Published:Updated:

“கான்ட்ராக்ட் வேலை செய்வதெல்லாம் எடப்பாடியின் பினாமிகள்தான்!”

கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
கருணாஸ் ( உ.பாண்டி )

நான்காண்டுகள் கழித்து கொதிக்கும் கருணாஸ்...

“கான்ட்ராக்ட் வேலை செய்வதெல்லாம் எடப்பாடியின் பினாமிகள்தான்!”

நான்காண்டுகள் கழித்து கொதிக்கும் கருணாஸ்...

Published:Updated:
கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
கருணாஸ் ( உ.பாண்டி )

ஆண்டுகள் பல கடந்தும், ‘கூவத்தூர் ரகசியம் என்ன?’ என்பதைத் தெரிந்துகொள்வதில், மக்களுக்குப் பேரார்வம் இருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸ். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய கையோடு, தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளித்த கருணாஸ், அங்கிருந்தும் வெளியேறி மக்கள் நீதி மய்யத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி நிமிடத்தில் எங்கு ஐக்கியமாவார் என்பது அவருக்கே தெரியவில்லை! இப்படி ஊசலாட்டத்தில் இருக்கும் கருணாஸிடம் பேசினோம்...

‘‘ `கூவத்தூர் ரகசியங்களை ஒவ்வொன்றாக உடைப்பேன்’ என்கிறீர்களே... ஜூ.வி-க்காக ஒன்றைச் சொல்லுங்களேன்!’’

‘‘இதில் அப்படியொன்றும் கம்ப சூத்திரம் எல்லாம் இல்லை. அன்றைக்கு கூவத்தூரில் தங்கியிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அத்தனை பேருக்குமே கையூட்டு கொடுக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், கூவத்தூரில் அ.தி.மு.க-வினர் அனைவரையும் ஒரே இடத்தில் தங்கவைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ‘ஓ.பி.எஸ்-ஸை முதல்வராக்க மோடியும் அமித் ஷாவும் முயல்கிறார்கள்; அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பதால்தானே. இந்த உண்மையை ஏன் யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்...’’

‘‘கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணமெல்லாம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதே?’’

‘‘கூவத்தூரிலிருந்து தப்பித்துவந்ததாகப் பேட்டி கொடுத்த சரவணன் எம்.எல்.ஏ., ‘கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மூவருக்கும் 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக’ச் சொல்லியிருந்தார். அவர் எங்கே தப்பித்து வந்தார்... முதல் நாள் வரையிலும் குடித்துவிட்டுப் படுத்துத்தானே கிடந்தார்! கூவத்தூரில் கொடுத்த காசையும் வாங்கிக்கொண்டு, அப்புறம் ஓ.பி.எஸ்-ஸோடு சேர்ந்து அவர் கொடுத்த காசையும் வாங்கிக் கொண்டார்!’’

‘‘உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?’’

‘‘நான் காசு வாங்கவில்லை. ஆனால், தேர்தல் செலவுகளால் எனக்கு ஏற்பட்டிருந்த கடன்களை க்ளியர் செய்துவிடுவதாகவும், அதற்காக முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு நன்கொடை தந்துவிடுவதாகவும் உறுதியளித்தனர்.’’

‘‘சொன்னபடி செய்தார்களா?’’

‘‘சொன்னபடி செய்யவில்லை என்பதுதானே குற்றச்சாட்டே!’’

‘‘முழுவதுமாக ஐந்து வருடங்கள் எம்.எல்.ஏ பதவியில் இருந்துவிட்டு, இப்போது எதிர்ப்பது சுயநலம்தானே?’’

‘‘இது வழக்கமாக எல்லோரும் சொல்லக்கூடியது தான். சினிமாவில் வாய்ப்புகள் இழந்த பிறகு, என்னை நான் வளப்படுத்திக்கொள்ளவோ அல்லது சமுதாயத்தைச் சொல்லி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை. 2016-ல் ஜெயலலிதா என்னை அழைத்து எம்.எல்.ஏ வாய்ப்பு வழங்கினார். அதனால், அம்மாவின் ஆட்சிக்கு நம்மால் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற நன்றிக் கடனுக்காகவே கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் ஆதரவு வழங்கிவந்தேன். ஆனாலும்கூட ‘மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைக்க வேண்டும்’ என்ற என் கோரிக்கையை நிறைவேற்றாதவர்கள், ‘தேவேந்திர குல வேளாளர்’ பெயர் மாற்றத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.’’

“கான்ட்ராக்ட் வேலை செய்வதெல்லாம் எடப்பாடியின் பினாமிகள்தான்!”

‘‘ `குறிப்பிட்ட சமூகத்தை அழித்தொழித்து, மற்றவர்களை வாழவைக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்கிறீர்களே... எந்தச் சமுகத்தை அழிக்கிறார், யாரை வாழவைக்கிறார்?’’

‘‘தமிழ்நாட்டில் மொத்தம் 558 சாதிகள் இருக்கின்றன. இவற்றில் கள்ளர், மறவர், அகமுடையார் என்ற முக்குலத்தோர் சமுதாயத்தின் கட்சிதான் அ.தி.மு.க என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலாவோ அவர் சார்ந்த முக்குலத்தோர் சமு தாயமோ எனக்குத் தேவையில்லை. அதற்கு பதிலாக வன்னியர், கவுண்டர் கட்சியாக மாற்றிக்கொள்கிறேன்’ எனச் செயல்படுகிறார். அதனால்தான், கடைசி நேரத்தில் 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை வன்னியர் களுக்குக் கொடுத்திருக்கிறார்.’’

‘‘உங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் கொடுக்கப்படவில்லை என்பதையெல்லாம் அ.தி.மு.க அரசு மீதான குற்றச்சாட்டாக வைக்கிறீர்களே?’’

‘‘நான் கான்ட்ராக்ட் எடுப்பவனும் இல்லை... எடுத்துக்கொடுத்து அதற்காக கமிஷன் வாங்குபவனும் இல்லை. என் தொகுதியிலேயே ‘ஏ’ கிளாஸ் கான்ட்ராக்டர்கள் 200 பேர் வரை இருக்கிறார்கள். ஆனால், தொகுதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரி, கண்மாய் தூர்வாருதல் பணி என அனைத்தையும் ஈரோட்டிலிருந்து வந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பினாமி கான்ட்ராக்டர்கள்தான் செய்துகொண்டிருக் கிறார்கள். இப்படியெல்லாம் இவர்கள் ஊழல் செய்வதால்தான், புதிய கட்டடத்தைத் திறந்துவைக்க அமைச்சர் போயிருக்கும்போதே கட்டடம் இடிந்துவிழுகிறது.’’

‘‘சசிகலா மீது இத்தனை விசுவாசம் காட்டுகிற உங்களைச் சந்திக்க சசிகலா தரப்பிலிருந்து இன்னும் அழைப்பு வரவில்லையே... ஏன்?’’

‘‘நான் மற்றவர்களுக்காக வாழவில்லை; எனக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நேரில் வந்து சந்திக்கும்படி என்னை சசிகலா அழைப்பதும் அழைக்காததும் அவருடைய விருப்பம். அதற்குப் பின்னே ஆயிரம் காரணங்களும் இருக்கலாம். ‘ஏன் என்னைக் கூப்பிடவில்லை?’ என்று நான் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்ற முன்னோர் வாக்கைக் கடைப்பிடிக்கிறவன். நாளையே, சசிகலா வீட்டு வேலைக்காரர்கள் யாராவது எனக்கு போன் செய்து, ‘அம்மா உங்களைச் சந்திக்க விருப்பப்படுகிறார்’ என்று அழைத்தால், நான் போகப்போகிறேன்... அவ்வளவுதான்! ஆனால், சசிகலா என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism