Published:Updated:

`இளைய கலைஞர்’ அருள்நிதி! - கரூரைக் கலக்கும் பிறந்தநாள் போஸ்டர்!

அருள்நிதி
அருள்நிதி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒருமுறை தி.மு.க போராட்டம் அறிவித்தபோது, கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் திடலில் போராட்டத்தை நடத்தினார் அருள்நிதி. அப்போதே, ‘நான் அரசியல் குடும்பத்தில் இருப்பவன்’ என்று சொன்னார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு அழகிரி, ஸ்டாலினுக்குப் பிறகு பிறந்தவர் மு.க.தமிழரசு. அழகிரியையும், ஸ்டாலினையும் அரசியலில் ஈடுபடுத்திய கருணாநிதி, தமிழரசுவை அரசியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதிபோலவே, தமிழரசுவின் மகன் அருள்நிதியும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 2010-ம் ஆண்டு வெளியான ‘வம்சம்’ படம் மூலம் கலைத்துறைக்கு அடியெடுத்துவைத்தார். என்றாலும், 2015-ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகரானார். இதுவரை 12 படங்களில் நடித்திருக்கிறார். இவரது பிறந்தநாள் ஜூலை 21-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் சிலர் கரூரில், ‘இளைய கலைஞர்’ என்ற புதிய பட்டத்துடன் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.

போஸ்டர்
போஸ்டர்

இது குறித்து அருள்நிதி ரசிகர்கள் மத்தியில் விசாரித்தபோது, ``உதயநிதி ஸ்டாலின் 2009-ல் `ஆதவன்’ படத்தைத் தயாரித்து, க்ளைமாக்ஸில் ஒரு காட்சியில் மட்டுமே தோன்றினார். அதன் பிறகு 2012-ல்தான் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவானார். ஆனால், அருள்நிதி 2010-ம் ஆண்டிலேயே ஹீரோவாகிவிட்டார். அப்படிப் பார்த்தால் அருள்நிதிதான் சினிமாவில் சீனியர். ஸ்டாலின் மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, கட்சித் தலைவராகி தற்போது முதல்வராகவும் ஆகிவிட்டார். ஸ்டாலினின் புகழ் வெளிச்சத்தின் ஒரு பகுதிதான் உதயநிதிக்கும் கிடைத்தது. அதன்பேரில் அவரும் பிரபலமடைந்துவிட்டார். ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் எல்லாமே என்பதுபோல `மூன்றாம் கலைஞர்’ என்ற அடைமொழியுடன் அவரை அழைக்கிறார்கள். சில அமைச்சர்கள் அவரது படத்தையும் தங்களது சேம்பரில் மாட்டிவைத்திருக்கிறார்கள்.

 `தாத்தா கருணாநிதிக்கு பிடித்தமான தொகுதி’ - சேப்பாக்கத்தைக் கைப்பற்றுகிறார் உதயநிதி

ஆனால், தமிழரசுவுக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல்மீது ஆர்வமில்லாததால், அவருக்கான புகழ் வெளிச்சம் கிடைக்கவில்லை. இருந்தபோதும், சினிமாவில் தனது மகனை நடிக்கவைத்து அருள்நிதிக்கு ஒரு இமேஜைக் கொடுத்துவிட்டார். சினிமாவில் எப்படி உதயநிதிக்கு அருள்நிதி சீனியரோ அதேபோல அரசியலிலும் சீனியர்தான்.

அருள்நிதி
அருள்நிதி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு முறை தி.மு.க போராட்டம் அறிவித்தபோது, கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் திடலில் போராட்டத்தை நடத்தினார் அருள்நிதி. அப்போதே, `நான் அரசியல் குடும்பத்தில் இருப்பவன்’ என்று சொன்னார். அதுமட்டுமன்றி, அருள்நிதியும் கருணாநிதியின் பேரன்களில் ஒருவர்தான். அதனால்தான், ‘இளைய கலைஞர்’ என்ற பட்டத்தைக் கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் கரூர் நண்பர்கள்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு