Published:Updated:

`இந்த வழக்கை சட்டப்படி ஒன்றுமில்லாமல் செய்வேன்!' - சிபிசிஐடி சம்மனால் கொதிக்கும் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், வரும் 15-ம் தேதி கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலத்துக்கு விசாரணைக்கு வரும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தது தொடர்பாக, ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது, கரூர் தாந்தோனிமலை காவல்நிலையத்தில் 6 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றப்பட்டது.

மாவட்ட ஆட்சியரை செந்தில் பாலாஜி சந்தித்தபோது...
மாவட்ட ஆட்சியரை செந்தில் பாலாஜி சந்தித்தபோது...

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், வரும் 15-ம் தேதி கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலத்துக்கு விசாரணைக்கு வரும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சியர் கொடுத்த புகார் - சி.பி.சி.ஐ.டி வசம் மாறும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினர். அப்போது, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையொட்டி, கடந்த மாதம் 12-ம் தேதி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினார்.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

அப்போது, 'கரூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதியான தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்குத் தகவல் கொடுப்பது இல்லை' என, மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, 'ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் தகவல் அறிந்து அவர்களாகவே வந்து கலந்துகொள்கின்றனர். நீங்கள் வேண்டுமானாலும் தானாகக் கலந்துகொள்ளலாம்' என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தன்னிடம் கூறியதாக, செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, "கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் படித்த முட்டாள் போல பேசுகிறார்" என்று காட்டமாக செந்தில் பாலாஜி, பேட்டியளித்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 15 -ம் தேதி, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் கலந்துகொண்ட செந்தில்பாலாஜி, அப்போதும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர் அரசு விழாவிற்கு, தங்களை அழைக்காமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டி பேசிய அவர், "ஏற்கெனவே, தேர்தல் நேரத்தில் 100 தி.மு.க-வினர் கூட்டமாகச் சென்று, தன்னிடமும், தனது குடும்பத்தினரிடமும் பிரச்னை செய்ததாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அந்த ஆதாரத்தை ஆட்சியர் வெளியிடவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியரை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வைப்போம்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கடந்த மாதம் 16-ம் தேதி, கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில், செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்
செந்தில் பாலாஜிக்கு சம்மன்

அந்தப் புகாரையடுத்து, அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது, ஐ.பி.சி 143, 270, 153, 294 (பி), 353, 506 (2) உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின்கீழ், கரூர் தான்தோன்றமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, வேலை வாங்கித் தருவதாகப் பலரிடமும் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த வழக்கு, செந்தில் பாலாஜிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த அந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தான் கைதாகாமல் இருக்க, முன்ஜாமீன் வாங்கியிருந்தார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த, கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி மேற்படி விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செந்தில் பாலாஜியிடம் பேசினோம்.

``ஆட்சியர் ஆளுங்கட்சிக்குச் சார்பாக நடந்து கொள்கிறார். அதைச் சுட்டிக்காட்டியதற்கு, என்மீது வழக்கு கொடுத்திருக்கிறார். நான் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு, ஒன்றுமில்லாமல் ஆக்குவேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு