Published:Updated:

கழுகார் பதில்கள்

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

கொரோனா விதிமுறைகள் ஒரு பக்கம் போராட்டங்களுக்குத் தடையாக இருக்கின்றன என்பது உண்மைதான்

கழுகார் பதில்கள்

கொரோனா விதிமுறைகள் ஒரு பக்கம் போராட்டங்களுக்குத் தடையாக இருக்கின்றன என்பது உண்மைதான்

Published:Updated:
குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

வாசுதேவன், பெங்களூரு.

தேர்தலுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்வது சரியா?

திருமணத்துக்கு அப்புறம் சண்டை வரும்போது, ரெண்டு பேரும் மாறி மாறி குற்றச்சாட்டு வாசிச்சுக்கறதில்லையா... அப்படித்தான்!

சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

எங்கள் சட்டமன்றத் தொகுதியில் ஜெயித்தவர் மாநில அமைச்சர், தோற்றவர் மத்திய அமைச்சர். எந்தத் தொகுதிக்கு இப்படியோர் அதிர்ஷ்டம் அடிக்கும்?

ஆமால்ல... உங்கள் தொகுதி சிங்கப்பூராகுமா, சிட்னியாகுமானு பார்ப்போம்!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி.

தமிழ்நாட்டில் பா.ஜ.க-வினர், அவர்களின் சொந்த முயற்சியில் வெற்றிபெற்றதைப்போலப் பேசுகிறார்களே?

பேச்சுதானே... காசா பணமா... பேசட்டும் விடுங்க!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

தவறு செய்கிறோம் என்ற பயம் துளியும் இல்லாமல், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்கிறார்களே... அந்தத் துணிச்சல் எப்படி வருகிறது?

தவறு செய்கிறோம் என்ற பயம் துளியும் இல்லாததால்தான் வருகிறது!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

“புதிய ஆளுநர்கள் நியமனத்தில் ஒரு பெண்கூட இல்லையா... ஏன் இந்தப் பாகுபாடு?” என்று குஷ்பு கேட்டிருக்கிறாரே?

‘கருப்பன் குசும்புக்காரன்!’ என்கிற காமெடிதான் நினைவுக்கு வருது!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

மாற்றம் காணும் மத்திய மந்திரி சபையால் இந்தியாவில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதா?

இப்போதெல்லாம் அமைச்சரவை மாற்றங்களென்பது, சிலரின் ஏமாற்றங்களைத் தவிர்க்க மட்டுமே நடைபெறுகிறது பாஸ்!

பச்சையப்பன், கம்பம்.

நடிகர் திலீப் குமார் மறைவு..?

பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற கௌரவங்களைப் பெற்ற திலீப் குமார், தாதா சாகேப் பால்கே போன்ற பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால், 1944 முதல் 1998 வரை திரைத்துறையில் ஆக்டிவாக இருந்தாலும், அந்த 54 வருடங்களில் நடித்த படங்கள் வெறும் 63 மட்டும்தான். பெரும்பாலும் சோகமான கதாபாத்திரங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டு, ஒருகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் இவர் இறப்பதாகவே காட்சிவைத்தனர் இயக்குநர்கள். இதனாலேயே மன அழுத்தம் கூடி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, பிறகு நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும், வாழ்வின் இந்தக் கடைசிக் காட்சியை யாரும் ஏற்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. அவருக்கு நம் அஞ்சலி!

கழுகார் பதில்கள்

@குரு சண்முகசுந்தரம்

சமீபத்தில் சந்தித்தபோது ஒரு புத்தகத்தில் ‘நிறைவாகும்வரை மறைவாக இரு’ என்று எழுதிக்கொடுத்தார் என் ஆசிரியர். அப்படி இருக்க முடியுமா?

ஏன் முடியாது? நிறைவான பின்னரும் மறைவாக இருந்த பலர் உண்டே. ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் ஜியாங் ரோங். 2004-ல் சீனாவில் வெளியான இந்த நாவல், இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் விற்றது. ‘மேன் ஆசியன் விருது’ தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்த நாவலுக்காக ஜியாங் ரோங்குக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டது. அப்போது விருதுக்குழுவுக்கு அனுப்பிய புகைப்படம் மூலம்தான் ஜியாங் ரோங் வெளியுலகுக்கே அறிமுகமானார். அதுவரை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. எந்த விருது விழாவிலும் இவர் பங்கேற்கவில்லை. மேன் ஆசியன் விருதைக்கூட நேரில் சென்று பெறவில்லை ஜியாங் ரோங். நிறைகுடமாக இருந்து தளும்பாமல் இருப்பதில் பல நன்மைகள் உண்டு!

துரைராஜன் உமாஷங்கர், கோலாலம்பூர்.

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு நிறைய போராட்டங்கள் நடந்தன. ஆனால், இப்போது அதைவிட மும்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், எந்தவிதமான போராட்டத்தையும் யாரும் முன்னெடுக்கவில்லையே?

கொரோனா விதிமுறைகள் ஒரு பக்கம் போராட்டங்களுக்குத் தடையாக இருக்கின்றன என்பது உண்மைதான். எனினும், காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படாமல், பல விஷயங்களில் ‘மெதுவா மெதுவா... செவுத்துக்கு வலிக்கப்போவுது’ ரேஞ்சில்தான் டீல் செய்து கொண்டிருக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், சோகமாக இருக்கும் அரசியல்வாதி தி.மு.க-வில் உண்டா?

பசையான ‘துறை’ கிடைக்கலைன்னு சிலர் சோகமா இருக்கறதா சேதி உலவுச்சே… கவனிக்கலையா நீங்க!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism