Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கை... மூடநம்பிக்கைதான்.

கழுகார் பதில்கள்

எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கை... மூடநம்பிக்கைதான்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@ ‘திருப்பூர்’ அர்ஜுனன். ஜி.அவினாசி.

சுகாதாரத்துறையின் புதிய செயலாளராக, பழைய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறாரே..?

ஆக, ‘கொரோனா குளறுபடிகள்’ என்று இத்தனை நாள்களாக எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மைகளை உணர்ந்துவிட்டது அரசு. இனிமேலாவது ‘ரீல் ரீலாக’ச் சுற்றாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

‘அதிக மதிப்பெண் வழங்குகிறோம்’ என்று சொல்லி 10-ம் வகுப்பு மாணவர்களிடம் 50,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்களாமே..?

கொரோனாவிடமே லஞ்சம் வாங்கும் வித்தைக்காரர் களாயிற்றே!

@ஆர்.ஜி.

ரேஷன் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு 13.25 கோடி மாஸ்க்குகள் வழங்கப்போகிறார்கள். ஏற்கெனவே, ஏகப்பட்ட கொள்ளை நடக்கிறது. இப்போது, ‘முகமூடிக் கொள்ளை’ நடக்கும்தானே?

அட, ஜூவி கவர் ஸ்டோரிக்கான தலைப்பு. அசத்துகிறீர்களே... ஆர்.ஜி!

@ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டம்.

உண்மையிலேயே சமூகப் பரவல் என்றால் என்ன?

ஒருவர்... கவுன்சிலர், எம்.எல்.ஏ, அமைச்சர், முதலமைச்சர் என ஏதாவது ஒரு பதவிக்கு வந்துவிடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் சார்ந்த உறவினர்களில் பலரும் ஒவ்வொருவராக அரசாங்கத்தின் பல்வேறு பதவிகளில் அமர்வார்கள்; அத்தனை அரசாங்க கான்ட்ராக்டுகளையும் அள்ளுவார்கள்; கமிஷன் வாங்கும் வேலையையும் கையிலெடுப் பார்கள்; பினாமிகளாகப் பிறவியெடுப்பார்கள். இது... ஒன்றுவிட்ட சித்தப்பா, ரெண்டுவிட்ட பெரியப்பா, மூன்றுவிட்ட சின்ன அத்தை, நான்குவிட்ட பெரிய மாமா என்று அந்தச் சமூகம் மொத்தமும் பரவ ஆரம்பிக்கும். இதுதான் `சமூகப் பரவல்.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@ ‘வடபழனி’ ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.

‘சமூகப் பரவல் இல்லை’ என்று திட்டவட்டமாக முதல்வர் அடித்துச் சொல்கிறாரே..?

மூன்று ஆண்டுகள்தானே முடிந்திருக்கிறது. ‘சமூகத்தில்’ இன்னமும் கொஞ்சம் பேர் மிச்சமிருக்கலாம். அதைத்தான் ‘சமூகம்’ இப்படி அடக்க ஒடுக்கமாகச் சொல்கிறதோ... என்னவோ!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்

முன்னாள் பிரதமர் தேவ கவுடா போட்டியின்றி ராஜ்ய சபாவுக்குத் தேர்வாகி அங்கே போய் என்ன சாதித்துவிடப் போகிறார்?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... ஏற்கெனவே மகன்கள், பேரன்கள் என்று ஏகப்பட்ட பேரைக் கரையேற்றிச் சாதித்திருக்கிறார். இன்னும் கொள்ளுப்பேரன், பேத்திகளெல்லாம் (சமூக பாக்கி) இருக்கிறார்களே!

@மு.மதிவாணன், அச்சல்வாடி, அரூர்.

‘சினிமாவில் நடிகர் வடிவேலுவைக் கடித்த நாய்கள் செத்ததைப்போல, கொரோனா நம்மைக் கண்டு அஞ்சி ஓடும்’ என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?

முடியல. இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து பயந்து ஊரைவிட்டே மக்கள் ஓட ஆரம்பித்திருக்கும் சூழலிலும் ‘காமெடி’ என்கிற பெயரில் வாந்தியெடுப்பதைத் தாங்க முடியல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@டி.சகுந்தலா, பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்

இந்து மதத்திலிருக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அளவுக்கு இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களிலிருக்கும் மூடநம்பிக்கைளை எதிர்ப்பதில்லையே சிலர்?

எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கை... மூடநம்பிக்கைதான். இதில் குறிப்பிட்ட மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை மட்டும் எதிர்ப்பவர்களுக்கு அதுவே முதலீடாகக்கூட இருக்கக்கூடும். அதேசமயம், ‘அந்த மதத்திலிருக்கும் மூடநம்பிக்கைகளை ஏன் எதிர்ப்பதில்லை’ என்று கேட்பதன் மூலமாகச் சொந்த மதத்திலிருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு நாம் உயிரூட்டிவிடக் கூடாது என்பதும் முக்கியம். அத்தனை மதங்களிலும் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அனைவருமே கைகோத்து எதிர்ப்புக் காட்ட வேண்டும். இத்தகைய மூடநம்பிக்கைகள் தான் பலரையும் முட்டாள்களாக்கி, பலரையும் சிலருக்கு அடிமையாக மாற்றிவைத்துள்ளன. குறிப்பாக, பெண்களையும் ஏழைகளையும் அடிமைப்படுத்துவதற்கு மூடநம்பிக்கைகள்தான் பலமான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படு கின்றன, காலம்காலமாக!

@ஆர்.சுப்ரமணியன், சென்னை.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் அந்தமான் சிறைக்கு அனுப்பிய ஆங்கிலேயர்கள், காந்தி, நேரு போன்றவர்களை ஏன் அங்கே அனுப்பவில்லை?

