Published:Updated:

கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்...

``மெயில் இன்பாக்ஸை செக் செய்யவும்” என்று வாட்ஸ்அப் அனுப்பியிருந்தார் கழுகார்... வழக்கம்போல இன்பாக்ஸை நிறைத்திருந்தன `பரபர’ தகவல்கள்!

கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!

``மெயில் இன்பாக்ஸை செக் செய்யவும்” என்று வாட்ஸ்அப் அனுப்பியிருந்தார் கழுகார்... வழக்கம்போல இன்பாக்ஸை நிறைத்திருந்தன `பரபர’ தகவல்கள்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்...
கொம்பு சீவும் நேரு...
அப்செட்டில் எம்.எல்.ஏ!

திருச்சி மாவட்ட தி.மு.க-வில் ஆரம்பத்தில் நேருவின் ஆதரவாளராக இருந்த ஸ்டாலின் குமார், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நேருவின் ஆசியால், சீட்டு வாங்கி வெற்றிபெற்றார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நேருவின் எதிர்முகாமைச் சேர்ந்த அன்பில் மகேஷுடன் கைகோத்தவர், அவரின் ஆதரவுடன் இரண்டாவது முறையும் சீட் வாங்கி துறையூர் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால், கடுப்பான நேரு தரப்பு, ஸ்டாலின் குமாருக்கு நெருக்கடி கொடுக்க, அவரது சமூகத்தைச் சார்ந்த அகில இந்திய மறுமலர்ச்சிக் கட்சியின் தலைவர் பொன்.முருகேசனுக்கு கொம்பு சீவிவிடுகிறதாம். இதை ஜூனியர் அமைச்சர் தரப்பும் கண்டுகொள்வதில்லை என்பதால் அப்செட்டில் இருக்கிறார் ஸ்டாலின் குமார்!

கமிஷனருடன் மோதும் தஞ்சை எம்.எல்.ஏ!

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் மற்றும் 100 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான டெண்டரை வெளிப்படையாக நடத்துவதற்கு, தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார் நடவடிக்கை எடுத்துவருகிறார். ஆனால், ஆளுங்கட்சியின் உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர், கடைகளை வாங்கித் தருவதாகக் கூறி கடை ஒன்று பத்து லட்டுகளைக் கறந்துவிட்டாராம்.

கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த  துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!

ஆனால், `அவர்களுக்கெல்லாம் கடைகளைக் கொடுக்க முடியாது; வெளிப்படையான டெண்டரில்தான் கடைகளை ஒதுக்க முடியும்’ என்று மாநகராட்சி கமிஷனர் கறார் காட்டுவதால், ‘நீங்க இங்க இருந்தாதானே பிரச்னை பண்ணுவீங்க... உங்களையே மாத்திடுறேன்’ என்று சவால் விட்டிருக்கிறாராம் ‘நீலமான’ அந்த எம்.எல்.ஏ. விவகாரம் இப்போது கோட்டை வரை வெடித்திருக்கிறது!

ஸ்டாலினுக்கு ரெட் கார்டு!

சென்னை ஓமந்தூரார் வளாகத்தில், கடந்த தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம், தற்போது பல்நோக்கு மருத்துமவனையாகச் செயல்படுகிறது. ‘புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் சட்டமன்றம் செயல்பட வேண்டும்’ என்ற கருணாநிதியின் நீண்டநாள் கனவை, இந்த ஆட்சியில் செயல்படுத்திவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தாராம்.

ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை

ஆனால் மேடம் தரப்பிலோ, “அதெல்லாம் வேண்டாங்க... ஜோசியர்கள் அந்தக் கட்டடம் நமக்கு ராசி இல்லைன்னு சொல்லிட்டாங்க’ என்று ரெட் கார்டு போட்டுவிட்டதால், சட்டமன்றத்தை மாற்றும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கலெக்டரை காக்கவைத்த துரைமுருகன்!

`வேலூர் மாவட்டத்தில் அரசு ஆய்வுக் கூட்டங்களில் ஆளும்கட்சியினரின் அலம்பல் தாங்க முடியவில்லை’ என்று புலம்புகிறார்கள் அரசு அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு என்று போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துகொள்ளும் கட்சி நிர்வாகிகள், டெண்டர் உள்ளிட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார்களாம்.

துரை முருகன்
துரை முருகன்

இப்படித்தான், ஜூலை 28-ம் தேதியன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்திலும் உடன்பிறப்புகளே ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு, அதிகாரிகளைத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்ல... சமீபத்தில் துறைரீதியாக ஆலோசனையைப் பெறுவதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியரான குமாரவேல் ஐ.ஏ.எஸ்., அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது முன் அறையில் கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், `தலைவரு பிஸியா இருக்கார். வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லி, கலெக்டரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டார்கள். “மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், மற்ற அலுவலர்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று நொந்துகொள்கிறார்கள் அதிகாரிகள்!

அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு
வனத்துறை அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவரது சொந்த மாவட்டமான நீலகிரியில், அவர் சார்ந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சமீபத்தில் படுகர் சமுதாயத்தைச் சார்ந்த சரவணகுமார் என்ற உதவி வனப் பாதுகாவலருக்கு குன்னூர், கோத்தகிரி, கட்டப்பெட்டு, கீழ்கோத்தகிரி வனச்சரகங்களில் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு ஆணை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

அமைச்சரின் வீடு, எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் இந்தச் சரகங்களைச் சுற்றித்தான் இருக்கின்றன என்பதால், அவற்றைப் பார்த்துக்கொள்வதற்காகவே இந்தக் கூடுதல் பொறுப்பு என்று காதைக் கடிக்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்!

அமைச்சருடன் மோதும் எம்.எல்.ஏ!

சென்னைக்கு அருகேயிருக்கும் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கும், ‘மூன்றெழுத்து’ எம்.எல்.ஏ ஒருவருக்கும் ஏழாம் பொருத்தம். ஆட்சி மேலிடத்தின் குடும்பத்தினரிடம் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, எப்படியாவது அமைச்சர் பதவியைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தார் எம்.எல்.ஏ. ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், அமைச்சர் பதவியைப் பிடிக்க, தற்போதைய அமைச்சர் மற்றும் அவரின் வாரிசு பற்றி மேலிடத்துக்குப் புகார் மீது புகாராக தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறாராம் எம்.எல்.ஏ. பதிலுக்கு அமைச்சர் தரப்பும் எம்.எல்.ஏ தரப்பு மாவட்டச் செயலாளர் பதவிக்குக் குறிவைத்து செய்துவரும் உள்ளடி வேலைகளைப் பற்றி ஆட்சி மேலிடத்துக்கு புகாராகச் சொல்லியிருக்கிறாராம். இருவரின் சண்டை, சச்சரவு தாங்க முடியாமல், காதைப் பொத்திக்கொள்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

கண்டிப்பு காட்டிய நீதிமன்றம்
நல்ல நாள் பார்க்கும் செந்தில் பாலாஜி!

தன்மீது தொடரப்பட்டிருக்கும் மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஏற்கெனவே பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்த செந்தில் பாலாஜி, கடந்த ஜூலை 27-ம் தேதியும் ஆஜராகாததால், `அமைச்சர் என்பதற்காக கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது’ என்று கண்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் ஏன் ஆஜராகவில்லை என்று விசாரித்தால், `ஜூலை 27-ம் தேதி உங்கள் கிரகத்துக்கு நாள் நன்றாக இல்லை. அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜரானால் சிக்கல் ஏற்படலாம்’ என்று ஜோதிடர்கள் தரப்பில் சொன்னதால்தான், அன்றைய தினம் அமைச்சர் ஆஜராகவில்லை என்று கிசுகிசுகிறார்கள் கிரீன்வேஸ் ரோடு வட்டாரத்தில். இதையடுத்து, `ஆகஸ்ட் 6-ம் தேதி நாள் நன்றாக இருக்கிறதா...’ என்று ஜோசியர்களிடம் கேட்டிருக்கிறதாம் அமைச்சர் தரப்பு!