Published:Updated:

`234 தொகுதிகளின் கள நிலவரம்; தி.மு.க-வினரிடம் பேசுவதற்காகவே ஒரு சர்வே!’ - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

`எங்கள் அப்பா (சிதம்பரம்) எங்கள் வீட்டுக்கு வருவது போன்றதுதான் அமித் ஷா தமிழகம் வருவது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்.’

``உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதைப் பெரிதுபடுத்தாதீர்கள். எங்கள் அப்பா ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு வருவதுபோலத்தான்" என அமித் ஷாவின் தமிழக வருகையைக் கிண்டலடித்துப் பேசியதோடு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க கையாண்ட சாதுர்யத்தை கார்த்தி சிதம்பரம் ஆதரித்துப் பேசியிருக்கும் சம்பவம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் கள நிலவரம் குறித்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டிய தொகுப்பு எங்கள் கையில் இருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. எங்களது பலம் குறித்து தி.மு.க-வினரிடம் பேசுவதற்காகவே நாங்கள் சர்வே எடுத்திருக்கிறோம்.

தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது நாங்கள் தற்போது எடுத்த சர்வேயில் தெளிவாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை தற்போது தொடங்கப்படாத நிலையில், எந்தவோர் அதிகாரபூர்வப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்பட்சத்தில் தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். எத்தனை இடத்தில் நிற்போம் என்பது முக்கியமல்ல.

பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் கார்த்தி சிதம்பரம்
பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் கார்த்தி சிதம்பரம்

தேர்தல் கூட்டணிக்கு எது சாதகமாக இருக்கும் என்பது மட்டுமே தற்போது கருத்தில் கொள்ளப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தற்போது எங்களுடைய குறிக்கோள். எங்களுடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் அவ்வளவுதான்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது பெரிய செய்தியே அல்ல. இது வாடிக்கையானது. டெல்லியில் மட்டும் இருக்காமல் எல்லாம் மாநிலங்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும். எங்கள் அப்பா (சிதம்பரம்) எங்கள் வீட்டுக்கு வருவது போன்றதுதான் அமித் ஷா தமிழகம் வருவது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதைப் பெரிதுபடுத்தாதீர்கள்" என்று சாதாரணமாகக் கூறினார்.

மேலும் கூறுகையில், ``மருத்துவப் படிப்பில் அறிவித்திருக்கும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக வரவேற்கிறேன், நீட் தேர்வுக்குக்கு முன்னர் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பெரிய அளவில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. 12 வருடங்களில் 74 பேருக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது. தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் நீட்டுக்கு முன்பும் பின்பும் இடம் கிடைத்தது, தற்போதுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது அனைவரது கூட்டு முயற்சி; தமிழ்ச் சமுதாயத்துக்கு சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. இந்த விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சட்டரீதியாக முடிவு வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மற்றவர்களுக்குக் கிடைக்காத சலுகையை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு விடுதலை என்கிற ஒரு தீர்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அவர்களைப் போராளிகள்போல் சித்திரிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அனைவரும் ராஜீவ் காந்தி கொலை என்றுதான் சொல்கிறார்கள். ராஜீவ் காந்தியுடன் 16 பேர் இறந்திருக்கிறார்கள். அந்தச் சம்பவத்தை யாருமே பெரிதாகப் பேசவில்லையே..." என்று ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு