Published:Updated:

செந்தில் பாலாஜியை ஏன் விமர்சித்தார் பிரேமலதா..? தூத்துக்குடியில் கனிமொழி கறார் - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

`எகிறிய பிரேமலதா... கண்டுகொள்ளாத செந்தில் பாலாஜி, நலம் விசாரித்த திவாகரன்... உருகிய வைத்திலிங்கம், தூத்துக்குடியில் கனிமொழி கறார்...' - கழுகார் அப்டேட்ஸ்.

செந்தில் பாலாஜியை ஏன் விமர்சித்தார் பிரேமலதா..? தூத்துக்குடியில் கனிமொழி கறார் - கழுகார் அப்டேட்ஸ்!

`எகிறிய பிரேமலதா... கண்டுகொள்ளாத செந்தில் பாலாஜி, நலம் விசாரித்த திவாகரன்... உருகிய வைத்திலிங்கம், தூத்துக்குடியில் கனிமொழி கறார்...' - கழுகார் அப்டேட்ஸ்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
டூர் செல்லத் தயாராகும் கவுன்சிலர்கள்!

வேலூர் மாநகராட்சி, வாணியம்பாடி நகராட்சி ஆகியவற்றில் தி.மு.க., அ.தி.மு.க சார்பில் மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்குக் குறிவைக்கும் முக்கியப்புள்ளிகள், தேர்தலில் வெற்றிபெறுபவர்களை ரிசார்ட்டுகளுக்கு அள்ளிச்செல்லும் ஏற்பாடுகளை இப்போதே செய்துவிட்டார்கள்.

தேர்தல்
தேர்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலுள்ள ரிசார்ட்டுகளில் ரூம்களை புக் செய்ததோடு, வெற்றிபெறும் கவுன்சிலர்களை அள்ளிச்செல்ல பவுன்சர்களையும் வரவழைத்திருக்கிறார்கள்!

எகிறிய பிரேமலதா...
கண்டுகொள்ளாத செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதன் பின்னணியை விசாரித்தால், “தே.மு.தி.க கரூர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த தங்கவேல், கஸ்தூரி என்.தங்கராஜ் உள்ளிட்டவர்களோடு நூற்றுக்கணக்கான தே.மு.தி.க-வினரை தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி அழைத்துச் சென்றுவிட்டார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த்

அதோடு, தற்போது தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறும் பட்சத்தில், அவர்களிடமும் தி.மு.க-வில் சேர்ந்துவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார். இது குறித்து பிரேமலதாவுக்குப் புகார் செல்லவே... அந்தக் கோபத்தைத்தான் பிரசாரத்தில் கொட்டியிருக்கிறார்” என்கிறார்கள் உள்ளூர் தே.மு.தி.க நிர்வாகிகள். ஆனால், செந்தில் பாலாஜி தரப்பிலோ இதைக் கண்டுகொள்ளவே இல்லையாம்!

தூள்பறந்த பணப் பட்டுவாடா...
ஒதுங்கிக்கொண்ட பறக்கும் படை!

எப்போதும் இல்லாத அளவுக்கு நீலகிரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்த முறை பண பட்டுவாடா கனஜோராக நடந்து முடிந்திருக்கிறது. ‘வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுப்பது யார்?’ என்று தி.மு.க - அ.தி.மு.க இடையே கடும் போட்டியே நடந்தாலும், இதைத் தடுக்கவேண்டிய நீலகிரி தேர்தல் பறக்கும் படையினர் எதுவும் தெரியாததைப்போல வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். சில இடங்களில் பட்டுவாடா செய்தவர்களை, எதிர்த்தரப்பினர் பிடித்துவைத்து புகார் செய்தும் ஸ்பாட்டுக்கு வரவே இல்லை. விசாரித்தால், “நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரு தரப்புமே வெயிட்டாக இருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ‘நமக்கேன் வம்பு?’ என்று அதிகாரிகள் ஒதுங்கிக்கொண்டார்கள்” என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“அண்ணே, எப்படி இருக்கீங்க?”
நலம் விசாரித்த திவாகரன்... உருகிய வைத்திலிங்கம்...

பட்டுக்கோட்டை அருகேயுள்ள சோத்திரியம் கிராமத்தில் வசித்துவந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் கருணாநிதி, கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு வந்த சசிகலாவின் தம்பி திவாகரன், மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதோடு, நீண்ட நேரம் அங்கேயே இருந்திருக்கிறார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அப்போது அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்த வைத்திலிங்கத்திடம், “அண்ணே, பார்த்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க?” என்று திவாகரன் நலம் விசாரிக்க... “நல்லா இருக்கேம்ப்பா... நீங்க எப்படி இருக்கீங்க...” என்று வைத்திலிங்கமும் உருக... பத்து நிமிடங்களுக்கு இவர்களின் உரையாடல் நீண்டுள்ளது. இதையடுத்து, “ஏற்கெனவே வைத்தி அண்ணன்தான், சசிகலா தரப்புக்குப் பாலமாக இருந்தார். அந்தப் பாசத்துலதான் ரெண்டு பேரும் இப்படிப் பேசியிருக்காங்க...” என்று கிசுகிசுக்கிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க-வினர்.

நாகர்கோவில் கோஷ்டிப்பூசல்...
சுரேஷ் ராஜனை விசாரித்த பூச்சி முருகன்!

நாகர்கோவில் மாநகராட்சியில் கவுன்சிலராகப் போட்டியிடும் தி.மு.க மாநகரச் செயலாளர் மகேஷுக்கும், மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜனுக்கு ஏழாம் பொருத்தம். இரு தரப்பினருமே தனித்தனி கோஷ்டிகளாக வலம்வருகிறார்கள். இது பற்றி தலைமைக்குப் புகார்கள் சென்ற நிலையில், ‘கோஷ்டிப்பூசலால் வெற்றி பாதித்துவிடக் கூடாது’ என்று தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனை நாகர்கோவிலுக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது அறிவாலயம்.

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

நாகர்கோவில் வந்த பூச்சி முருகன், கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜனை மட்டும் அழைத்து கேள்விக்கணைகளால் துளைத்துவிட்டாராம். இது பற்றிப் பேசிய உள்ளூர் தி.மு.க நிர்வாகிகளோ, “அண்ணன் எவ்வளவு பெரிய ஆளு... அவரைப்போய் குற்றவாளிபோல விசாரிச்சது நியாயமா... ரெண்டு பேரையும் இல்லையா விசாரிச்சு இருக்கணும்?” என்று கொந்தளிக்கிறார்கள்!

“அண்ணனுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும்!”
தூத்துக்குடியில் கனிமொழி கறார்...

தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் கீதா ஜீவனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இருந்தாலும், தூத்துக்குடி மாவட்டம் தி.மு.க எம்.பி கனிமொழியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கனிமொழி
கனிமொழி

அவர் எம்.பி-யாகப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பதால், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் நகராட்சிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் கனிமொழி. இரு நாள்களுக்கு முன்பு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரையும் அழைத்த கனிமொழி, “என்ன செய்வீர்களோ தெரியாது. தூத்துகுடி மாநகராட்சி மற்றும் மூன்று நகராட்சிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். இதில் ஏதேனும் தப்பு நடந்தால் அண்ணனுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்... ஜாக்கிரதை!” என்று கறார்காட்டினாராம்!

மு.க.அழகிரியின் ஆசிபெற்ற வேட்பாளர்!
நெல்லை கலகல...

‘இதோ வந்துவிடுவார்... அதோ வந்துவிடுவார்...’ என்று அரசியலில் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மு.க.அழகிரி, எப்போதோ அமைதியாகிவிட்டார். ஆனாலும், நெல்லை மாநகராட்சியில் சுயேச்சையாகப் போட்டியிடும் ரா.பாலகிருஷ்ணன் என்பவர், அழகிரியின் படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். “கலைஞரின் மகன்... அண்ணன் அழகிரியின் ஆசிபெற்ற வேட்பாளர் ரா.பாலகிருஷ்ணனுக்கு தீப்பெட்டிச் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பிரசாரத்தில் அவர் பேசியதைப் பார்த்த வாக்காளர்கள், “அழகிரி வசிக்குற மதுரையிலகூட இப்படி யாரும் பிரசாரம் செஞ்சுருக்க மாட்டாங்க... நெல்லையில அழகிரிக்கு இப்படியொரு ஆதரவாளரா!” என்று புருவம் உயர்த்தினார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism