Published:Updated:

`ஸ்டாலின் உடைத்தால் மண்சட்டி.. அண்ணாமலை உடைத்தால் பொன்சட்டியா?!’ -சர்ச்சை குறித்து கரு.நாகராஜன்

``முதல்வரின் சொந்தத் தொகுதியில், இடுப்பளவு நீர் தேங்கி நிற்பதும், அதில் படகில் பயணிப்பது என்பதும் வெட்கப்படவேண்டிய விஷயம்” - கரு.நாகராஜன்.

மீம் கிரியேட்டர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் எதாவது ஒரு விஷயம் கிடைத்துவிட்டால், மெகா டிரெண்ட் ஆக்கிவிடுவார்கள். அவர்களுக்கு லேட்டஸ்ட்டாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை படகில் சென்ற விவகாரம் சிக்கியிருக்கிறது.

படகில் அண்ணாமலை
படகில் அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் தினமும் மழை பாதித்த இடங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிறார். செல்லுமிடங்களில் சிலவற்றில் கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளம் பாதித்த இடங்களில் மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்றது மட்டும் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, அவர் போட்டோ ஷூட் எடுப்பதற்காகச் சென்றார் என்ற விமர்சனமும் மிகக் கடுமையாக வைக்கப்பட்டது.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இதை பா.ஜ.க-வினர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளரும், அண்ணாமலையுடன் படகில் பயணித்தவருமான கரு.நாகராஜனிடம் பேசினோம். ``தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூர், ஜவஹர் நகரில்தான் இடுப்பளவுத் தண்ணீரில் படகில் சென்றோம். ஜவஹர் நகர் ஒன்றாவது தெரு வழியாக திரும்பி வந்துகொண்டிருக்கையில்தான், வீட்டு வாசலில் நின்றபடி ஒரு பெண்மணி எங்களை அழைத்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் அது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

நிவாரணப் பொருள்களை படகில் எடுத்துச் செல்லவில்லை என்றாலும் பா.ஜ.க சார்பில் ஆங்காங்கே கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். தி.நகர் இந்தி பிரசார சபாவில் ஆயிரக்கணக்கான பேருக்கு தினந்தோறும் உணவு சமைத்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். புளியந்தோப்பிலிருந்து உணவு கேட்டு ஒரு கால் வந்தது. உடனடியாக வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டோம்.

மழைநீரில் நடந்து செல்லும் அண்ணாமலை
மழைநீரில் நடந்து செல்லும் அண்ணாமலை

இதுமட்டுமின்றி, பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹெல்த் சென்டர் ஒன்றைத் திறந்திருக்கிறோம். பெட்ஷீட், பாய், பால் பாக்கெட் உள்ளிட்ட பொருள்களையும் கொடுத்துதான் வருகிறோம். மீம்ஸ் போடுபவர்கள் போடட்டும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்துகொண்டே இருப்போம்.

`மு.க.ஸ்டாலின், துணை பிரதமராகும் கனவுடன் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறார்!' - அண்ணாமலை

முதல்வர் நிவாரணப் பொருள்களை வழங்கும்போது யாராவது கேமராவை மறைத்தவாறு நின்றிருந்தால் உடனே சேகர் பாபு சென்று அந்த நபரை விரட்டிவிடுகிறார். அதுபோலத்தான், முதல்வரின் தொகுதி எப்படிக் கடல்போலக் காட்சியளிக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் அண்ணாமலையை வைத்து வீடியோ எடுக்கும்போது அங்கிருந்தவர்களை ஒதுங்கச் சொன்னார்கள்.

படகில் பயணம்
படகில் பயணம்

முதல்வருக்கு உடைத்தால் மண்சட்டி, பா.ஜ.க உடைத்தால் மட்டும் பொன்சட்டியா? முதல்வரின் சொந்தத் தொகுதியில், இடுப்பளவு நீர் தேங்கி நிற்பதும், அதில் படகில் பயணிப்பது என்பதும் வெட்கப்படவேண்டிய விஷயம். ஆனால், இதை யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக, அண்ணாமலை என்ன செய்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு