Published:Updated:

கழுகார் பதில்கள்

அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவு

“நிச்சயம் முடியும். முடியாவிட்டால், தன்னை நேசிக்கப் பழக வேண்டும்” என்கிறார் ஓஷோ.

கழுகார் பதில்கள்

“நிச்சயம் முடியும். முடியாவிட்டால், தன்னை நேசிக்கப் பழக வேண்டும்” என்கிறார் ஓஷோ.

Published:Updated:
அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவு

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நிழலின் அருமை வெயிலில் தெரிவதுபோல, பதவியின் அருமை எப்போது தெரியும்?

கார் காராக மாறி... ஊர் ஊராக ஓடும்போது!

கழுகார் பதில்கள்

குணா, வேளச்சேரி.

பிரதமரை டி.வி காமெடி ஷோ ஒன்றில் கண்ணியக்குறைவாகச் சித்திரித்திருப்பதாக, தமிழக பா.ஜ.க தலைவர் கோபமாக ட்வீட் போட்டிருக்கிறாரே?

இவரேதான் சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தின் ஆளுங்கட்சியைக் குறிப்பிட்டு `கருத்துச் சுதந்திரத்துக்கு அரசு இடமளிப்பதில்லை. பொது வாழ்க்கையில் மன உறுதி முக்கியப் பண்பு. கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்கள்’ என்று ட்வீட் போட்டிருந்தார். தக்காளி சட்னி... ரத்தம் காமெடிதான் நினைவுக்கு வருகிறது குணா!

காட்டாவூர் இலக்கியன், செங்குன்றம்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற புறநானூற்றுப் பாடலை, இன்றைய நிலையில் எந்தக் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்?

எல்லாக் கட்சிகளுமே. குறிப்பாக, தமிழகத் தேர்தலில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் கட்சிகள்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

மனிதனால் தன்னைத் தானே நேசிக்க முடியுமா?

“நிச்சயம் முடியும். முடியாவிட்டால், தன்னை நேசிக்கப் பழக வேண்டும்” என்கிறார் ஓஷோ. “தன்னைத் தானே நேசிக்கத் தெரிந்தவனால் மட்டுமே பிறரிடமும் நேசம் காட்ட முடியும். தன்னை நேசித்தலே முதன்மையானது. பிறரை நேசித்தல், நேசத்தின் இரண்டாம் கட்டமே” என்கிறார் அவர். இதில், சுயநலத்தையும் தன்னை நேசித்தலையும் குழப்பிக்கொள்ளக் கூடாது!

மணிவண்ணன், சூலூர்.

சமீபத்திய பாராட்டு?

புனேவில், மினி பஸ் ஒன்றில் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளோடு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். வழியில் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிடவே, யோகிதா சதவ் என்ற 42 வயது பெண்மணி 25 கிலோமீட்டருக்கு வாகனத்தை இயக்கி, அனைவரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதோடு, டிரைவரை மருத்துவமனையிலும் சேர்த்திருக்கிறார். “கார் மட்டும்தான் ஓட்டுவேன். டிரைவர் வண்டியை ஒரு மாதிரி ஓட்டவும்... ஏதோவொரு தைரியத்துல எடுத்துட்டேன்” என்றிருக்கிறார் யோகிதா. பாராட்டுக்குரியவர்தானே!

ஆரோக்கியராஜ், எழும்பூர்.

ஒரு வார்த்தையை இடம் மாற்றிப்போடுவதால் மொத்தமாகப் பொருள் மாறிவிடுமா?

‘புதிய முகம்’ படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலில் வரும் இரண்டு வரிகள்:

‘இளமை பொங்கிவிட்டதா...

இதயம் சிந்திவிட்டதா..?’

இந்த வரிகளில் இளமையும் இதயமும் இடம் மாறினால், பொருளும் மொத்தமாக மாறிவிடும். விளக்கத் தேவையில்லைதானே!

கழுகார் பதில்கள்

கண்மணி ரவி, நெசப்பாக்கம்.

ஒரே வாரத்தில் சென்னையில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டதைப் பார்க்கும்போது என்ன தோன்றியது?

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் சபாநாயகர் அப்பாவு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அந்நிகழ்வில் முகக்கவசம் அணியாமல், அவர் உட்பட பலரும் கலந்துகொண்டதுதான் நினைவுக்கு வந்தது!

சுகன்யா, சென்னை - 110.

“பா.ஜ.க-விலிருந்து விலகும் அமைச்சர்கள், எம்.எ.ல்.ஏ-க்கள் யாரையும் இனிக் கட்சியில் சேர்க்க மாட்டோம்” என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது..?

இப்போதைக்கு வந்து கட்சியில் சேர்ந்துவிட்டு, தேர்தலில் வென்ற பிறகு மறுபடியும் பா.ஜ.க-வுக்கே திரும்பிப் போகும் திட்டம் இருக்குமோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்!

கழுகார் பதில்கள்

நடராஜன், கிருஷ்ணகிரி.

“வ.உ.சி., வேலு நாச்சியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை சர்வதேசத் தலைவர்களுக்குத் தெரியாது” என்று கூறி தமிழ்நாட்டின் அணிவகுப்பு ஊர்தி, மத்திய அரசு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறதே?

வரலாற்றால், மக்களால் மறக்கப்பட்ட தலைவர்களை இந்த உலகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்குத் தானே இது போன்ற விழாக்கள். அதிலும் இப்படியான மாபெரும் ஆளுமைகளைப் புறக்கணிப்பது சரியல்ல. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு நம் பிரதமர் போட்ட ட்வீட்டை அவர்கள் யாருமே பார்க்கவில்லைபோல. கொடுமை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism