Published:Updated:

வெங்கைய நாயுடு வைத்த வேண்டுகோள் முதல் பாஜக அரசியலால் ஒன்றான திமுக கோஷ்டிகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்அப் காலில் அழைத்த கழுகார், “வணக்கம். மெயிலை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். பறந்து பறந்து சேகரித்த தகவல்களையெல்லாம் வாசகர்களுக்காகக் குட்டிக் குட்டிச் செய்திகளாக்கி அனுப்பியிருந்தார் கழுகார். அவை அப்படியே இங்கே...

வெங்கைய நாயுடு வைத்த வேண்டுகோள் முதல் பாஜக அரசியலால் ஒன்றான திமுக கோஷ்டிகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்அப் காலில் அழைத்த கழுகார், “வணக்கம். மெயிலை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். பறந்து பறந்து சேகரித்த தகவல்களையெல்லாம் வாசகர்களுக்காகக் குட்டிக் குட்டிச் செய்திகளாக்கி அனுப்பியிருந்தார் கழுகார். அவை அப்படியே இங்கே...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
வெங்கைய நாயுடு விடுத்த வேண்டுகோள்
தி.மு.க பேச்சைக் கேட்குமா வி.சி.க?

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு தென்னிந்திய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்த வெங்கைய நாயுடு தி.மு.க-வுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தாராம். தி.மு.க மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் தங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். ‘கலைஞர் சிலை திறப்புவிழாவில் பங்கேற்றதால், தி.மு.க அவரை ஆதரிக்கலாம். நாம் எதற்கு ஆதரிக்க வேண்டும்?’ என்று நினைக்கிறதாம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. வி.சி.க-வைப்போலவே மற்ற கூட்டணிக் கட்சிகளும் இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வின் பேச்சைக் கூட்டணிக் கட்சிகள் கேட்குமா... அல்லது கூட்டணிக் கட்சிகளின் முடிவை தி.மு.க ஏற்குமா என்பதுதான் தி.மு.க கூட்டணிக்குள் இப்போது நடக்கும் முக்கியமான விவாதம்!

எனக்கென ஒரு மாவட்டம்...
பழநியை முன்வைத்து ஒரு கோஷ்டி மோதல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். டம்மி துறை வழங்கப்பட்டுவிட்டதாகக் கருதும் சீனியரின் விரக்தி மனநிலை, அவரின் கட்சிச் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறதாம். ஆனால், ஜூனியர் அமைச்சரோ கட்சிக் கூட்டம், நலத்திட்ட உதவி என்று மாஸ் காட்டுகிறாராம். மாநகராட்சி ஆக்கப்பட்டாலும், நகராட்சிக்கான வளர்ச்சியைக்கூட இன்னும் தலைநகர் திண்டுக்கல் அடையாத நிலையில், மாவட்டத்திலிருந்து பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் என வளம் கொழிக்கும் பகுதிகளைப் பிரித்து பழநி மாவட்டத்தை உருவாக்கும் கோரிக்கை தற்போது பெரிதாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பது ஜூனியர் அமைச்சர்தானாம். பழநி புதிய மாவட்டமானால், சீனியர் அமைச்சருடைய மகனின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படும். தனக்கென ஒரு மாவட்டம் என்று திட்டமிட்டு காய்நகர்த்தும் ஜூனியர் அமைச்சர், முதல்வர் குடும்பத்துடனும் நெருக்கமாக இருப்பதால், நினைத்ததைச் சாதித்துவிடுவாரோ என்று கலக்கத்தில் இருக்கிறார்கள் சீனியர் அமைச்சரின் ஆதரவாளர்கள்!

புதிய பேருந்து நிலையத்தைத் திறக்கும் முதல்வர்...
என்ன ஆனது ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை?!

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை ஜூன் 21-ம் தேதி நேரில் வந்து திறந்துவைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டபோது, நவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்படவிருப்பதாகச் சொன்னார்கள். பிரமாண்டமான மாடல் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் தோற்றமும், வசதிகளும் படுசுமாராக இருக்கின்றன.

துரைமுருகன்
துரைமுருகன்

ஏற்கெனவே, பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், “கொரோனா கிருமி பொம்மையைப்போல ஏடாகூடமாக பேருந்து நிலையத்தைக் கட்டியிருக்கிறார்கள். முறைகேடு கண்டறியப்பட்டால், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்படும்” என்று எச்சரித்திருந்தார். ‘இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை... கிழிந்த துணிக்கு ஒட்டுப்போட்டதைப்போல அவசர அவசரமாகப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். திறப்புவிழாவுக்கு வரும் முதலமைச்சர் வெறும் ரிப்பனை மட்டும் வெட்டிவிட்டுச் செல்லாமல், இந்த அலங்கோலத்துக்கான காரணத்தையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் வேலூர் மக்கள். ‘மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலும் இதுதான் நடந்தது. என்ன ஆனது ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை?!’ என்ற குரலும் வலுத்துவருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மீண்டும் கிரானைட் குவாரிகள்...
அமைச்சருக்கு செக் வைத்த முதல்வர்!

நீதிமன்றத்தின் மூலம் முடக்கப்பட்ட கிரானைட் குவாரிகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்று முட்டி மோதுகிறார்கள் கிரானைட் அதிபர்கள். அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் தென்மாவட்டத்துக்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க, அந்த குவாரி அதிபர்கள் மாவட்ட அமைச்சர் மூலம் முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்தால் சர்ச்சையாகும் என்பதால் அப்பாயின்மென்ட் தரவில்லையாம் முதல்வர்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

`கிரானைட் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்’ என்று அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தெரிவித்திருந்த நிலையில், அந்த பிராசஸையும் தற்சமயம் நிறுத்திவைக்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். முதல்வர் இப்படியொரு செக் வைப்பார் என்று அந்த அமைச்சரே எதிர்பார்க்கவில்லையாம். கோட்டையில் இருக்கும் முக்கிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் கேட்டுப் பெற்ற ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் இத்தனையும் நடக்கின்றன என்பதை அறிந்த கிரானைட் அதிபர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் செலவழித்ததை எண்ணி வருந்துகிறார்களாம்.

அடுத்த வாரிசு!
களம் இறக்கிய ஓ.பி.எஸ்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், தன் மூத்த மகன் ரவீந்திரநாத்தை எம்.பி-யாக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். இளைய மகன் ஜெயபிரதீப்பை கோயில் திருப்பணிகளுக்கென்றே நேர்ந்துவிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது அவரையும் அடுத்த அரசியல் வாரிசாகக் களமிறக்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக, தேனி மாவட்டத்தில் கட்சியினரின் இல்ல விசேஷங்கள், துக்க நிகழ்வுகள் அனைத்திலும் ஜெயபிரதீப் பங்கேற்கிறார். மேலும் இப்போது அதிமுக-வினர் அடிக்கும் அனைத்து போஸ்டர், பேனர்களிலும் ஜெயபிரதீப் படமும் இடம்பெறுகிறது.

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

இதெல்லாம் கட்சிப் பணியில் அவர் நேரடியாக ஈடுபடவிருப்பதற்கான முன்னோட்டம் என்றும், பெரியவரைவிட சின்னவர் அரசியல் செய்வதில் கெட்டிக்காரர் என்றும் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறார்கள் தேனி மாவட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். ஒற்றைத் தலைமை கோஷத்தால் தன்னுடைய பதவியே ஆபத்தில் இருக்கும் நேரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இந்தப் பேராசை தேவையா என்று கேட்கிறார்கள் ர.ர.க்கள்!

பா.ஜ.க-வின் அரசியல் விளையாட்டு...
குமரியில் ஒன்றான இரு துருவங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம்பிடித்து இழுக்கக் கூடாது என்று பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள். பா.ஜ.க-வினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தேர் வடம்பிடித்தார் மனோ தங்கராஜ். அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க-வைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க மத அரசியல் செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் வெளியிட்ட சூடான அறிக்கைக்கு நல்ல வரவேற்பு.

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்
தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன்

எதிரெதிர் கோஷ்டியாக இருந்த நிலையில், மனோ தங்கராஜுக்கு ஆதரவாக சுரேஷ் ராஜன் திடீரென அறிக்கைவிட்டது தி.மு.க தொண்டர்களை ஆச்சரியப்படவைத்திருக்கிறது. குமரி மாவட்ட தி.மு.க-வில் எதிரும் புதிருமாக இருந்த மனோ தங்கராஜையும், சுரேஷ் ராஜனையும் ஒன்று சேர்த்ததுதான் பா.ஜ.க-வின் அரசியல் விளையாட்டால் நடந்த ஒரே நல்ல விஷயம் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் தி.மு.க-வினர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொறுப்பு அமைச்சருக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள்...
கோவையைச் சுற்றும் கோஷ்டிப் புயல்!

கோவை தி.மு.க-வைப் பொறுத்தவரை தி.மு.க மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று அமைப்புரீதியாக ஐந்து மாவட்டங்களாக இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் தோல்வி, உட்கட்சிப் பூசல் காரணமாக இதை மூன்றாக இணைக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. மாவட்டங்களை இணைப்பது தொடர்பாக அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய கமிட்டியைப் போட்டது தி.மு.க தலைமை. ஆனால் இந்தக் குழுவினருக்கும், கோவை பொறுப்பு அமைச்சருக்குமான உறவு ஏழாம் பொருத்தமாக இருக்கிறதாம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ஆரம்பத்திலிருந்தே நேரு, ராசா உள்ளிட்டோர் பொறுப்பு அமைச்சரின் அரசியலை எதிர்த்துவரும் நிலையில், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் அந்த அணியில் சேர்ந்துவிட்டார்களாம். மாவட்ட இணைப்பு விஷயத்தில் பொறுப்பு அமைச்சர் என்ன யோசிக்கிறாரோ அதற்கு நேர் எதிரான ட்ராக்கில் அவர்கள் பயணிக்கிறார்களாம். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர் தலைமைக்கு நெருக்கமாகிக் கொண்டிருப்பதாலேயே, அவருக்குச் செக் வைக்கும் வேலைகள் வேகமெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

போலீஸ் டி.ஜி.பி இல்லத் திருமணம்...
அரசு ஊழியர்களைப் புறக்கணித்த அமைச்சர்கள்!

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க 76-வது ஆண்டுவிழா, ஜூன் 13-ம் தேதி நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்தனர், மருத்துவம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனும். மாலை 4:30 மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிகழ்வு, அமைச்சர்களின் வருகைக்காக 5:30 மணிவரை தாமதப்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரமாக நிகழ்ச்சி தொடங்காததால், தலைமைச் செயலகப் பணியாளர்கள் பிரச்னை கிளப்பவே, வேறு வழியின்றி 5.35 மணிக்கு விழா தொடங்கப்பட்டது.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்
விகடன்

நிகழ்ச்சிக்கு யாராவது ஒரு சிறப்பு விருந்தினர் தேவை என்று, பொதுத்துறை சிறப்புச் செயலாளர் கலையரசி ஐ.ஏ.எஸ்-ஐ அவசரமாக அழைத்துவந்தனர். விழாவில் பேசிய தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, “முதல்வரிடமிருந்து அவசர அழைப்பின் காரணமாக அமைச்சர்கள் இருவரும் சென்றுவிட்டனர்” என்று சமாளித்தார். ஆனால், உண்மை அது இல்லையாம். ‘டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் மகன் திருமண நிகழ்வு, கிண்டி ஐ.டி.சி ஹோட்டலில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காகவே, நேரம் கொடுத்தும் அரசு ஊழியர்களின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்’ என்கிறார்கள் அரசுப் பணியாளர்கள்!

ஓராண்டில் ஆறு லாக்கப் டெத்!
சி.பி.சி.ஐ.டி விசாரணையின் பின்னணி...

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த ஜூன் 13-ம் தேதியன்று விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது மரணமடைந்தார். காவல்துறையினரின் தாக்குதலில் அவர் மரணமடைந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில் தஞ்சையில் சத்தியவான், ராமநாதபுரத்தில் மணிகண்டன், சேலத்தில் பிரபாகரன், திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் முன்பு விக்னேஷ், இப்போது ராஜசேகர் என ஆறு பேர் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர்.

‘ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணங்களுக்காகப் பொங்கியவர்களின் வாய்கள் இப்போது ஏன் அமைதி காக்கின்றன?’ என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகளை வம்பிழுக்கும் வகையில் அ.தி.மு.க ஐடி விங் பதிவுகளைப் போட்டுவருகிறது. பா.ஜ.க-வோ சலங்கைகட்டி ஆடுகிறது. தங்களுக்கு பயந்தே கொடுங்கையூர் விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism