Published:Updated:

பாஜக-வுக்கு சுப்பிரமணியன் சுவாமி... காங்கிரஸ் கட்சிக்கு கார்த்தி சிதம்பரமா?!

கார்த்தி சிதம்பரம்

பா.ஜ.க எம்.பி-யாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, கட்சிக்குள் இருந்தபடியே அக்கட்சியைப் பற்றிய விமர்சன கருத்துக்களை பேசுவதுபோல, கூட்டணியில் இருந்துகொண்டே கார்த்தி சிதம்பரம் தி.மு.க-வினரை விமர்சித்து வருகிறார்.

பாஜக-வுக்கு சுப்பிரமணியன் சுவாமி... காங்கிரஸ் கட்சிக்கு கார்த்தி சிதம்பரமா?!

பா.ஜ.க எம்.பி-யாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, கட்சிக்குள் இருந்தபடியே அக்கட்சியைப் பற்றிய விமர்சன கருத்துக்களை பேசுவதுபோல, கூட்டணியில் இருந்துகொண்டே கார்த்தி சிதம்பரம் தி.மு.க-வினரை விமர்சித்து வருகிறார்.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

தருமபுரி தொகுதி தி.மு.க எம்.பி-யான டாக்டர் செந்தில் குமார், சமீபத்தில் அரசு விழா ஒன்றுக்குச் சென்றபோது, இந்து மதப்படி பூமிபூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதைப்பார்த்து ஆத்திரப்பட்ட எம்.பி., அதிகாரிகளைக் கடிந்துகொண்டதுடன் பூஜைப் பொருள்களையும் அகற்றவைத்தார். அதன் வீடியோவை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, `ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையைச் சோதிக்கிறார்கள்’ என்ற கமென்டோடு பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. பா.ஜ.க-வினர் செந்தில்குமார் முன்பு கலந்துகொண்ட அரசு விழாவில் மேற்கொள்ளப்பட்ட இந்து முறைப்படியான விஷயங்களை போட்டோவுடன் போட்டுத்தாக்கினர்.

செந்தில் குமார் எம்.பி ட்வீட்
செந்தில் குமார் எம்.பி ட்வீட்
Omar Mukthar M

இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், வாக்களித்துவிட்டு வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் தனது பேட்டியில், ``ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால்கூட எலுமிச்சம்பழத்தை மிதித்துதான் எடுப்பார். அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்புமனு தாக்கல், பதவியேற்பு, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே செய்கின்றனர். இதுதான் எதார்த்தம். திராவிட மாடல் என்பது சமூக மாடலா, பொருளாதார மாடலா என்பது தெரியவில்லை. சமூக மாடல் என்பதை ஏற்கிறேன், பொருளாதார மாடலா என்பதை அறிஞர்கள்தான் விளக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கார்த்தி சிதம்பரத்தின் இந்த திடீர் எதிர்ப்புக் குறித்து அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது, ``இன்று, நேற்றல்ல பலகாலமாக அரசு சார்பில் ஒரு கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பாக பூமி பூஜை செய்யப்படுவது வாடிக்கையாக நடந்துவருவதுதான். எல்லோருக்குமான அரசாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில் இன்றளவும் பல இடங்களில் சிறிய கோயில்கள் இருக்கத்தான் செய்கின்றன. சென்னையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், சிற்றரசு ஆகியோர் ஒற்றை செங்கல்லை எடுத்துக்கொடுத்து பூமிபூஜை செய்யும் போட்டோவைப் போட்டு, ‘சார் கொஞ்சம் இங்கிட்டும் பொங்குங்களேன் பிளீஸ்’ என்று கலாய்த்து பதிவுகளை இட்டுவருகிறார்கள்.

பூமிபூஜையில் உதயநிதி
பூமிபூஜையில் உதயநிதி
Omar Mukthar M

செந்தில் குமாரின் கருத்துக்கு வெளியிலிருந்து எதிர் கருத்து வருவது சாதாரணமானதுதான். ஆனால், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி-யிடமிருந்தே எதிர் கருத்து வருவதுதான் அசாதாரணமானது. இப்போது என்றல்ல, தி.மு.க அரசின் பல விவகாரங்களில் கார்த்தி சிதம்பரம் தி.மு.க-வுக்கு எதிரானக் கருத்துக்களைக் கூறிக்கொண்டேதான் இருக்கிறார். கூட்டணி தர்மத்தால் அனைவரும் வாய்மூடி இருக்க, கார்த்தி சிதம்பரம் மட்டும் இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துச் சொல்வது என்பது சுப்பிரமணியன் சுவாமியைத்தான் நினைவுபடுத்துகிறது. அவர்தான் பா.ஜ.க-வில் இருந்துகொண்டே, மோடி - அமித் ஷா உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே அடிக்கடிக் கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பார். கார்த்தி சிதம்பரத்தைப் பார்க்கும்போது, காங்கிரஸில் ஒரு சுப்பிரமணியன் சுவாமிஎன்றுதான் எண்ணத்தோன்றுகிறது!” என்றனர்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஓ.பி.சி பிரிவு மாநில ஊடகப்பிரிவுத் தலைவர் ரவிராஜ் நம்மிடம், ``பொதுநலன் சார்ந்துதானே பேசுகிறார். எம்.பி-யாக இருந்துகொண்டு சொல்லியிருக்கக் கூடாது. அதே செந்தில் குமாரே மற்றொரு அரசு விழாவில் பூமிபூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். இது விளம்பரத்துக்காகவே செய்திருக்கிரார். கார்த்தியைப் பொறுத்தவரை தவறுகளைச் சரியாகச் சொல்வார். காங்கிரஸுக்கு உள்ளேயே தப்பு இருந்தாலும் சொல்வார். பல மாநிலங்களை விட தமிழ்நாடு காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என்கிறார். தவறு செய்தவர்களுக்குத்தான் உறுத்தும்.

ரவிராஜ், காங்கிரஸ்
ரவிராஜ், காங்கிரஸ்

எதார்த்தமாகப் பேசுபவர். காமராஜர் ஆட்சி என்று சொல்லாதீர்கள், ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங் ஆட்சியைப் பற்றித்தான் சொல்ல வேண்டும். இப்ப இருக்கும் இளைஞர்களுக்குக் காமராஜர் ஆட்சி பற்றியே தெரியாது. இதையும் கார்த்தி சொல்லிக்கொண்டுதான் வருகிறார். நாம் தமிழர் கட்சி கூட பொதுக்கூட்டம் போடுகிறார்கள், ஆனால் காங்கிரஸ் அப்படிச் செய்வதில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார் கார்த்தி. தி.மு.க - அ.தி.மு.க-வில் முழுநேர அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். காங்கிரஸில் பல்வேறு தொழில் செய்பவர்கள்தான் தலைவர்கள். மீதி நேரத்தைதான் கட்சிக்குச் செலவிடுகிறார்கள். இதுபற்றியெல்லாம் துணிச்சலாகப் பேசக்கூடியவர் கார்த்தி மட்டுமே. சமுதாயத்துக்குத் தேவையானக் கருத்தைதான் சொல்லிவருகிறார்” என்றார்.