Published:Updated:

கருணாநிதி இல்லாத கோபாலபுரம்!

கருணாநிதி இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி இல்லம்

சென்னை வரைபடத்தைப் பொறுத்தவரை ‘கோபாலபுரம்’ என்பது ஒரு நகர்.

கருணாநிதி இல்லாத கோபாலபுரம்!

சென்னை வரைபடத்தைப் பொறுத்தவரை ‘கோபாலபுரம்’ என்பது ஒரு நகர்.

Published:Updated:
கருணாநிதி இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி இல்லம்

ந்திய தலைநகருக்கோ, அது அரசியல் முகவரி... அகில இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அறிந்த முகவரி. அரை நூற்றாண்டுக்கால தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடமாகவும் நாள்தோறும் பரபரப்புடனும் காணப்பட்டதுமான கருணாநிதியின் இல்லத்தின் முகவரி அது. கருணாநிதி இல்லாத இந்த ஓராண்டில் கோபாலபுரம் எப்படி இருக்கிறது?

கோபாலபுரம் இல்லத்தை, 1955-ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடமிருந்து வாங்கினார் கருணாநிதி. பிறகு, 1968-ம் ஆண்டு தமிழக அமைச்சராக அவர் இருந்தபோது, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகிய மூவரின் பெயருக்கு இந்த வீட்டை எழுதிவைத்தார். ஆனால், அவருடைய 86-வது பிறந்தநாளின்போது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்ற கருணாநிதி விரும்பியதால், அவர் பெயருக்கு மூவரும் வீட்டை மாற்றிக் கொடுத்தனர்.

முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், தினமும் இந்த வீடு பரபரப்புடனேயே இருந்துவந்தது. முதல் மாடியில் அவருடைய அறை உள்ளது. அதன் முன்புறம் வரவேற்பறையும் பிரமாண்ட நூலகமும் இருக்கின்றன. நூலகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில், வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள வரவேற்பறையில் விருந்தினர்களைச் சந்திப்பார் கருணாநிதி. பிறகு, அனைத்துச் சந்திப்புகளையும் முதல் மாடியிலேயே வைத்துக்கொண்டார். மாடிக்குச் செல்லும் படி குறுகலானது. கருணாநிதியைச் சந்திக்க வரும் தலைவர்கள், அதில் சிரமப்பட்டே ஏறிச் செல்வர். பிரமாண்டம் இல்லாத அந்த வீட்டில் இருந்தபடிதான், தமிழக அரசியலை 50 ஆண்டுகளுக்கும்மேல் இயக்கினார் கருணாநிதி. முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் வீல் சேரில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், முதல்முறையாக கோபாலபுரம் இல்லத்தில் லிஃப்ட் வசதி செய்யப்பட்டது.

கருணாநிதி இல்லாத  கோபாலபுரம்!

இப்போது வரவேற்பறை வெறுமையாக இருக்கிறது. அங்கு வருபவர்களை வரவேற்ற கருணாநிதியின் கரகரப்புக் குரலும் இப்போது இல்லை. மாடியில் கருணாநிதி பயன்படுத்திய வீல் சேர், அவருடைய கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எதையும் எடுக்க வேண்டாம் என்று அவர் குடும்பத்தினர் முடிவுசெய்துவிட்டனர். மாடி மூடப்பட்டு அந்தச் சாவி, கருணாநிதியின் மகள் செல்வியிடம் உள்ளது. வாரத்துக்கு ஒரு முறை அந்த அறையைத் திறந்து சுத்தம் செய்கிறார் செல்வி.

கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதி இருந்த வரை காலை 8.30 மணிக்கெல்லாம் கோபாலபுரத்தில் ஆஜராகிவிடுவார். மாடிப்படிக்கு அடியில் உள்ள சிறிய பகுதியில்தான் இவருடைய இருக்கை. கழக உடன்பிறப்புகளுக்கான கடிதத்தை இந்த இடத்தில்தான் டைப் செய்து, கருணாநிதியின் பார்வைக்கு எடுத்துச் செல்வார். இப்போதும் அதே இடத்தில் சண்முகநாதன் அமர்ந்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1968-ம் ஆண்டு அக்டோபர் மாதம் `முரசொலி’யில் முதல் கடிதம் வெளியானது. கடைசிக் கடிதம் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. மொத்தம் 4,600 கடிதங்கள் கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்களை வரிசைப்படுத்தி, புத்தகமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் சண்முகநாதன். தற்போது 9.30 மணிக்கு கோபாலபுரம் வரும் சண்முகநாதன், மாலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

கீழ்த்தளத்தில் உள்ள வரவேற்பறையில் கருணாநிதியின் பெரிய அளவு படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்கு வலது, இடது புறங்களில் அவரின் பெற்றோரான முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாளின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி வாழ்ந்த வீட்டைப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அனுமதி வழங்கப்படுகிறது.

கருணாநிதி மறையும் வரை அவருக்கு கறுப்புப்பூனைப் படைப் பாதுகாப்பு இருந்ததால், வீட்டின் முன்பு காவலர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருக்கும். இப்போது இரண்டு காவலர்கள் மட்டுமே காவலுக்கு இருக்கிறார்கள். கருணாநிதி வீல் சேரில் செல்ல வசதியாக வெளிநாட்டிலிருந்து டொயோட்டா கார் இறக்குமதி செய்யப்பட்டது. ஓய்வில்லாதவரின் பயணத்தில் ஒட்டிக்கொண்ட அந்த காரும் இப்போது தனது பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டு வாயிலில் வருத்தத்துடன் நிற்கிறது.

கீழ்தளத்தில் உள்ள கடைசி அறையில் தயாளு அம்மாள் இப்போது இருக்கிறார். அவருக்கு சமையல் செய்யவும் பணிவிடைகள் செய்யவும் ஒரு பெண் உடன் இருக்கிறார். அவருக்கு தினமும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. கருணாநிதிக்கு உதவியாளராக இருந்த நித்யா, தினமும் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். தினமும் செல்வி வந்து, தயாளு அம்மாளைப் பார்த்துக்கொள்கிறார். ஸ்டாலின் சென்னையில் இருந்தால், காலை கோபாலபுரம் வந்து அப்பாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அறிவாலயம் செல்கிறார். மு.க.தமிழரசும் தயாளு அம்மாளைப் பார்க்க அடிக்கடி வந்து செல்கிறார்.

ஓய்வுக்கு ஓய்வுகொடுத்த கருணாநிதியின் வீடு, இப்போது ஓய்வுபெற்றுவிட்டது!

-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism