பிரீமியம் ஸ்டோரி

@தர்மா, சென்னை.

‘தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அத்திவரதர்போல் மிக ஸ்டைலாக வந்து இங்கே மாற்றத்தைக் கொண்டுவருவார்’ என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறுவதை நம்பலாமா?

2059 வரை காத்திருங்கள்!

@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை, சென்னை-117.

கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகினால், அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா?

‘இருந்த’போதே ‘இல்லை’யே!

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் உள்ளதா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... பெரியார் சிலைக்கும்கூட காவி வண்ணத்தைத் தீட்டுவதற்கு அவர்கள் தயார்தான். மேலிருந்து ஓர் உத்தரவை சட்டெனப் போடச் சொல்லுங்கள்!

@பி.அசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.

ஒரு வழக்கு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதுதொடர்பாக ஜனாதிபதிக்கு மனு கொடுத்தால், அவரால் நீதிமன்றத்துக்கு உத்தரவிட முடியுமா?

நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியாது. குற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக் கவோ அல்லது மன்னிக்கவோ மட்டும்தான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக் கிறது. அதையும் சூழலைப் பொறுத்துதான் அவர் முடிவுசெய்வார்.

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

இப்போது நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்க்கும்போது, எந்த மதத்துக்கும் அறிவுரை சொல்லவோ, ஆறுதல் சொல்லவோ ஆண்டவன் இல்லைபோல் தெரிகிறதே?

‘இறைவன் இருக்கின்றானா...

மனிதன் கேட்கிறான்.

மனிதன் இருக்கின்றானா...

இறைவன் கேட்கிறான்’

என்ற பாடல்தான் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களால் நன்மைகள் கிடைத்திருக்கின்றனவா?

தற்காலிக நன்மைகள் கிடைத்துள்ளன என்று சொல்லலாம். ஸ்டெர்லைட் ஆலை மூடல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து... இப்படிப் பட்டியலிடலாம். இவையெல்லாம் மக்கள் திரள் போராட்டங்களால் மட்டுமல்ல, வாக்கு வங்கி அரசியலை மனதில்கொண்டு ஆளுங்கட்சியின் உள்குத்துத் திட்டங் களாலும் சாத்தியமானவையே! அதேசமயம், இவையெல்லாம் தேர்தலுக்குப் பிறகு என்னவாகும் என்பதற்கு உத்தரவாதமில்லை!

@துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.

‘நடிகர் விஜய், நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று ஓர் அமைச்சர் கூறுகிறார். அதற்கு, ‘எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மாடு மேய்த்துக்கொண்டிருந்துவிட்டா அரசியலுக்கு வந்தார்கள்?’ என்று சமூக ஊடகங்களில் மக்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பாவம்தானே அந்தத் தலைவர்கள்?

இவர்போன்றோரையெல்லாம் அமைச்சர் அளவுக்கு வளர்த்துவிட்ட பாவத்துக்கு, இந்த பாரத்தையெல்லாம் சுமந்துதானே ஆகவேண்டும்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

‘மதத்துக்கும் தேசபக்திக்கும்’ தொடர்பில்லை என்ற கருத்து சரியா?

நிச்சயமாக. மதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்சிகள் நடக்கும் நாடுகளில்தான் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாகத் தலைவிரித்தாடுகின்றன.

லட்சுமிகாந்தம், வேலூர், நாமக்கல் மாவட்டம்.

இனி, 21 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்பனை இல்லையாமே!

இனி, சிகரெட்டே இல்லை என்கிற நிலையை உருவாக்குவதுதான் இதைவிடச் சிறந்தது.

@முத்துக்கிருஷ்ணன், தாராபடவேடு, வேலூர்-7.

லஞ்சப் புகாரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் வேலூர் துணை ஆட்சியர் தினகரன், தாசில்தாராக இருந்தபோது லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது பதவி உயர்வு பெற்றது எப்படி?

எல்லாம் ‘அரசு அதிகாரிகள்’ என்கிற ஒரே சாதிதான். லஞ்சம் கொடுத்து தேர்வு எழுதி வெற்றிபெற்ற வர்கள் நிறைய பேர் இங்கே அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள். ‘என் இனமடா நீ’ என்று அவர்களில் ஒருவர் காப்பாற்றியிருப்பார்.

கழுகார் பதில்கள்

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

சி.ஏ.ஏ பற்றி ரஜினிகாந்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் சொல்லித்தான் புரியவைக்க வேண்டியுள்ளது என்றால், சாதாரண மக்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

மோடியும் அமித் ஷாவும் புரியவைப்பார்கள்.

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

கர்நாடகாவில் லிங்காயத் மடம் ஒன்றின் மடாதிபதியாக 33 வயது முஸ்லிம் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது?

‘சாதி, மத பேதமில்லை. அனைவருமே சிவனின் பிள்ளைகள்’ என்று சொல்லும் வீரசைவப் பிரிவைச் சேர்ந்ததுதான் இந்த லிங்காயத் மடம் என்பதால், இதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தனித்தே இயங்கும் இந்த வீரசைவப் பிரிவை, தனி மதமாகவே அங்கீகரித்துள்ளது கர்நாடக அரசு. இவர்கள், லிங்கத்தை மட்டுமே வழிபடுவார்கள். பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் நம் புதுக்கோட்டை ‘மெய்வழிச்சாலை’போலத்தான் இந்த வீரசைவமும். ஆனால், இவர்களிடையே தொழில் அடிப்படையிலான சாதிப் பிரிவுகள் காலகாலமாக இருக்கத்தான் செய்கின்றன.

கழுகார் பதில்கள்

@டாரத்தி சுகுமாரன்.

‘வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த, குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்’ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்துகிறாரே?

உண்மைதான். நிச்சயம் கையில் எடுக்க வேண்டிய விஷயமே! ஆனால், அத்தனை அரசியல், சாதி, மதக் கட்சித் தலைவர்களும் வெறுப்பை மட்டும் உமிழ்பவர்களைத்தானே கூடவே வைத்துக்கொண்டு சுழல்கிறார்கள். தன்னிடம் இருக்கும் ‘வெறி’யர்களை டாக்டர் ராமதாஸ் முதலில் வெளியேற்றினால், அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இதை மட்டும் அவர் செய்தால், தைலாபுரத்துக்குச் சென்று அவருக்கு மாலை, மரியாதையே செய்யலாம்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பதால் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு ஒரு வருடம் மட்டுமே இருக்கும் சூழலில், அ.தி.மு.க-வைவிட தி.மு.க-வுக்குத்தானே அதிக தர்மசங்கடம்?

இரண்டு பேருக்குமே ‘தர்ம’சங்கடம்தான்.

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

`கூகுளில் எளிய முதல்வர் எனத் தேடினால் முதல் அமைச்சர் பழனிசாமி பெயர்தான் வரும்’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளாரே?

இல்லையே... தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் தேடினாலும் வரவில்லையே! ஒரேயொரு தகரப்பெட்டி, நான்கைந்து உடைகள், வாடகை வீடு என வாழ்ந்த திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பெயர்தான் வருகிறது!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘யாரும் கள்ளநோட்டு அடிக்க முடியாதபடி 2,000 ரூபாயை உருவாக்கியிருக்கிறோம்’ என்றுதான் 2016-ம் ஆண்டில் அந்த நோட்டை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இப்போது, தமிழகத்தில் மட்டும் 2018-ம் ஆண்டு 2.51 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளதாக ஒரு செய்தி கூறுகிறதே?

களவாணி பெரியவனா... காப்பான் பெரியவனா என்பார்கள். களவாணிகளும் காப்பான்களும் ஒட்டி உறவாடும் நாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கடக்க வேண்டியதுதான். அதைவிடுத்து கவலைப்பட ஆரம்பித்தால், நமக்குத்தான் சுகர், பி.பி எல்லாம் வரும்.

@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி-75.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, தாலிபான் பயங்கரவாதிகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் போட்டுள்ளதே அமெரிக்கா?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் அமெரிக்காவின் `பிள்ளை விளையாட்டு’களில் இதுவும் ஒன்று. ஒசாமா பின்லேடனை வளர்த்துவிட்டு, பிறகு அவர்களே தீர்த்துக்கட்டவில்லையா!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு