அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

சிரிப்பு நம் மனதிலிருந்து மலர வேண்டும். பிறர் துன்பத்திலிருந்தோ, பிழைகளிலிருந்தோ வரக் கூடாது.

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோயமுத்தூர்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா, ரஹ்மான் இவர்களில் யாருடைய இசையில் மயங்கியிருக்கிறீர்கள்?

மூவரின் இசையிலுமே. ஏனென்றால், மூவருமே அந்தந்தக் காலகட்டத்தின் தனித்துவமான உணர்வுகளை, வாழ்வியலை இசையாகக் கொடுத்தவர்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப் பிரிக்காமல், இணைத்து ரசிப்பதே அழகானது. விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ படப் பாடல்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் விஸ்வநாதன் பாடிய ‘மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்’ பாடலும் எவ்வளவு அற்புதமானவை... ஓர் இசைக் கச்சேரியில் பெண்கள் பாடுவதாக உருவாக்கப்பட்ட மூன்று பாடல்களை உதாரணத்துக்குத் தருகிறேன்... ‘பார்த்த ஞாபகம் இல்லையோ...’, ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்...’, ‘கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...’ மூன்றும் மூன்றுவிதமான அற்புதங்கள்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

“தி.மு.க அரசின் ஆட்சி நன்றாக இருக்கிறது” என்று நடிகர் வடிவேலு சொல்கிறாரே?

அவருடைய வசனத்தை அவருக்கே சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஆனால், உங்கள் கேள்வி இந்த பதிலைச் சொல்லவைக்கிறது. “அவருக்கும் பழசெல்லாம் கண்ணுல வந்துபோகுமால்லியா!”

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘ஆட்சி நடத்தத் தெரியாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறுகிறது தி.மு.க!’ என்ற ஜே.பி.நட்டா-வின் பேச்சு?

மாற்றி மாற்றிக் குறை கூறிக்கொள்வது, இன்றைய அரசியலின் முதன்மையான செயல்பாடாக இருக்கிறது. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல!

ஸ்ரீகாந்த் ரமேஷ், விருதுநகர்.

கடந்த இதழ் `கழுகார் பதில்களி’ல் அழுகை பற்றி நீங்கள் எழுதியதைப் படித்துக்கொண்டிருக்கும்போது, சரியாக ரோஜர் ஃபெடரர் டென்னிஸிலிருந்து ஓய்வுபெறும்போது தேம்பி அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சரி, இப்போது சிரிப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்?

சிரிப்பு நம் மனதிலிருந்து மலர வேண்டும். பிறர் துன்பத்திலிருந்தோ, பிழைகளிலிருந்தோ வரக் கூடாது. அதனால்தான் சார்லி சாப்ளின் “என் வலி, பிறருக்குச் சிரிப்பாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் பிறருடைய வலியை, என் சிரிப்புக்குக் காரணமாக ஆக்கிக்கொள்ள மாட்டேன்” என்றார். எல்லாவற்றையும்விட, நாம் சிரிப்பதைவிட, பிறரைச் சிரிக்கவைப்பதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது மிக அழகான உண்மை.

கழுகார் பதில்கள்

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தி எதிர்ப்பு என்பதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமா?

இல்லை. இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் வடக்கிலும் உண்டு. தனது தாய்மொழியின் தனித்துவத்தை, அதன் இலக்கியச் செழுமையை, வளமையை உணர்ந்த எவரும் அது அழிந்துபோகவும், அதன் முக்கியத்துவத்தை இழக்கவும் சம்மதிக்க மாட்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகான முக்கால் நூற்றாண்டில், நாம் இந்தியாவின் அழகான பல மொழிகளை இழந்திருக்கிறோம். அந்த இழப்பு, பண்பாட்டுரீதியிலானது. எனவே பொதுமக்களுக்கு அந்த இழப்பு, பொருளாதார இழப்பைப்போலப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால், பண்பாடு என்பது, இன்றைய இந்திய அரசியலில் அதிகாரம் சார்ந்தது. எனவே, மொழி முக்கியமானது. ஒன்றை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். நாம் ‘இந்தி’ மொழியை எதிர்க்கவில்லை. ‘இந்தித் திணிப்பை’த்தான் எதிர்க்கிறோம்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

நாகரிகமாகக் கோபப்படுவது எப்படி?

உங்கள் கோபத்தில் பொதுநலம் இருந்தால், அதில் நியாயம் இருந்தால், உங்கள் கோபத்தின் மூலம் ஒன்றைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமிருந்தால், நிச்சயம் உங்களிடம் நிதானம் இருக்கும். நிதானமிருந்தால், நாகரிகமும் இருக்கும்.

V.பாலசுப்ரமணியன், காளவாய்க்கரை, மன்னார்குடி.

சென்னையைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பம், திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக 1.02 கோடி தந்திருப்பதைப் பற்றி கழுகார் கருத்து?

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா. இந்தச் சகோதரத்துவம், சாதி, மதப் பாகுபாடுகளால் சிதைந்துவிடக் கூடாதே என்பதுதான் பலரின் கவலையாக இருக்கிறது.

அன்னூரார் பொன்விழி, அன்னூர்.

“காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி” என்று ராகுல் காந்தி சொல்லியிருப்பது பற்றி?

நல்ல விஷயம்தான். ஆனால், ‘அந்த ஒரு பதவி’ யாருக்கு என்பதுதானே பிரச்னையே?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!