சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

கருணாநிதி இருந்திருந்தால்...

@துடுப்பதி வெங்கண்ணா, வெங்கமேடு, பெருந்துறை.

‘காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவைக்க தயார்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சொல்கிறாரே?

அமெரிக்கா, எந்த நாட்டின் பிரச்னையையும் தீர்த்துவைத்ததாக வரலாறே கிடையாது. அமெரிக்காவின் கைங்கர்யங்களால், ‘ஆமை புகுந்த வீடும்... அமெரிக்கா புகுந்த நாடும்’ என்று பழமொழியே உருவாகும் அளவுக்கு வரலாறு முழுக்க வேதனைகள்தான் நிறைந்திருக்கின்றன.

@எஸ்.பஷீர்அலி, பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம்.

காஷ்மீருக்கான சிறப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, வரலாற்றுப் பிழையா... வரலாற்றுத் திருத்தமா அல்லது உச்சக்கட்டப் பழிவாங்கல் நடவடிக்கையா?

கழுகார் பதில்கள்!

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக, அந்தப் பிரதேச மக்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு தரப்பட்ட வாக்குறுதிகள்தான் இந்தச் சிறப்புச் சட்டங்கள். ‘அப்போது பிரதமராக இருந்த நேரு, தவறு செய்துவிட்டார். அந்த வரலாற்றுப் பிழையைத் திருத்துகிறோம்’ என்பது தான் இப்போது பி.ஜே.பி அரசு முன்வைக்கும் வாதம். ‘பழிவாங்கல் நடவடிக்கை’ என்று பதறுகிறார்கள் அந்தப் பிரதேசத்து இஸ்லாம் மக்கள். ‘வரலாற்றுத் திருத்தமா, பழிவாங்கல் நடவடிக்கையா?’ என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இதைத் தெரிந்து கொள்வதற்கு இன்னும் 70 ஆண்டுகள்கூட நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!

@சரவணகுமார் சின்னசாமி.

‘தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’. தகப்பன் பதினாறு அடி பம்மினால், பிள்ளை எத்தனை அடி பம்மும்?

542 அடி!

@கி.முருகன், மாப்பிள்ளைக் குப்பம், திருவாரூர் மாவட்டம்.

சட்டமன்றம்‌ இல்லாத யூனியன் பிரதேசம் என்றால், பொருள் என்ன?

கழுகார் பதில்கள்!

அந்தமான்-நிகோபார், லட்சத்தீவுகள், சண்டிகர், டாமன்-டையூ, தாதர் - நாகர்ஹவேலி, டெல்லி, புதுச்சேரி இவையெல்லாம் யூனியன் பிரதேசங்கள். இங்கெல்லாம் லெஃப்டினென்ட் ஆளுநர்/அட்மினிஸ்ட்ரேட்டர் போன்றோர்தான் அதிகாரம் பெற்றவர்கள். டெல்லி மற்றும் புதுச்சேரியில் மட்டும் சட்ட மன்றங்கள் இருக்கின்றன. அதாவது, பெயரளவுக்காவது மாநில அரசு என்ற ஒன்று இருக்கிறது. மற்ற ஐந்திலும் நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் உண்டு. இந்த வரிசையில் இப்போது லடாக் சேர்ந்திருக்கிறது. சட்டமன்றத் துடன்கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

`காஷ்மீர் விவகாரத்தில் இத்தனை வேகம் காட்டியதற்குக் காரணமே, வேகமெடுத்திருக்கும் பொருளாதார சரிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் பி.ஜே.பி அரசு திணறுவதை மறைக்கத்தான்’ என்கிற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?

பி.ஜே.பி நினைத்திருந்தால், நாடாளுமன்றத்தைக் கூட்டி நிதானமாகவே செய்து முடித்திருக்கக்கூடிய ஒன்றுதான் இது. அப்படியிருக்க, அமர்நாத் யாத்திரை ரத்து, எல்லை தாண்டிய பாகிஸ்தானியர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு, காஷ்மீரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம் என்றெல்லாம் பரபரப்பையும் போர்ச்சூழலையும் உருவாக்கியதுதான்... சந்தேகத்தைக் கிளறச்செய்கிறது. ‘பொருளாதார சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் பி.ஜே.பி-யின் எம்.எல்.ஏ வகையாகச் சிக்கியதால் கேள்விக்குள்ளாகியிருக்கும் கட்சியின் இமேஜ் போன்ற விஷயங்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பத்தான் இத்தனை அதிரடி காட்டப்பட்டதோ?’ என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

@லலிதா கணபதி, மடிப்பாக்கம்.

பங்குச்சந்தை, பாதாளத்துக்குச் சரிந்துகொண்டிருக்கிறதே?

இன்னுமா அந்தக் கவலையை நீங்கள் மறக்கவில்லை!

@ஸ்ரீ.பூவராகவன், படியூர்

காஷ்மீரை மூன்று குடும்பங்கள் தொடர்ந்து கொள்ளையடித்துவந்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியிருக்கிறாரே?

அதில் ஒரு குடும்பத்துடன்தான் சமீபகாலம் வரை இவரும் கூட்டாளியாக இருந்தார் என்பதை வசதியாக மறைத்து விட்டாரே!

@பாவனா ரகு.

தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கொலையுண்டதால், ‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டவிட்டது’ என்று மு.க.ஸ்டாலின் பேசுவது சரியில்லையே?

சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பது தனிக்கதை. தி.மு.க-வின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை செய்யப் பட்டிருப்பது, தி.மு.க-வின் உள்கட்சி மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பதவி வெறி பிடித்தவர்கள் இப்படி மோதிக்கொண்டு உயிர் பறிப்பது காலகாலமாகத் தொடர்கிறது. இது அத்தனை கட்சிகளிலும்தான் இருக்கிறது. என்றாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முன்னுதாரணமாக தி.மு.க-வில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையல்லவா முதலில் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும்!

@இரா.ரமேஷ்பாபு, விருத்தாசலம்

பா.ம.க-வில் மீண்டும் இணைந்துள்ளாரே தீரன்?

தீரன் - அதிகாரம் ரெண்டு.

@ராம்குமார்.

ரெளடி, இறைவனை தரிசிக்கக் கூடாதா?

கழுகார் பதில்கள்!

ஒரு திருடரே ‘திருமங்கை ஆழ்வார்’ என்று உருவெடுத்த பூமி இது. எனவே, அப்படியெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இங்கே கிடையாது. அப்படி எந்த இறைவனும் சொல்லிவைக்கவுமில்லை. ஆனால், ஒரு ரெளடி, வி.வி.ஐ.பி வரிசையில் இறைவனை தரிசித்ததுதான் பிரச்னை. நாடு முழுக்க இருக்கும் கோயில்களில் தினம் தினம் லட்சக்கணக்கில் திரள்கிறார்கள். இவர்களில் ரெளடிகளும்தான் அடக் கம். அவர்களையெல்லாமா கண்டுகொள்கிறார்கள்?

@இல.கண்ணன், நங்கவள்ளி.

கருணாநிதி இருந்திருந்தால், அவரின் குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தது பற்றி என்ன சொல்லிருப்பார்?

‘கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில், கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக’ என்று வசனம் எழுதியவன்தான் இந்தக் கருணாநிதி. வரதரின் தாசரான ‘ராமானுஜர்’ பற்றிய காவியத்தை, தொலைக்காட்சித் தொடராக உலாவரச் செய்தவனும் அடியேன்தான். ‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி’ என்று அய்யா பெரியார் சொல்லியிருப்பதை எப்போதும் மனதில் ஏந்தியிருப்பவனும் நானே. என் குடும்பத்தார் அத்திவரதரை வணங்கியது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அவர்கள் அப்படி வணங்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.’

@வாசு, குறிஞ்சிப்பாடி.

‘எடப்பாடி ஆட்சியில் தவறு செய்பவர்களின் கை உடையும்’ என்கிறாரே பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

அப்படி எதுவும் தெரியவில்லையே!

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

‘75 வயதுக்குமேல் உள்ளவர்களை எந்தப் பதவியிலும் அமர்த்த வேண்டாம்’ என்பது பி.ஜே.பி-யின் ‘கொள்கை முடிவு’ என்று சொல்லப்பட்ட சூழலில், 77 வயது எடியூரப்பா கர்நாடக முதல்வர் ஆக்கப்பட்டுள்ளாரே?

`கட்சிக்காக, தான் உருவாக்கிய கொள்கைகளையே உறுதியாகக் கடைப் பிடிக்க முடியாத பி.ஜே.பி, அரசாங்கத்தின் கொள்கைளை எந்த அளவுக்குக் கடைப் பிடிக்கும்?’ என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

@கே.என்.ஆர். கிருஷ்ணன், சென்னை-93.

கோயில் நிலங்களைக் காப்பாற்ற முடியாத அளவுக்கா தமிழக அறநிலையத்துறை சுணங்கிக் கிடக்கிறது?

கோயில் நிலங்களை விட்டுத்தள்ளுங்கள். கோயிலையும் அங்கு இருக்கும் சிலைகளை யுமே முதலில் இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆண்டார்குப்பம் கிராமத்தில் இருக்கிறது பாலசுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கே நடந்துவரும் கொள்ளைகள், அறநிலையத்துறை கொள்ளைகள் அனைத்துக்கும் சிகரம். அர்ச்சனைச் சீட்டு தொடங்கி அத்தனை யிலும் கொள்ளையோ கொள்ளை! கடந்த 2017-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, பாலசுப்பிரமணிய சுவாமியின் பெயரிலேயே புதிதாக ஒரு வங்கிக்கணக்கைத் தொடக்கி, அதில் ஒன்றே முக்கால் கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கோயில் ஊழியர்களில் சிலர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டுப்போட்டு காலகாலமாகக் கொள்ளையடித்துள்ளனர். புதிதாகப் பதவியேற்ற செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததும், அவரை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டன என்பதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!