Published:Updated:

கழுகார் பதில்கள்

  சீதல்வாட், சித்திக் கப்பான்,  டெல்டும்டே, ஸ்டான் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சீதல்வாட், சித்திக் கப்பான், டெல்டும்டே, ஸ்டான் சுவாமி

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், `ராமாயண விநாடி வினா போட்டி’ நடந்தது. அதில் வென்ற ஐவரில் இருவர், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இஸ்லாமிய மாணவர்கள்.

கழுகார் பதில்கள்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், `ராமாயண விநாடி வினா போட்டி’ நடந்தது. அதில் வென்ற ஐவரில் இருவர், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இஸ்லாமிய மாணவர்கள்.

Published:Updated:
  சீதல்வாட், சித்திக் கப்பான்,  டெல்டும்டே, ஸ்டான் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சீதல்வாட், சித்திக் கப்பான், டெல்டும்டே, ஸ்டான் சுவாமி

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

குஜராத் கலவரத்தில், கர்ப்பிணிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களை அரசு விடுவித்திருக்கிறதே... அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது சரியா?

அவர்களை நீதிமன்றம் நிரபராதிகள் என விடுவிக்கவில்லை. மாநில அரசு ஏற்படுத்திய ஒரு பரிசீலனைக்குழுதான் அவர்களை விடுவிக்கப் பரிந்துரைத்திருக்கிறது. அரசியல் கலப்பற்ற நீதிதான் ஜனநாயகத்தின் அடிப்படை உயிர்நாடி; அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும். ஆரத்தி எடுப்பதால் ஒருவர் சிறந்தவராகிவிட மாட்டார். பாதிக்கப்பட்டவர்களும் மன்னிக்கும்படியான மனமாற்றமே ஒரு குற்றவாளியிடம் நிகழவேண்டியது.

தீஸ்தா சீதல்வாட், சித்திக் கப்பான், ஆனந்த் டெல்டும்டே, ஸ்டான் சுவாமி
தீஸ்தா சீதல்வாட், சித்திக் கப்பான், ஆனந்த் டெல்டும்டே, ஸ்டான் சுவாமி

கோத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய தீஸ்தா சீதல்வாட், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்று உபா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் கைதுசெய்யப்பட்ட அம்பேத்கரின் பேரனும், எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே, பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பல சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள். பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்டான் சுவாமி சிறையிலேயே இறந்தும்போனார். இன்னும், விசாரணைக் கைதிகளாகச் சிறையிலிருக்கும் பலருக்கும், தாமதமின்றி உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு!

@சரோஜா பாலசுப்ரமணியன்.

பொதுக்குழு செல்லாது என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பை, நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டதுபோல ஓ.பி.எஸ் அணியினர் கொண்டாடுகிறார்களே... இ.பி.எஸ் மேல்முறையீடு போனால் நிலைமை மாறும்தானே?

பாவம்... இப்போதைக்கு அவர்களை லட்டு சாப்பிட விடுங்களேன்.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

“ஊழல், நாட்டைக் கரையான்போல அரித்துக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் வேதனை தெரிவித்திருக்கிறாரே?

அதன் மூல ஊற்றைக் கண்டறிந்து களையவேண்டியவர் அவர்தானே... நடவடிக்கை எடுக்கவேண்டிய அவரே குற்றப்பத்திரிகை வாசித்தால் எப்படி!?

கழுகார் பதில்கள்

கிருஷ்ணமூர்த்தி, துடியலூர்.

சமீபத்திய நெகிழ்ச்சி?

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், `ராமாயண விநாடி வினா போட்டி’ நடந்தது. அதில் வென்ற ஐவரில் இருவர், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இஸ்லாமிய மாணவர்கள். ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இவர்கள் வென்றிருப்பது குறித்துப் பலரும் பாராட்டிவருகின்றனர். போட்டியில் வென்ற ஜாஃபர், தான் படிக்கும் இஸ்லாமியப் பள்ளி சிலபஸில் அனைத்து மத நூல்களும் உள்ளன என்று கூறியிருக்கிறார். அரசியலைத் தாண்டி அன்பு செய்வோம் பாஸ்!

கழுகார் பதில்கள்

சுப்ரமணியன், தூத்துக்குடி.

“டெல்லிக்குக் காவடியா தூக்கப்போகிறேன். கைகட்டி வாய் பொத்தி, உத்தரவு என்னவென்று கேட்கவா போகிறேன்? என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறாரே... யாரைப் பற்றிப் பூடகமாகச் சொல்கிறார்?

குசும்பு சுப்ரமணியன் உங்களுக்கு... ஊரறிந்த ரகசியத்துக்கு உரைவிளக்கம் வேண்டுமா என்ன?

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

“உங்களை யாராவது எதிர்த்து பேசினால், அவர்களின் கை கால்களை உடையுங்கள்’’ என்றும், ``சட்டப் பிரச்னைகளுக்கு நான் பொறுப்பு” என்றும் மகாராஷ்டிர சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ பிரகாஷ் சுர்வே பேசியிருக்கிறாரே?

இந்திய அரசியலைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சி!

பெ.வேலுமணி, நாராயணன்பாளையம்.

அதெப்படி பா.ஜ.க-வில் இருந்துகொண்டே அந்தக் கட்சிக்கு எதிராக அவ்வப்போது கலகக்குரல் எழுப்பும் சுப்பிரமணியன் சுவாமியைக் கட்சித் தலைமை எதுவும் செய்யாமல் இருக்கிறது?

‘நண்பன் பகைவனானால், ஆயிரம் எதிரிக்குச் சமம்’ என்கிற பழமொழி அவர்களுக்கும் தெரியும்தானே. அரசியலில் சில தலைவலிகள் தவிர்க்க முடியாதவை. அந்தத் தலைவலிக்கு மருத்துவம் பார்க்கப்போனால் தலையே வெடிக்கும் ஆபத்துகள் உண்டு.

ஸி.சம்பத்குமார், சென்னை-34.

அலகாபாத் நகரில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், தன் விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்து, தன்னைத் தேர்வில் பாஸ் செய்துவிடும்படி எழுதியிருக்கிறாரே?

அந்த மாணவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்துதானே இதைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்... இந்தியச் சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், எதிர்காலச் சந்ததியினரையும் எப்படி பாதித்துக்கொண்டிருக்கிறது என்பதை அந்த மாணவரின் செயல் நமக்குக் காட்டுகிறது. வெட்கப்படவேண்டியது நாம் எல்லாரும்தான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!