Published:Updated:

`எடப்பாடியின் அரசு பங்களா’ முதல் ‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி’ வரை! கழுகார் அப்டேட்ஸ்

``மழை கொட்டுகிறது. உமக்கான செய்திகளை டெலிகிராமில் அனுப்பிவைக்கிறேன்’’ - சுருக்கமாகப் பேசிவிட்டு, அலைபேசியை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் வந்து விழுந்தன செய்திகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எடப்பாடி பழனிசாமியின் அரசு பங்களா...
ஆதங்கப்படும் அ.தி.மு.க-வினர்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்களில், கடந்த ஆட்சியின்போது அருகருகே குடியிருந்த எடப்பாடி பழனிசாமியும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பின்புறமுள்ள மைதானத்தில் அவ்வப்போது வாக்கிங் செல்வது வழக்கம். ஆட்சி மாறிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதே பங்களா ஒதுக்கப்பட, மற்ற பங்களாக்களில் தி.மு.க அமைச்சர்கள் குடியேறிவிட்டார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர் குடியிருந்த பங்களாவில் தற்போது வெள்ளக்கோவில் சுவாமிநாதன் குடியிருக்கிறார். எடப்பாடியார் இப்போதும் வாக்கிங் செல்லும் விஷயம் சுவாமிநாதனின் கவனத்துக்கு வர, அலெர்ட் ஆனவர், தன் பங்களாவின் பின்பக்க காம்பவுண்ட் சுவருக்கு மேல் ஊதா நிற ஷீட்டுகளை வைக்கச் சொல்லிவிட்டார்.

வெள்ளக்கோவில் சுவாமிநாதன்
வெள்ளக்கோவில் சுவாமிநாதன்

எடப்பாடியார் வாக்கிங் போனால், தப்பித்தவறியும்கூட அவரின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். அதேசமயம், ‘தி.மு.க அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் எடப்பாடி பழனிசாமி தங்கியிருப்பதால், அவரின் வீட்டுக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதெல்லாம் அக்கம் பக்கத்து பங்களாக்களில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. தலைவர் ஏன் இந்த பங்களாவைத் தேர்ந்தெடுத்தார்?’ என்று அ.தி.மு.க நிர்வாகிகளும் ஆதங்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறத் தேர்தலுக்காகக் களமிறங்கியிருக்கும் சர்வே டீம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க-வில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய ஐபேக் தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டது. அதே பாணியில் மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு யாரை வேட்பாளராக்கலாம் என்ற சர்வேயை தி.மு.க தலைமை தற்போது எடுத்துவருகிறது. ஐபேக் நிறுவனத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த நூறு பேரைத் தேர்ந்தெடுத்து, இந்த சர்வே பணியை ஸ்டாலின் ஒப்படைத்திருக்கிறார். இந்த நூறு பேர்கொண்ட டீம், பல குழுக்களாகப் பிரிந்து, கடந்த ஒரு வாரமாகத் தமிழகம் முழுவதும் தீவிரமாக சர்வே பணியை மேற்கொண்டு வருகிறது. மேயர் கனவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர், அந்த டீமை அணுகி, தங்கள் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துவருகிறார்களாம்.

‘‘எல்லாம் அவருக்குத்தானே போச்சு... மாட்டிக்கட்டும்!’’

‘‘மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஆறு மாடி வணிக வளாகத்துடன் கட்டப்பட்டுவரும் பெரியார் பேருந்து நிலையம், சரியாகத் திட்டமிட்டு கட்டப்படவில்லை. அதற்கு முறையான நகரமைப்பு அனுமதியே வாங்கவில்லை. கட்டுமானம் மிக மோசமாக இருக்கிறது’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகார் தெரிவிக்க, அதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘எங்கள் ஆட்சியில் மதுரைக்குப் பல திட்டங்கள் வந்தன. ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி எனக்குத் தெரியாது.

பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்

பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்திருந்தால், ஆட்சியில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும்’’ என்று பதிலளித்தார். ‘‘என்னண்ணே பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டீங்க... நடவடிக்கை எடுங்கன்னு நம்ம கட்சிக்காரங்களையே மாட்டிவிடலாமா?’’ என்று நெருக்கமானவர்கள் செல்லூர் ராஜூவிடம் கேட்க, ‘‘பின்னே, அந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால நமக்கு ஏதும் பயனிருந்துச்சா..? எல்லாம் கோவைக்காரருக்குத்தானே போச்சு... தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தா மாட்டிக்கட்டும்’’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.

தனிமரமான ஈரோடு பிரபலம்!

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க-வில் கடந்த 10 ஆண்டுகளாகக் கோலோச்சிய பிரபலம் தி.மு.க-வில் இணைந்த கையோடு, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரி உரிமையாளர்கள் சிலருடன் சென்று ஏரியா அமைச்சரைச் சந்தித்திருக்கிறார். அப்போது, ‘‘கடந்த ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லாம பிசினஸ் செஞ்சவங்களுக்கு, இப்ப லைசென்ஸ் கிடைக்குறதுல கொஞ்சம் சிக்கல் வந்துருக்கு.

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

நீங்க ஒரு வார்த்தை சொன்னா பிரச்னை முடிஞ்சுடும். உங்களுக்கு ஆகவேண்டியதை ரெகுலரா செஞ்சுடலாம்’’ என்றிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட அமைச்சர், ‘‘சரியான டாக்குமென்ட் இருந்தா லைசென்ஸ் வாங்கிக் கொடுத்துடலாமுங்க. தேவையில்லாத விஷயங்கள் செஞ்சு கொடுத்தா நாளைக்குத் தலைமைக்கு பதில் சொல்ல சங்கடமாகிடும்’’ என்று சொல்லி அந்தப் பிரபலத்தைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். காரியம் கைகூடிவிடும் என்ற நம்பிக்கையோடு சென்ற அந்தப் பிரபலம் நொந்துபோய்த் திரும்பினாராம்!

அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்...
பிறந்தநாளின்போதும் மிஸ்ஸான உற்சாகம்!

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாநில மாணவரணி துணைச் செயலாளரான உமரி சங்கரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் பில்லா ஜெகனும்தான் இரண்டு கரங்களைப்போல வலம்வருகிறார்கள். அனிதா அமைச்சரானதிலிருந்து இவர்களின் ஆட்டம் அதிகமாக... அறிவாலயம் வரை புகார்கள் சென்று, சமீபத்தில் அனிதாவை அழைத்து கடுகடுத்ததாம் கட்சித் தலைமை.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறையில் அனிதாவின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால், அந்தத் துறையை வேறு யாருக்காவது ஒதுக்கலாமா என்று முதல்வரே யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். போதாக்குறைக்கு, தன் குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறை விசாரணையை நினைத்தும் கலங்கிப்போயிருக்கிறாராம் அனிதா. வழக்கமாக, தனது பிறந்தநாள் என்றால் புன்னகை பூத்த பூவாக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், செப்டம்பர் 19-ம் தேதி, தனது 69-வது பிறந்தநாளன்று உற்சாகமின்றியே காணப்பட்டாராம்.

‘‘மாவட்டச் செயலாளர் பதவி என்ன அவர்களின் குடும்பச் சொத்தா?’’

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வயது மூப்பின் காரணமாக, கட்சிப் பொறுப்புகளிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கலாம் என்று நினைக்கிறாராம். தான் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவியைத் தன் மகன் ஜவஹர்லால் நேருவுக்கே கைமாற்ற நினைப்பவர், இதற்காக வைத்திலிங்கம், தங்கமணி மூலமாகக் காய்நகர்த்தத் தொடங்கியிருக்கிறாராம்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

இப்போதே ஜவஹருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துவிட்டதுபோல அவரைப் புகழ்ந்து சமூக வலைதளங்களைத் திணறடித்துவருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ‘‘மாவட்டச் செயலாளர் பதவி என்ன அவர்களின் குடும்பச் சொத்தா?’’ என்று புறநகர் மாவட்டச் செயலாளர் குமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் ஆவின் கார்த்திகேயன் ஆகியோர் தரப்பு இப்போதே போர்க்கொடி தூக்கியிருப்பதுடன், எதிர்ப்பு குரலுக்காகத் தங்கள் பக்கம் ஆதரவாளர்களையும் திரட்டிவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தப்பு செஞ்சா நடவடிக்கை எடுங்க!’’
வியர்த்து விறுவிறுத்த அமைச்சர்

பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவரும் வனத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரனின் தம்பி கணேசமூர்த்தியை மையமாகவைத்து, அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளைச் சரிக்கட்டிவிட்டு, கோத்தகிரியிலுள்ள தனது நிலத்தில் தடையை மீறி சட்டவிரோதமாகப் பாறைகளை உடைத்திருப்பதாக கணேசமூர்த்தி மீது புகார்கள் எழுந்துள்ளன.

`சசிகலாவின் டெல்லி பேச்சுவார்த்தை; அமைச்சர்களுக்கு ஒத்துவராத ஐ.ஏ.எஸ்  அதிகாரிகள்' கழுகார் அப்டேட்ஸ்

ஊட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்ப, ‘‘விதிமீறலெல்லாம் ஒண்ணும் கிடையாது. கலெக்டர் முன்னாடியே சொல்றேன். தப்பு செஞ்சுருந்தா எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க’’ என்று ஊட்டி குளிரிலும் வியர்த்து விறுவிறுக்க ஆவேசமாகப் பேசிவிட்டு வண்டியேறிக் கிளம்பிவிட்டார்.

‘‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி!’’

கொடநாடு கொலை, கொள்ளைக்கும் அந்த எஸ்டேட்டுக்கும் எந்தத் தொடர்புமே இல்லாததைப்போல எஸ்டேட் நிர்வாகம் அழுத்தமாக இருப்பதே விசாரணைக்குழுவுக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நழுவிவரும் எஸ்டேட் மேனேஜர் நடராஜின் மீது எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்கிறது விசாரணைக்குழு. இந்தநிலையில், கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த இரண்டு மாதங்களில் கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கை தூசுதட்டியெடுத்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

கொடநாடு
கொடநாடு

‘கொடநாடு கொலை, கொள்ளைக்கும் தினேஷ்குமார் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது’ என்று வெளியில் பேசப்பட்டாலும், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் `தற்கொலை’ என்றே இந்த வழக்கு முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் மறுவிசாரணையைக் கேள்விப்பட்ட எஸ்டேட் நிர்வாகம் கலக்கத்தில் இருக்கிறதாம். ‘‘விசாரணைக்கு சரியா பிடிகொடுக்காம வக்கீலைவெச்சு எஸ்கேப் ஆகிட்டே இருக்கார் எஸ்டேட் மேனேஜர். அவருக்குப் பொறிவைக்கவே இந்த கேஸை மறுவிசாரணை பண்றோம்’’ என்கிறார் விசாரணை அதிகாரிகளில் ஒருவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு