Published:Updated:

`எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி!' - மீண்டும் அ.தி.மு.க-வில் இணையும் `கானா'

தி.மு.க-வில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியனை அ.தி.மு.க-வில் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

karuppasamy pandian
karuppasamy pandian

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பெறுகின்ற வெற்றி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு உதவியாக அமையும் என்பது அவரது எண்ணம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதனால் தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை அக்கட்சிகளில் இருந்து பிரித்து அ.தி.மு.க-வில் சேர்க்கும் திட்டத்தை முன்வைத்துக் களமிறங்கியிருக்கிறார். குறிப்பாக, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்துவர வியூகம் வகுத்துள்ளார். இதனையொட்டி, மாநிலம் முழுவதும் இதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அ.தி.மு.க-வில் பணியாற்றியவர் `கானா’ எனப்படும் கருப்பசாமி பாண்டியன். நெல்லை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அவர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். ஜெயலலிதா தலைமை பிடிக்காமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விலகியபோது கருப்பசாமி பாண்டியனும் அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார்.

கருப்பசாமி பாண்டியன்
கருப்பசாமி பாண்டியன்

அதன் பின்னர் நெல்லை மாவட்டத்தை மூன்று மாவட்டமாகப் பிரித்து உட்கட்சித் தேர்தல் நடத்தியபோது, `மாவட்டக் கலெக்டராக இருந்த நான் தாசில்தாராகப் பணியாற்ற முடியாது’ எனச் சர்ச்சைக்குரியவிதத்தில் பேசியதால் தி.மு.க தலைமையின் அதிருப்திக்கு உள்ளானார். அதனால் 2015-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டதால் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க-வில் கருப்பசாமி பாண்டியனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையை ஏற்க மறுத்து அவர் அந்தப் பதவியை உதறித் தள்ளினார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வில் இணைந்த போது
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வில் இணைந்த போது

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் தி.மு.க-வில் இணைந்தார். நாங்குநேரி இடைத்தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இடைத்தேர்தலின்போது அவருக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால் தேர்தல் தோல்விக்குப் பின்னர், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணையவிருக்கிறார்.

இது குறித்து கருப்பசாமி பாண்டியனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ``தி.மு.க-வில் அண்ணாச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரை வேண்டா வெறுப்பாகவே கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் நடத்தினார்கள். அவரிடம் அரசியல் அரிச்சுவடியைக் கற்றவர்கள், அவரை ஒதுக்கி வைத்ததால் எதிலும் தலையிடாமல் ஒதுங்கியிருந்தார். அவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதாக அ.தி.மு.க-வில் உறுதியளிக்கப்பட்டதால் அ.தி.மு.க-வில் சேரத் தயாராக இருக்கிறார்’’ என்கிறார்கள்.

கருப்பசாமி பாண்டியன்
கருப்பசாமி பாண்டியன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஏற்பாட்டில், அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான முருகையா பாண்டியன், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் உள்ளிட்ட சிலர் கருப்பசாமி பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய கருப்பசாமி பாண்டியன் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இணைப்பு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது பற்றி தி.மு.க-வினரிடம் கேட்டதற்கு, ``நெல்லை மாவட்ட மக்களிடம் நெருக்கமான தொடர்பு கொண்டவர் `கானா’ அண்ணாச்சி. கட்சியின் வளர்ச்சிக்காகவும் நெளிவு சுளிவுடனும் செயல்படக் கூடியவர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் சமயத்தில் அவர் கட்சியிலிருந்து வெளியேறினால் அது கட்சிக்குப் பெரிய இழப்பாக அமையும்.

`அதிகாரத்தைப் பெறுவதற்கான முதல் வாய்ப்பு இது!'- 12 ஊராட்சி வார்டுகளைக் கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி

கானா அண்ணாச்சி கட்சியில் இருந்தால் தி.மு.க நிர்வாகிகள் பலருடைய பொறுப்புகளுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்பதால் அவரை வெளியேற்றத் திட்டமிட்டு செயல்பட்டார்கள். இது தொடர்பாகக் கட்சி மேலிடத்துக்குத் தொண்டர்கள் தகவல் தெரிவித்தபோதிலும் தலைமை சரியான முடிவை எடுக்கவில்லை. அதனால் அவர் கட்சி மாறவுள்ளார். அவர் வேறு கட்சிக்குச் சென்றால் தி.மு.க-வுக்கு இழப்பாக அமையும்’’ என்றார்கள்.