தங்கள் கண்களுக்குத் ‘தீவிரவாதிகள்’ என்று தோன்றியவர்களையெல்லாம் கடல் கடந்த அந்தச் சிறைக்கு அனுப்பினார்கள். ‘மிதவாதிகள்’ என்று தோன்றியவர்களை உள்ளூரிலேயே வைத்துக்கொண்டார்கள். நேதாஜி என்கிற வீரமகனை இந்தியாவுக்குள்ளேயே இருக்கவிட வில்லை. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற வீராதி வீரமகன்களை இந்த உலகத்திலேயே இருக்கவிடவில்லை.

@நேக்கு, சென்னை-116.

‘விட்டுக்கொடுத்துக் கெட்டுப்போகா அரசியல் நிகழ்வு’ ஒன்றைச் சொல்லுங்களேன்?

‘அரசியல்’ என்று சுருக்காமலிருந்தால் ஆயிரம் சொல்ல முடியும்.

@ஆனந்தி தேவராஜன், கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.

கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்ததும் தங்கம் விலை குறையுமா?

‘ஒரு முடிவு’ தெரிந்ததும் சொல்கிறேன்.

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு, கர்நாடக மாநிலம்.

‘எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை வசை பாடாத கட்சியில் இணையப்போகிறேன்’ என்கிறாரே தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.பி.ராமலிங்கம்?

‘எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை விடப் பசையான கட்சி’ என்று சொன்னது உங்கள் காதில் தவறாக விழுந்திருக்கக்கூடும். எதற்கும் திரும்பத் திரும்பக் கேட்டுப் பாருங்கள், காதிலிருந்து ரத்தம் வழியும்வரை.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

முன்னாள் எம்.பி-யான சசிகலா புஷ்பா வழக்கில், ‘மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட சந்திப்புகளைப் பற்றியும் பொதுமக்கள் அறிந்துகொள்ள உரிமை உண்டு’ என நீதிமன்றம் ‌தெரிவித்துள்ளதே..?

ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளே. இவர்களுக்கும் இது பொருந்தும் என்றால், நல்ல தீர்ப்புதான்!

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

நீதி விசாரணைக்கும், நீதிமன்ற விசாரணைக்கும் என்ன வித்தியாசம்?

அங்கே வக்கீல் ‘வாய்தா’ வாங்குவார். இங்கே நீதிபதியே ‘வாய்தா’ வாங்குவார்!

கழுகார் பதில்கள்

@மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

கேரளாவில் உணவுப்பொருளில் வெடி வைத்து, கர்ப்பிணி யானையைக் கொன்றிருக்கிறார்களே..?

‘பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியை அது சாப்பிட்டுவிட்டது’ என்கிறார்கள். ‘தேவை’ என்று வந்துவிட்டால் அம்மா-அப்பா, அண்ணன்-தம்பி, மனைவி-கணவன், மாமன்-மச்சான், மகன்-மகள், மருமகன்-மருமகள், தாத்தா-பாட்டி இப்படிச் சொந்தங்களையே வெட்டிச் சாய்ப்பவர்களுக்கு பன்றி என்ன... யானை என்ன!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

@வி.எஸ். ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

`மதுக்கடைகளை மூடி நான்கு ஆண்டுகளாகச் சாதிக்கும் பீகார்போல் நம்மாலும் சாதிக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாரே பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன்?

இதை நேரடியாக ‘பெரியண்ணன்’ மோடியிடம் இவரே சொன்னால், அப்படியே செயல்படுத்தி விடுவாரே ‘சின்னண்ணன்’ எடப்பாடி. நீட், ஜி.எஸ்.டி இப்படி எத்தனையோ விஷயங்களைக் கேள்வியே இல்லாமல் ஏற்கெனவே அமல்படுத்திய பழுத்த அனுபவம் இருக்கிறதே சின்னண்ணனுக்கு!

@ரூபன்.

‘தமிழில் உச்சரிப்பதுபோலவேதான் ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும்’ என்று மாற்றிவிட்டார்களே?

மிக மிகச் சரியான முடிவு. அப்போதுதான் எந்த மொழி பேசுபவரும் கிட்டத்தட்டச் சரியாக உச்சரிக்க முடியும்... சரியான ‘வழிகாட்டல்’களையும் பெற முடியும். ஆனால், வழக்கம்போல இதில் சொதப்பல்களுக்கும் பஞ்சமில்லை. வேலூரை ‘வெல்லூர்’ (Vellore) என்று ஆங்கிலத்தில் அழைத்தனர். தற்போது, ‘வீலூர்’ (Veeloor) என்று மாற்றிவிட்டனர். இந்தக் கொடுமைகள் ஒருபுறமிருக்க... தமிழ்நாடு என்பதில் ‘ழ்’ க்கு ‘Z’ போட்டு எழுத வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டனர் சிலர். ஏற்கெனவே ‘டமில் நாடு’ (Tamil nadu) என்று கிட்டத்தட்ட உச்சரித்தனர். இப்போது, ‘டமிஸ் நாடு’ (Tamizh nadu) என்று அழைக்கத் துடிக்கிறார்கள். ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னதற்காக நீலகண்ட சாஸ்திரிகளை, ‘முட்டாள்’ என்று சாடித் தள்ளினார் பாரதி. இங்கே எல்லோரும் சேர்ந்து வேகமாகக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

தமிழ் உச்சரிப்பு தொடர்பாக ஜூ.வி 15/01/2020 தேதியிட்ட இதழில் வெளியான அலசல் கட்டுரையும் கொஞ்சம் படியுங்கள்:

https://qrgo.page.link/eW135

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism