம்பர் 28-ம் தேதி பா.ஜ.க அரசு இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது.

பொதுவாகவே பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் முரண்படும் பாகிஸ்தான், இந்த முறை கர்தார்பூர் பாதையைத் திறப்பதற்கு முழு ஆதரவு அளித்தது. அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தத் திட்டத்தால் பாகிஸ்தானே அதிக பலன் அடைகிறது. யாத்திரீகர்கள் நுழைவுக்கட்டணமாக 20 டாலர் செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தின்படி நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு நாள் வருவாய் மட்டும் ஒரு லட்சம் டாலர் கிடைக்கும். கடும் நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது வரப்பிரசாதம்.

இதுகுறித்துப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், “இந்தப் பாதை திறக்கப்பட்டதால், பா.ஜ.க அரசுமீது சீக்கியர்களுக்கு நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலிஸ்தான் பிரிவினைவாதத்தைப் பேசி பஞ்சாப் சீக்கியர்களை பாகிஸ்தான் தூண்டிவிட முடியாது. அந்த வகையில் இது மத்திய அரசுக்குக் கிடைத்த வெற்றி. அதேசமயம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் `நீலம்’ பள்ளத்தாக்கில் சாரதா பீடத்துக்கு காஷ்மீர் இந்துக்கள் செல்லவும், ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள தர்காவுக்கு பாகிஸ்தான் சூஃபிக்கள் வரவும் அனுமதி கேட்டு நீண்டகாலமாகக் காத்துக் கிடக்கின்றனர். இந்த இரு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கும் கர்தார்பூர் பாதை முன்னோடியாக அமையும்” என்றார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கர்தார்பூர் பாதை திறப்பு நிகழ்வு, இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவை மலரச் செய்ய வேண்டும்.