Published:Updated:

`கொரோனா காலத்தில் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்!’-மத்திய அரசைச் சாடிய கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

'மத்திய அரசு, கொரோனா பரவலைத் தடுக்கத் தவறிவிட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன், மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்திருக்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததன் காரணமாக நோய்த் தொற்று அதிகரித்தது' என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். நெல்லையில், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

நலத்திட்ட உதவி வழங்கல்
நலத்திட்ட உதவி வழங்கல்

அப்போது பேசிய அவர், ”நாட்டில் மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, வெறும் 500 பேர் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஊரடங்கு அறிவிக்கும் முன், சில நாள்கள் அவகாசம் கொடுத்து மக்களை சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு அவசரகதியில் திடீரென ஊரடங்கை அமல்படுத்தியதால், நெரிசல் மிகுந்த பகுதியில் வசித்த மக்களால் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் பாதிப்பு அதிகரித்தது. அத்துடன், ஊரடங்கு காரணமாக சிறு குறு தொழில்கள் பாதிப்படையும் என்பதைப் புரிந்துகொள்ளாததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நலத்திட்டம் வழங்கப்பட உள்ள அரிசி, காய்கறி பைகள்
நலத்திட்டம் வழங்கப்பட உள்ள அரிசி, காய்கறி பைகள்

ஆட்டோ ஓட்டுநர், சலூன் கடைக்காரர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு 10,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல், வெறும் வார்த்தைகளால் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல், மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதி அறிவிப்பு மூலம் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

அரசு அறிவித்த 20 லட்சம் கோடி நிதியால் பயன் அடைந்த ஒரு தொழில் நிறுவனம் அல்லது தொழில் அதிபரையாவது காட்ட முடியுமா? கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு தாங்கள் விரும்பிய சட்டங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஓராண்டு ஆட்சியில் காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் வகையில் குடியுரிமையை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

நலத்திட்ட உதவி வழங்கிய கார்த்தி சிதம்பரம்
நலத்திட்ட உதவி வழங்கிய கார்த்தி சிதம்பரம்

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற குழுக்கள் கூட்டத்தையாவது கூட்டியிருக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் நடத்தி, ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதையுமே செய்யவில்லை.

இந்திய வரலாற்றில் ரயில்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தற்போதுதான் நடக்கின்றன. மத்திய அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை. பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பக்குவமும் இல்லை. சரியான ஆலோசகர்களும் கூட இல்லாமல், மத்திய அரசு திணறுகிறது. அவர்களால் முடியாவிட்டால் அரசை விட்டு வெளியேற வேண்டும்.

நலத்திட்ட உதவி வழங்கிய கார்த்தி சிதம்பரம்
நலத்திட்ட உதவி வழங்கிய கார்த்தி சிதம்பரம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து் செய்யக் கூடாது என்பது ஆளும் அ.தி.மு.க அரசுக்கு மட்டுமல்லாமல் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கோரிக்கை. இந்த விவகாரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கருத்து என்னவாக இருக்கிறது?” என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு