Published:Updated:

`சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட மோசடி வழக்கு!' -கலக்கத்தில் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பணமோசடி வழக்கு மக்கள் பிரதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

போக்குவரத்துத் துறையில் டிரைவர், நடத்துநர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகப் பதியப்பட்ட மோசடி வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதால், அரவக்குறிச்சித் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கலங்கிப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜி அலுவலகத்தில் ரெய்டு நடந்தபோது...
செந்தில் பாலாஜி அலுவலகத்தில் ரெய்டு நடந்தபோது...

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர், செந்தில் பாலாஜி. இவர், 2011-2015ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 81 நபர்களிடம் ரூ.1.62 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றியதாகவும் வழக்கு பதிவானது.

`செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?' -கரூரைப் பதறவைத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

இதன்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரால் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 12 பேர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மனுவில், `எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆகவே, உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தபோது...
செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தபோது...

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், `செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரித்து, ஆறு மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, தம்பி அசோக்குமார் வீடு, அலுவலகம், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அதனால், முன்ஜாமீன் வாங்கினார் செந்தில் பாலாஜி. ஆனால், அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும் விசாரணைக்காக தினமும் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பணமோசடி வழக்கு மக்கள் பிரதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் செந்தில் பாலாஜியின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது என்கின்றனர் கரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ``சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி சாந்தி, அதிரடியாகத் தீர்ப்பு வழங்குவார். தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றதற்கும் கலவர வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை இழந்ததற்கும் இந்த நீதிபதிதான் காரணம்.

செந்தில் பாலாஜி அலுவலகத்தில் ரெய்டு நடந்தபோது...
செந்தில் பாலாஜி அலுவலகத்தில் ரெய்டு நடந்தபோது...

இப்போது, பணமோசடி வழக்கும் அவர் வசம் போயிருப்பதால், செந்தில் பாலாஜி தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்" என்றார்கள்.

இதற்குப் பதில் கொடுக்கும் கரூர் உடன்பிறப்புகளோ, ``இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய்யான வழக்கு. சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றமற்றவர் என்பதை செந்தில் பாலாஜி நிரூபிப்பார்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு