அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

பெண்களின் துன்பங்கள், ‘கதையல்ல நிஜம்’ என்பதால்தான்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கும் ‘ஜீரோ’ வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

எதிர்பார்ப்பு வேறு... யதார்த்தம் வேறு என்பதை அவரே தற்போது நன்றாக உணர்ந்துவிட்டார். ‘ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகும் அதாவது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 3-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும்’ என்று அறிவித்திருப்பதே அதற்கு சாட்சி.

@அ.குணசேகரன், புவனகிரி, கடலூர் மாவட்டம்.

தமிழகம், சமூகப் பரவல் என்கிற மூன்றாவது நிலைக்குச் செல்லாமல் தப்பிவிடுமா?

மூன்றாம் நிலை என்பது எப்போதோ ஆரம்பமாகிவிட்டது என்பதே அரசுத் துறை அதிகாரிகள் பலரின் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ கருத்தாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இது, இயற்கையின் எதிர்தாக்குதல். இதில் மூடி மறைக்கும் அரசியல், கொரோனாவைவிட பெரும் புதிரே!

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

கொரோனா காரணமாக அரசியல், சாதி, மதத் தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவுநாள்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டுமே மரியாதை செய்தனர். இதையே ஆண்டு முழுக்க நடைமுறைப்படுத்திவிட்டால், தேவையற்ற அரசியல் தவிர்க்கப்படும்தானே?

அடிமடியிலேயே கைவைக்கப் பார்க்கிறீர்களே!

@திருப்பூர் அர்ஜுனன் ஜி, அவிநாசி.

‘கொரோனா பற்றி அறிவுரை கூறுவதற்கு எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா?’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே?

தினம் தினம் வந்து பத்திரிகையாளர்கள் முன்பாக நின்றுகொண்டு, ‘இரண்டு நாளில் சரியாகிவிடும்... மூன்று நாளில் சரியாகிவிடும்’ என்றெல்லாம் சொல்வதற்கு ‘டாக்டர்’ பழனிசாமிக்கு மட்டுமே உரிமை உண்டு.

@இரா.கோதண்டராமன், சென்னை-83.

புராணக் கதைகளில்கூட பெண்கள் மிகவும் துன்பப்படுவதாகத்தானே இருக்கிறது. இது ஏன்?

பெண்களின் துன்பங்கள், ‘கதையல்ல நிஜம்’ என்பதால்தான்!

@உ.மு.ந.ராசன் கலாமணி, கோபிசெட்டிபாளையம்.

சுங்கக்கட்டண வசூல் தற்போதைய சூழலில் தேவைதானா?

இந்தக் கட்டணத்தை வசூல் செய்வதற்கான உரிமையைப் பெற்றிருப்பவர்களில் பலரும், பல வகை களில் ‘பெரிய பெரிய இடங்களுடன்’ தொடர்பில் இருப்பவர்கள். இத்தனை நாள்களாக அவர்களுக்கெல்லாம் ‘கை அரிக்காமல்’ இருந்ததே ஆச்சர்யம்தான்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

@பெ.வேலுசாமி, அய்யனார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம்.

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் எல்லாம் ஒரு மாதமாகச் செயல்படவில்லை. ஊரடங்கு காரணமாக நோய்களும் குறைந்துவிட்டனவா?

தலைவலி, கால்வலி போன்றவற்றின் காரணமாகவே உயிர்போகும் அளவுக்குப் பயப்படுவோம். இப்போது, ‘உயிரே போய்விடும்’ என ‘கொரோனா’ உண்மையிலேயே பயமுறுத்துவதால் கால்வலி, தலைவலி போன்றவையெல்லாம் போன இடம் தெரியவில்லை. உயிர்வலி, ரொம்பப் பெரியதுதானே!

@பி.கே.கே.முரளிதரன், திண்டுக்கல்.

இந்த ஊரடங்கில் குடிநோயாளிகள் ஓரளவுக்கு குணமடைந்து இருப்பார்கள். எனவே, டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிவிடலாம்தானே?

‘கொரோனா’ அதற்குரிய வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வர சமயம் பார்த்துக்கொண்டிருந்த பலரும், தற்போது தானாகவே வெளியேறிக் கொண்டுள்ளனர். குடித்தே குடும்பத்தை அழித்துக்கொண்டிருந்த பலரும், அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத சூழலில் குடியை மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மீளவே முடியாது என்கிற நிலைக்குப் போய்விட்ட குடிநோயாளிகள்கூட மீளத் துடிக்கிறார்கள்... மீண்டுவருகிறார்கள். ‘இத்தனை காலம் மது இல்லாத இந்தச் சொர்க்கம் போன்ற நாள்களைத் தவறவிட்டுவிட்டோமே!’ என்று பல இடங்களில் அவர்களே சொல்வதைக் கேட்க முடிகிறது. ஆக, குடிப்பழக்கத்திலிருந்து பெரும்பாலானோரை ‘கொடூர கொரோனா’வே மீட்டெடுக்கும்போது, நிரந்தரமாக மீட்டெடுக்கும் வேலையை ‘கருணையுள்ள அரசு’ கையிலெடுப்பதுதான் சரியாக இருக்கும்!

@மா.மீனாட்சிசுந்தரம், மதுரை.

ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய்க்குமேல் வாங்கும் பெரும் நடிகர்கள், கொரோனா நிதிக்கு அள்ளிக் கொடுக்காதது ஏன்?

கொடை கொடுப்பது அவரவர் விருப்பம். அது இருக்கட்டும், திரை நட்சத்திரங்களை நோக்கி மட்டுமே இதுபோன்ற கேள்விகள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எழுப்பப்படுகின்றன. பெரும் தொழிலதிபர்கள், கோடிக்கோடியாகச் சம்பாதிக்கும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்... அவ்வளவு ஏன், கொள்ளை கொள்ளையாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் கட்சிக்காரர்கள், கட்சிகள் இவர்களை நோக்கியெல்லாம் கேட்கப்படுவதே இல்லையே!

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

சிறிய மாவட்டமான நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகியுள்ளது. ஆனால், பெரிய மாவட்டமான தஞ்சாவூரிலிருந்து ‘கும்பகோணம் மாவட்டம்’ என்கிற நீண்டநாள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லையே?

தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக ‘காவிரிகொண்டான்’, ‘மீத்தேன் வென்றான்’, ‘டெல்டா நாயகன்’ இப்படி ஏதாவது ஒரு பெயரில் உங்கள் பகுதியிலும் பாராட்டு விழாவுக்கு விரைவாக ஏற்பாடு செய்யுங்கள்.

பின்குறிப்பு: விழாவில் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

@வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

‘சமூக விலகல் 2022 வரை’ என்கிறார்களே?

‘வேறு வழியில்லை’ என்றால், ‘இல்லை’தான். ஒருகாலத்தில் அம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில், மரணங்கள் கொத்துக் கொத்தாக நிகழ்ந்தன. அப்போது, ‘சமூக விலகல்’ மட்டுமே தீர்வாக முன்வைக்கப்பட்டது. அதனால்தான் முதற்கட்டமாக அதை அவர்கள் வென்றார்கள்... அதைத் தொடர்ந்தும் நின்றார்கள். இன்று வரை நாம் உயிர்த்திருப்பதற்கும் அதுதான் காரணமே! விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என நம்புவோம்!

திருமாவளவன்
திருமாவளவன்

@ப்யூனி பிரதர்ஸ்.

‘ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதன் மூலமாக சமூகத்தொற்று ஏற்பட்டால் மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளாரே?

உண்மைதான். அதேபோல் இவர் போன்ற அரசியல் தலைவர்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது. ஊரடங்கை மீறி வீணே வெளியில் திரிபவர்களில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் நிச்சயமாக இருக்கத்தானே செய்கிறார்கள். உள்ளூர் அளவில் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருடன் சேர்ந்து இதையெல்லாம் ஒழுங்குபடுத்தினாலே பெருமளவு பிரச்னைகள் குறைந்துவிடுமே!

@ராம்குமார்.

அத்தனை ஊடகங்களும் ஓயாமல் படம்பிடித்துக் காட்டியும், மக்கள் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லையே?

ம்... வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவிலேயே அப்படித்தான் இருக்கிறார்கள். இன்னமும்கூட அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணியாமல்தான் நடமாடிக்கொண்டுள்ளார். ‘ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஊர்கூடி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உலகளவில் கொரோனா பலியில் முதல் இடத்தைப் பிடித்துவிட்ட பிறகும்கூட அவர்கள் மாறவில்லையே!

@கார்த்திக் திவ்யா, அரியலூர்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) என்பதை முதன்முதலாகக் கண்டுபிடித்து எச்சரித்த அந்த மருத்துவரின் குரல், கடவுளின் குரல்தானே?

இன்னமும்கூட மிச்சமிருக்கும் மனிதத்தின் குரல்!

@ஜிஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

கொரோனோ விஷயத்தில் அரசு தேவையற்ற பயத்தைக் காட்டுகிறதோ?

ம்ஹூம்... போதுமான அளவுக்கு இன்னும் பயம்காட்டவில்லை என்பதுதான் உண்மை.

@இல்.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘மருத்துவர்களை கடவுளாகப் பார்க்க வேண்டும்’ என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

சகமனிதர்களாகப் பார்த்தாலே போதுமானது!

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

‘இஸ்லாமியர்களை ஒடுக்க, தமிழக அரசை பா.ஜ.க பயன்படுத்திக்கொண்டது’ என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து?

அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இப்போதுகூடத்தான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் மொத்தமாகப் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும்கூட, ‘ஊடகங்களுக்கு எதிரான பா.ஜ.க-வின் சதி’ என்று சொன்னாலும் சொல்வார்களோ!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!