Published:Updated:

ஊட்டியில் களைகட்டும் கவர்னர் வீட்டுத் திருமணம்... திமுக ஐடி விங் தலைவர் யார்? - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்
News
கழுகார்

`இந்த கொரோனா பரவல் காலத்திலும் குப்பை வரி வசூலிலிருந்து, ஆளுநர் வீட்டுத் திருமணவிழா நிகழ்ச்சி வரை எல்லாமே கச்சிதமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன’ என்கிற குறிப்போடு வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்பியிருந்தார் கழுகார்

``இவ்வளவுதானா நம்ம வேல்யூ?’’
புலம்பும் அமைதி அமைச்சர்

``போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ள தன் உறவினர் ஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்று, தொழில் மாநகரின் உயரதிகாரி ஒருவரிடம் மஞ்சள் மாவட்ட அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோரிக்கையைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த உயரதிகாரி, ‘‘சார்... இதையெல்லாம் என்னால செய்ய முடியாது. இனிமே இந்தக் கோரிக்கையோடு என்னிடம் வரவேண்டாம்’’ என்று சொல்லிவிட்டாராம். ‘‘அமைச்சராக இருந்துகொண்டு ஒரு கான்ஸ்டபிளுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கக்கூட முடியலையே’’ என்று புலம்பிவருகிறார் அமைதிக்குப் பெயர் போன அந்த அமைச்சர். இதையடுத்து அந்த உறவினர் தரப்போ “வரம் கொடுக்குற ‘சாமி’க்கே இந்த நிலைமையா!” என்று விக்கித்துப்போனதாம்!

மாவட்டத்துக்கு ஒரு தனித்தொகுதி!
பா.ஜ.க-வின் பலே பிளான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டியல் சமூகத்திலிருந்து ஏழு சாதிகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று அறிவித்தது மத்திய அரசு. அதன்மூலம், அந்தச் சமுதாய வாக்குகளை கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓரளவுக்கு அறுவடை செய்தது தமிழக பா.ஜ.க.

அண்ணாமலை
அண்ணாமலை

அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரின் வாக்குகளைக் குறிவைத்திருக்கிறது, தமிழக பா.ஜ.க. திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவனின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அந்தச் சமுதாயத்தைக் கவரும் வகையில் முதற்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம் ஒரு ’தனித்தொகுதி’ இருக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கிறது பா.ஜ.க. அதோடு, உயர் நீதிமன்றத்தில் இதை முன்வைத்து பொதுநல வழக்கும் தாக்கல் செய்ய இருக்கிறது.

தி.மு.க-வில் புதிய ஐ.டி விங் தலைவர் யார்?

தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்தப் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக கட்சித் தலைமையிடம் சொல்லிவிட்டார். இதனால், அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற விவாதம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தரப்பில் நடந்துள்ளது.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

அன்பில் மகேஷை அமைச்சராக்கிவிட்டதால், தன் மற்றொரு சகாவான டி.ஆர்.பி.ராஜாவை இந்தப் பதவிக்கு முன்மொழிந்துள்ளாராம் உதயநிதி. அதே நேரம், ‘ராஜ்யசபா உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவை நியமிக்கலாம்’ என்று சில சீனியர்கள் ஆலோசனை கொடுத்துள்ளார்கள். இறுதியாக, டி.ஆர்.பி.ராஜா பெயரையே டிக் செய்துள்ளாராம் முதல்வர்.

போலி லைசென்ஸ் புகார்...
தப்பிக்கும் பெண் அதிகாரி!

தீயணைப்புத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரிடம் போலி லைசென்ஸ் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, டெல்லி லாபியைப் பயன்படுத்தி தப்பித்தார். மீண்டும் தனக்கு சிக்கல் வந்திருப்பதால், தற்போதும் விடுமுறை எடுத்துக்கொண்டு ரகசியமாக டெல்லிக்குச் சென்றிருக்கிறராம். டெல்லியில் இவரின் கணவர் மத்திய அரசு பணியில் இருப்பதால் அங்கிருந்து அழுத்தம் கொடுக்க தயாராகிவருகிறார்.

ஆளுநர் இல்லத்திருமண விழா
ஊட்டியில் முகாமிட்ட கவர்னர்...

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடக்க உரையை ஆற்றிய கையோடு, ஜனவரி 5-ம் தேதி கோவைக்குப் பறந்த தமிழக ஆளுநர் ஆர்.என்‌.ரவி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் சென்றடைந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம், ஊட்டி ஆளுநர் மாளிகையை புதுப்பொலிவுப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்‌.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்‌.ரவி

வி.வி.ஐ.பி கெஸ்ட்டுகள் வந்து தங்குவதற்கு ஊட்டியிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகை மற்றும் தனியார் நட்சத்திர தங்கும் விடுதிகளையும் பார்வையிட்டிருக்கிறார். ‘எதற்காக இந்த ஏற்பாடு?’ என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விசாரித்தால் “ஆளுநர் இல்லத் திருமண விழாவை வருகிற பிப்ரவரி மாதம் ஊட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவே ஊட்டிக்கு வந்துள்ளார்” என்கிறார்கள் ராஜ்பவன் வட்டாரத்தில்.

குப்பை வரி வசூல்!
தவிப்பில் காரைக்கால் மக்கள்...

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீடுகளுக்கு விதிக்கப்பட்ட குப்பை வரியை என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அமைந்த புதிய அரசு, ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆளும்கட்சி தனது வாக்குறுதியில் ஒன்றை நிறைவேற்றியிருப்பதை நினைத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

புதுச்சேரி
புதுச்சேரி

ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வீட்டு வரி செலுத்த செல்பவர்களிடம், குப்பைவரியை கேட்டு அடம்பிடிக்கிறது காரைக்கால் நகராட்சி. ‘‘அதுதான் அரசு தள்ளுபடி செய்துவிட்டதே...’’ என்று கூறும் மக்களிடம், ‘‘வாய்மொழியாக அறிவித்தார்களே ஒழிய, எங்களுக்கு எந்த ஆணையும் வரவில்லை’’ என்று கூறி குப்பை வரியைக் கறாராக வசூலிக்கிறார்கள். ‘‘இந்தக் கொடுமையை எங்கே சொல்வது?” என்று தவிக்கிறார்கள் காரைக்கால் நகரவாசிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா கட்டுப்பாடு...
கவலையில் அன்புச்செழியன்!

சினிமா ஃபைனான்ஸியரான ‘கோபுரம்’ அன்புச்செழியன், தன் மகளுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரனின் மகனை மணம் முடிக்க உள்ளார். ஜனவரி 21-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம், மு.க.அழகிரி, சசிகலா, தினகரன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிட்டிருந்தார்கள்.

அன்புச்செழியன் மகள்
அன்புச்செழியன் மகள்

ஆடம்பர ஏற்பாடுகள் மற்றும் வி.ஐ.பி-க்கள் வருகையின் மூலம் தன் செல்வாக்கைக் காட்ட நினைத்த பிளான், கோவிட் கட்டுப்பாட்டால் தடைபட்டுவிடுமோ என்று இரு குடும்பத்தினரும் கவலையில் இருக்கிறார்களாம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்...
உற்சாகப்படுத்தும் செந்தில் பாலாஜி!

கோவை தி.மு.க-வை எப்படியாவது கரைசேர்த்து விடவேண்டும் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். முதல் கட்டமாக பூத் கமிட்டி அமைத்து, சுமார் 3,000 பூத் கமிட்டிகளுக்கு தலா ரூ.10,000 கொடுக்கப்பட்டுவிட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி மேயர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் பதவிகளுக்காக அந்த மாவட்ட உடன்பிறப்புகள் செந்தில் பாலாஜியிடமும், அறிவாலயத்தை நோக்கியும் படையெடுத்து வருகிறார்கள். இம்முறை மேயர் உள்ளிட்ட வேட்பாளர்களைத் தேர்தலுக்கு முன்பு அறிவிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள். தன்னை சந்திக்க வருபவர்களை, ‘‘எல்லோரும் இணைந்து பணியாற்றி தேர்தலில் வெற்றிபெற்று வாருங்கள். தலைமை யாரை கைகாட்டுகிறதோ அவர்களுக்குப் பதவி’’ என்று அனுப்பிவைக்கிறாராம் செந்தில் பாலாஜி.