Published:Updated:

கழுகார் பதில்கள்

நீரஜ் சோப்ரா
பிரீமியம் ஸ்டோரி
நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியும், அதன் பிறகு அவர் வெளிப்படையாக அரசுக்கு விடுத்த கோரிக்கையும்.

கழுகார் பதில்கள்

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியும், அதன் பிறகு அவர் வெளிப்படையாக அரசுக்கு விடுத்த கோரிக்கையும்.

Published:Updated:
நீரஜ் சோப்ரா
பிரீமியம் ஸ்டோரி
நீரஜ் சோப்ரா

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘அரசியலில் எந்தக் கட்சியும், யாருக்கும் நிரந்தரம் கிடையாது’ என்றிருக்கிறாரே அண்ணாமலை?

ஐயய்யோ... சொல்றதைப் பார்த்தா எதிர்காலத் திட்டம் ஏதாவது வெச்சிருப்பாருபோலிருக்கு. ஜே.பி.நட்டாதான் பார்த்துக்கணும்!

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்.

கோவை அருகே கிராம அலுவலரைக் காலில் விழவைத்த சம்பவம்?

சாதி என்னும் கெடு உளவியல், நம்முள் எவ்வளவு கொடூரமாக இன்னும் ஆழப் படிந்திருக்கிறது என்கிற உண்மை அச்சுறுத்துகிறது!

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தியேட்டர்களில் கோலாகலமாக சினிமா பார்க்கும் காலம் இனி வருமா?

இன்னும் கொஞ்ச காலத்துக்கு அத்தியாவசியத்துக்கு மட்டும்தான் மக்கள் வெளியில வரணும். அப்படி சுயக்கட்டுப்பாட்டோட இருந்தா, நீங்க கேட்குற அந்தக் ‘கோலாகலமான நாள்’ வெகு விரைவில் வரும்!

அயன்புரம் சத்தியநாராயணன், சென்னை.

அ.தி.மு.க இடத்தைப் பிடிக்க பா.ஜ.க முயல்கிறதா?

யார் இடத்தை யார் பிடிப்பது என்கிற போட்டியை விட்டுட்டு, மக்கள் மனதில் இடம்பிடிக்கும் முயற்சியில் இறங்கினால் எல்லோருக்கும் நல்லது!

கழுகார் பதில்கள்

சுந்தரலிங்கம், கத்தார்.

ராஜேந்திர பாலாஜி?

பாய்ந்து ஜகா வாங்கி கப்சிப் ஆனார்!

பழனி மாணிக்கம், வேலூர்.

“நிதி நெருக்கடி நேரத்தில் கருணாநிதி விழா தேவையற்றது” என்று கூறியிருக்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

`ஊசியைப் பார்த்து ‘உன் முதுகுல ஒரு ஒட்டை இருக்கு’னு சொல்லிச்சாம் சல்லடை’ என்கிற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது!

சோமசுந்தரம், கணபதி.

தகுதியோடு உழைக்கத் தயாராக நிறைய பேர் இருக்க, தகுதியற்றவர்கள் மேலே வருகிறார்களே?

இதைத்தான் கிராமத்துப் பக்கம் “எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு எட்டுப் பணியாரம். முட்டி தேயச் சுட்டவளுக்கு மூணு பணியாரம்” என்று சொல்வார்கள்!

கழுகார் பதில்கள்

பெ.பச்சையப்பன், கம்பம்.

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில், தங்களை அதிசயிக்கவைத்தது..?

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியும், அதன் பிறகு அவர் வெளிப்படையாக அரசுக்கு விடுத்த கோரிக்கையும். ஹரியானா மாநிலம், பானிபட் அருகே காந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா. “எனது கிராமத்துக்கு அடிப்படைத் தேவைகளாவது வேண்டும். எது எது முதலில் வேண்டும் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாமே தேவையாக இருக்கின்றன. நல்ல பள்ளி, நல்ல விளையாட்டு மைதானங்கள், ஜிம் என நிறைய தேவைகள் உள்ளன” என்று நீரஜ் வெளிப்படையாக அரசைக் கேட்டிருக்கிறார். நாட்டுக்காக ஒரு வெற்றியை ஈட்டிவிட்டு இந்தக் கோரிக்கையை வைக்கிறார். அரசு பரிசீலித்து ஆவன செய்யும் என்று நம்புவோம்!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பிரதமர் மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து, நாடாளுமன்றத்துக்கு எம்.பி-க்கள் சைக்கிளில் பேரணி சென்றது குறித்து..?

பெட்ரோல் விக்கிற விலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல... மொத்த மக்களும் சைக்கிள்லதான் போகணும்போலிருக்கு!

கழுகார் பதில்கள்

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

சாதாரண விஷயங்களுக்குக் கோபப்படத் தெரிந்த மக்களுக்கு, தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்போது ரெளத்திரம்கொள்ளத் தெரியவில்லையே?

தன்னைவிட எளியவர்களிடம் கோபப்படுவதும், வலியவர்களிடம் பணிந்துபோவதும்தானே பொது வழக்கமாக இருக்கிறது. பாரதியின் ‘ரௌத்திரம் பழகு’ எப்போதும் மக்கள் தங்கள் மனதில் நிறுத்தவேண்டிய வாக்கியம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism