Published:Updated:

கழுகார் பதில்கள்

ராகுல் சடா, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் சடா, அமித் ஷா

‘நீ எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ, அவ்வளவு நிலப்பகுதியும் உனக்குத்தான்’ என்று சொல்ல, ஓடி... ஓடி... ஓடியே செத்துப்போன ஒருவனைப் பற்றிய கதை படித்திருக்கிறீர்களா?

கழுகார் பதில்கள்

‘நீ எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ, அவ்வளவு நிலப்பகுதியும் உனக்குத்தான்’ என்று சொல்ல, ஓடி... ஓடி... ஓடியே செத்துப்போன ஒருவனைப் பற்றிய கதை படித்திருக்கிறீர்களா?

Published:Updated:
ராகுல் சடா, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் சடா, அமித் ஷா

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

“அமித் ஷா வீட்டையும், பா.ஜ.க தலைமை அலுவலகத்தையும் ‘புல்டோசர்’ வைத்து இடித்துவிட்டால் போதும். நாட்டில் மதக்கலவரங்கள் நின்றுவிடும்” என்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகுல் சடா சாடியுள்ளது பற்றி..?

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், ஆளுங்கட்சி ஆதரவுடன் புல்டோசர்கள் கொண்டு நிகழ்த்தப்படும் அடாவடிச் செயல்பாடுகளைப் பலரும் கண்டித்துவருகிறார்கள். அதே ஆயுதத்தை இவர்களும் எடுக்க வேண்டும் என நினைப்பது தவறு. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது எப்படித் தவறோ... புல்டோசருக்கு புல்டோசரும் தவறுதான்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

‘பிரதமர் மோடி 2047-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டுவருவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக’ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பற்றி..?

2024 தேர்தலில், மக்கள் என்ன இலக்கு நிர்ணயித்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லையே?!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் வீழ்வது எதனால்?

‘நா’ காக்கத் தவறுவதால்!

சௌந்தர், அரியலூர்.

நிறைய பணத்தைச் சேர்த்துவிட்டதால், தனக்கு யாரும் அவசியமில்லை என்று நினைக்கிறான் என் நண்பன் ஒருவன். அவனுக்கு என்ன சொல்லலாம்?

இப்படித்தான் ஞானி ஒருவரைச் சந்தித்த அரசன், வாக்குவாதத்தில் “என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. புகழ் இருக்கிறது. யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றான். ஞானி அரசனிடம் “சரி வா... கொஞ்சம் காலார நடந்துகொண்டே பேசுவோம்” என்று கூற, இருவரும் பேசிக்கொண்டே மதிய வெயிலில் நடந்தனர். உடன் யாருமில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அரசனுக்கு வெயிலின் வெம்மை தாங்கவில்லை. “எங்காவது நிழல் இருக்காதா?” என்று முணுமுணுத்த படி தேடினான். அரசனின் கண்கள் அலைவதைப் பார்த்த ஞானி “அதுதான் உன் நிழலே இருக்கிறதே... அதிலேயே ஒதுங்கலாமே?” என்று கேட்டாராம் ஞானி.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பல அரசியல்வாதிகள் பணம், புகழ், பதவி இவை மூன்றும் இருந்தும் திருப்தி அடைவதில்லையே!?

‘நீ எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ, அவ்வளவு நிலப்பகுதியும் உனக்குத்தான்’ என்று சொல்ல, ஓடி... ஓடி... ஓடியே செத்துப்போன ஒருவனைப் பற்றிய கதை படித்திருக்கிறீர்களா? ஆசையின் அளவுகோல்கள் மாறிக்கொண்டேயிருக்கும் கணேசன். எவ்வளவு பணம்... எவ்வளவு புகழ்... என்ன பதவி என்கிற முடிவற்ற ரேஸில் மூச்சிரைக்க இவர்கள் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள்!

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

சோம்பலை விரட்ட என்னதான் செய்வது?

அதிகாலையில் எழுவது, குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, தினமும் குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் இவற்றை ரெகுலராக்கிக்கொள்வது சோம்பலைத் தவிர்க்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். அலுவலகத்தில் சவாலான காரியங்களை எதிர்கொண்டு முடிப்பதும், நேர்மறை எண்ணங்களோடே இருப்பதும் சோம்பலைத் தவிர்க்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்துவிட்டதே?

“முக்கியமான மர்மத்தில் தெளிவு கிடைக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை. அந்த இட்லிக் கணக்கு மர்மமாவது விலகினால் சரி” என்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்மீது நம்பிக்கை கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கடினமான வாழ்க்கையை வாழ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறாரே?

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து - ஆர்ட்டிகிள் 370 - நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகின்றன. காஷ்மீர் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற, அந்தப் பகுதியில் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இப்போது வரை, தேர்தல் நடத்த, தொகுதிகளை மறுவரையறை செய்வதில்தான் பா.ஜ.க ஆர்வம் காட்டுகிறது. கண்முன்னே பாசிட்டிவான மாற்றங்களை நிகழ்த்திவிட்டுப் பேசினால், இளைஞர்கள் நம்பிக்கை வைப்பார்கள்!

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை-110.

தங்களைச் சிந்திக்கவைத்த அரசியல்வாதி யாராவது உண்டா?

எல்லா அரசியல்வாதிகளுமே நம்மைத் தூங்கவிடாமல் சிந்திக்கவைத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்... நம்மைப் பற்றி அவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism