Published:Updated:

`கனிமொழியின் அமைதி முதல் உற்சாகமான ராஜேந்திர பாலாஜி வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

`மெயில் செக் பண்ணுங்க’ என்று மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார். உள்ளே சுடச் சுட தகவல்கள்...

`கனிமொழியின் அமைதி முதல் உற்சாகமான ராஜேந்திர பாலாஜி வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்!

`மெயில் செக் பண்ணுங்க’ என்று மெஸ்சேஜ் அனுப்பி இருந்தார் கழுகார். உள்ளே சுடச் சுட தகவல்கள்...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
``தலைவர் மகள் உங்களுக்கே இப்படியென்றால்...”

`கனிமொழி கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருக்கிறார்’ என்று தி.மு.க வட்டாரத்துக்குள் செய்திகள் கசிந்ததைத் தொடர்ந்து, சமீபநாள்களாக கனிமொழியைத் தொடர்புகொண்டுவருகிறார்களாம் சில மூத்த நிர்வாகிகள். சிலர் ஆறுதல் சொல்லவும், சிலர் தங்களுக்கு ஆதரவு தேடியும் பேசியிருக்கிறார்கள்.

கனிமொழி
கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக, கருணாநிதி காலத்தில் கட்சிக்குள் கோலோச்சிய சிலர், இப்போது இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் கனிமொழியைத் தொடர்புகொண்டு, ``தலைவர் மகள் உங்களுக்கே இப்படியென்றால், எங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்... யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்” என்று தூபம் போட, கனிமொழி தரப்போ எந்த உணர்ச்சியும் வெளிப்படாத ஆழ்ந்த அமைதியை மட்டுமே பதிலாகத் தந்ததாம்!

திருட்டு நகைகளை வாங்கும் தலைவர்...
காப்பாற்றிய தி.மு.க எம்.எல்.ஏ !

உளுந்தூர்பேட்டை பெரிய தலைவரின் பிரதான தொழிலே திருட்டு நகைகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவதுதானாம். சில மாதங்களுக்கு முன்பு, பெங்களுரில் திருட்டு வழக்கொன்றில் போலீஸில் சிக்கிய கும்பலொன்று, திருடிய நகைகளை இவரிடம்தாம் விற்போம் என்று உளுந்தூர்பேட்டையை நோக்கிக் கைகாட்டியிருக்கிறது.

`கனிமொழியின் அமைதி முதல் உற்சாகமான ராஜேந்திர பாலாஜி வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்!

அதனடிப்படையில், அந்தப் பெரிய தலைவரின் வீட்டுக்குள் நுழைந்த பெங்களுரு போலீஸ், அவரை அலேக்காகத் தூக்க முயன்றிருக்கிறது. முருகக் கடவுளின் மற்றொரு பெயர்கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ தலையிட்டு பெரிய தலைவரைச் சேதாரமில்லாமல் காப்பாற்றியிருக்கிறார்!

யாரை திருப்திப்படுத்த நினைக்கிறது
எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டி?

மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் என இரு பிரிவுகளாகத் தேர்வுகள் நடப்பது வழக்கம். தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் படிக்கும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதவேண்டிய மாணவர்களையும் பிப்ரவரியிலேயே தேர்வு எழுதவைக்கின்றனர். 40 சதவிகிதப் பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில், இப்படி முன்கூட்டியே எழுதவைப்பது ஏன் என்ற கேள்வியோடு மருத்துவக் கல்லூரி வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டி நிர்வாகம், யாரை திருப்திப்படுத்துவதற்காக இப்படி மாணவர்களை நிர்பந்திக்கிறது?’ என்கிற சந்தேகக் கேள்வி அனலடிக்கிறது மருத்துவக் கல்லூரி வட்டாரங்களில்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டி.ஆர்.பி.ராஜாவுக்குச் சிக்கல்கள்!

தி.மு.க தகவல் தொழில்நுட்பச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டாலும், அவர் தந்தையான டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் தலைமை மீதான மனவருத்தம் குறையவில்லையாம். தான் கேட்ட மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவியையும் தரவில்லை, தன் மகனுக்கு அமைச்சர் பதவியும் தரவில்லை என்பதே அவர் வருத்தத்துக்குக் காரணமாம்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

மற்றொருபுறம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலரும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்களாக இருப்பதால், டி.ஆர்.பி.ராஜாவுக்கு நிர்வாகரீதியாகச் சிக்கல்கள் வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுடன் சவகாசம் வைத்துக்கொள்ளக் கூடாது!

புதிதாகக் கட்டப்பட்ட அரக்கோணம் சப் கலெக்டர் அலுவலகத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 19-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகத் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார். அமைச்சர் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில், அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சு.ரவி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

அமைச்சர்
அமைச்சர்

அமைச்சர் ஏற்றிவிட்டுச் சென்ற குத்துவிளக்கை அணைத்துவிட்டு, தன் பங்குக்குக் குத்துவிளக்கை மீண்டும் ஏற்றி அக்கப்போர் செய்தார். ‘‘அடுத்தவனுக்குப் பிறந்த குழந்தையைத் தன் பிள்ளை என்று சொந்தம் கொண்டாடுவதைப்போல... நாங்கள் கொண்டுவந்த சப் கலெக்டர் அலுவலகத்தை, அமைச்சர் காந்தி திறந்துவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’’ என்று அதே நிகழ்வில் ரவி பேசியது, அமைச்சர் காந்தியின் காதுக்குச் சென்றது. இதையடுத்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுடன் சவகாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சப் கலெக்டர் அலுவலக அலுவலர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறாராம் காந்தி!

சால்வை, மாலை, நக்கல் பேச்சு... பழைய பாலாஜி!

திருச்சி சிறையிலிருந்து நான்கு வார நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் அருகிலுள்ள திருத்தங்கல் வீட்டிலேயே முடங்கியிருந்தார். ஓரிரு நாள்கள், கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் உறவினர்களுடன் மட்டுமே நேரத்தைச் செலவிட்டார். கடந்த 17-ம் தேதி, முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

``ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ரெண்டு பேரும் பேருக்குக்கூட இதுவரை என்னன்னு கேட்கலை... இவங்களாவது வந்துட்டுப் போறாங்களே... அதுவரைக்கும் சந்தோஷம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் பாலாஜி. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியான நாளன்று, ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்க அவரது வீட்டின் முன் உள்ளூர் நிர்வாகிகள் குவிந்திருக்கிறார்கள். சால்வை, மாலை, சிரித்த முகம், நக்கல் பேச்சு என மீண்டும் சகஜநிலைக்கு வந்துவிட்டாராம். வழக்கு பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் போட்டு பழையபடி கட்சிப் பணியில் உற்சாகமாக இறங்கிவிட்டாராம் பாலாஜி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism