Published:Updated:

கழுகார் பதில்கள்

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

தேர்தலுக்கு முன்பு செய்த களப்பணிகளை இப்போதும் செய்ய வேன்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு நியாயம்தான்

தமிழ்கவி சுவாசன், செல்லூர், மதுரை.

50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை என்கிறதே மத்திய அரசு?

முகக்கவசமும் தடுப்பூசியும்தான் நம் கண்முன் இருக்கும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட - நோய்ப்பரவலைத் தடுக்கும் - வழிமுறைகள். இவைகுறித்து நம் நெருங்கிய வட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருப்பதுதான் ஒரே வழி!

பெ. பச்சையப்பன், கம்பம்.

மத்தியில், மோடியின் ஏழு வருட ஆட்சியின் சாதனை என்ன..?

ஏழு வருஷம் ஆட்சியில் இருந்ததுதான்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அவ்வப்போது உரசிக்கொண்டாலும், ஏதாவது அறிக்கை விடுவதாக இருந்தால்கூட இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் இணைந்தே வெளியிடுகிறார்களே?

வீட்ல என்ன சண்டைன்னாலும், கல்யாணம் காட்சின்னா கணவன் - மனைவி சிரிச்ச முகத்தோடு போய்ட்டு வர்றதில்லையா... அப்படித்தான். அதேசமயம், அந்தக் கடிதத்தில் இருவரும் ‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்’ என்று போட்டி போட்டுக்கொள்வதையும் கவனித்தீர்கள்தானே!

கழுகார் பதில்கள்

டி ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தி.மு.க ஆட்சியை அ.தி.மு.க குறைகூற ஆரம்பித்துவிட்டது பற்றி?

தேர்தல் முடிஞ்சு எவ்வளவு நாள்தான் சொந்தக் கட்சிக்குள்ளயே புகார் சொல்லிட்டிருக் கறது. எதிர்க்கட்சியா செயல்படத் தொடங்க வேணாமா?

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

பொழுதைக் கழிக்க, கட்சியில் சேரலாமா - சினிமாவில் சேரலமா... எது ஜாலியாக இருக்கும்?

ரெண்டுமே நடிப்புக்கு ஸ்கோப் உள்ள இடம்தான். நீங்களும் பொழுதைக் கழிக்கலாம். மக்களுக்கும் பொழுதுபோகும். ரெண்டுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்ல பாஸ்!

தே.மாதவராஜ், இராமநாதபுரம்.

தோற்றுப்போன அ.தி.மு.க மந்திரிகள் தி.மு.க-வுக்குச் சென்றால், ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா?

இப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்டு அமைச்சராகவும் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கும் சிலருமே அப்படி வந்து ஏற்றுக்கொள்ளப் பட்டவர்கள்தானே... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

காட்டாவூர் தேனரசு, செங்குன்றம், சென்னை - 52.

இந்த நெருக்கடியான நேரத்தில், உங்களை நெகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி அடையவைத்த ஒரு நிகழ்வு?

ஆக்சிஜன் குறைபாட்டால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சில நோயாளிகள், இரண்டொரு நாள்களில் முன்னேற்றம் கண்டதும், ‘நான் வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ளலாமா? என்னுடைய படுக்கை என்னைவிட வயதான, தகுதியான இன்னொருத்தருக்குக் கிடைக்குமே’ என்று கூறுவதாக மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இம்மாதிரியானவர்களின் உதவும் உள்ளம் நெகிழ்ச்சியடைய வைக்கிறது!

பாபு கிருஷ்ணராஜ். கோவை.

இளம் வாக்காளர்களைக் கவர்ந்த சீமான், கமல் போன்றவர்கள், இந்தப் பேராபத்துக் காலத்தில் களப்பணியில் இறங்கினால் நிச்சயம் எதிர்காலத் தேர்தலில் இடம் நிலைக்கும் என்பதை உணரவில்லை போலத் தெரிகிறதே?

தேர்தலுக்கு முன்பு செய்த களப்பணிகளை இப்போதும் செய்ய வேன்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு நியாயம்தான். ஆனால், அவர்கள் இன்னும் தேர்தல் முடிந்த களைப்பிலிருந்தே மீளவில்லைபோல!

கழுகார் பதில்கள்

கணேசன், சென்னை-110.

“கொரோனாவைக் கட்டுப்படுத்த அ.தி.மு.க அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை எடுத்தால் சமூகப்பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்ற எடப்பாடியின் பேச்சு?

இது அரசியலுக்கான நேரம் அல்ல. இப்படிப் பொத்தாம் பொதுவாக அறிக்கைவிடாமல், அந்தப் போர்க்கால நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும், எங்கெல்லாம் ஆளுங்கட்சி சறுக்கியிருக்கிறது என்பதையும் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு, எதிர்க்கட்சிக்கு உண்டு.”

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!