Published:Updated:

சசிகலா சேலம் பயணம்... ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: வாரிசைக் களமிறக்கும் அமைச்சர் அனிதா; முதல்வர் ஸ்டாலின் தெரிந்துதான் செய்தாரா?; முகம் சுளிக்கவைத்த `கானா’ பேச்சு...; “தலைவர் பதவிக்கு மரியாதையே இல்லை!”

சசிகலா சேலம் பயணம்... ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: வாரிசைக் களமிறக்கும் அமைச்சர் அனிதா; முதல்வர் ஸ்டாலின் தெரிந்துதான் செய்தாரா?; முகம் சுளிக்கவைத்த `கானா’ பேச்சு...; “தலைவர் பதவிக்கு மரியாதையே இல்லை!”

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
மானியக் கோரிக்கையில் பரிசு கிடையாது!
நிதியமைச்சர் அட்வைஸ்... ஏற்றுக்கொண்ட முதல்வர்!

தமிழக சட்டசபையில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது, அந்தந்தத் துறை சார்பாக தங்கள் துறை அலுவலர்களுக்கு ஸ்பெஷல் உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை அப்படி எதுவும் வழங்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது.

கழுகார்
கழுகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவரும்போது, இது போன்ற செலவுகள் வேண்டாம்” என்ற நிதியமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்தே முதல்வர் அலுவலகம் இப்படியொரு முடிவை எடுத்ததாம்!

நெருக்கும் வழக்குகள்...
வாரிசைக் களமிறக்கும் அமைச்சர் அனிதா!

அமலாக்கத்துறை நெருக்கடிகள், கட்சித் தலைமையின் குட் புக்கில் இல்லாதது எனத் தன்னைச் சுற்றிப் பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் நிலையில், தற்போது திடீரெனத் தன் மூன்றாவது மகன் ஆனந்த மகேஸ்வரனைக் கட்சியில் களமிறக்கியிருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூர் தொகுதி மற்றும் தி.மு.க தெற்கு மாவட்ட எல்லைக்குள் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் ஆனந்த மகேஸ்வரன் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அந்த நிகழ்ச்சிகளுக்காக அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களிலும் ‘இளைய தெற்கு மாவட்டமே...’, ‘இளைய அண்ணாச்சியே...’ என்றெல்லாம் கெத்துகாட்டுகிறார்கள் அனிதாவின் விழுதுகள். கடந்த 30 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அரசியலில் நுழைய அனுமதிக்காமல் கண்டிப்பாக இருந்த அனிதா, தற்போது முதன்முறையாக தன் வாரிசைக் களமிறங்கியிருப்பதுதான் இந்த விஷயத்தைப் பலரையும் கவனிக்கவைத்திருக்கிறது.

இது பற்றிப் பேசும் உள்ளூர் உடன்பிறப்புகள், “அண்ணன் சில மாதங்களாகவே கவலையில் இருக்காரு. வழக்கு விவகாரங்களில் தன்னோட அரசியல் எதிர்காலத்துக்குப் பிரச்னை ஏற்பட்டா, அடுத்ததா தன் குடும்பத்துக்கு ஒரு பிடி வேணும்னு நினைக்கிறாரு. அதனாலதான் அவரோட மகனை திடீர் என்ட்ரி கொடுக்கவெச்சுருக்காரு. தவிர, ஆனந்த மகேஸ்வரனுக்கு இளைஞரணியில் முக்கியப் பதவியை வாங்குறதுக்கும் காய்நகர்த்திக்கிட்டிருக்காரு. தூத்துக்குடியில அமைச்சர் கீதா ஜீவன், தன்னோட தம்பி ஜெகனை மேயர் பொறுப்புல உட்காரவெச்சதும், அனிதாவோட கண்ணை உறுத்திடுச்சு. அதுவும் இதுக்கு ஒரு காரணம்” என்கிறார்கள்!

மீண்டும் மீண்டும் அடிக்கல்...
முதல்வர் ஸ்டாலின் தெரிந்துதான் செய்தாரா?

விழுப்புரம் மாவட்டத்துக்கு ஏப்ரல் 5-ம் தேதி வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்துவைத்துவிட்டு, ஒழுந்தியாம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர், திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பம் சென்ற ஸ்டாலின், 500 கோடி ரூபாயில் அமையவிருக்கும் ஷூ தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், இதே தொழிற்சாலைத் திட்டத்துக்கு கடந்த மாத இறுதியில் மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமாரும், அமைச்சர் செஞ்சி மஸ்தானும் சென்று அடிக்கல் நாட்டியிருந்தார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தச் சம்பவம்தான் தற்போது திமுக-வினர் மத்தியில் விவாதமாக உருவெடுத்துள்ளது. ‘‘ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்துக்கு முதல்வரை வைத்து மீண்டும் அடிக்கல் நாட்டியது சரியா... முதல்வருக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன், அதற்கான அரசாங்கச் செலவுகளும் வீண்தானே?’’ என்று கேள்வி கேட்கும் ஏரியாவாசிகள், ‘‘இதை முதல்வர் தெரிந்துதான் செய்தாரா... இல்லை அமைச்சர் மறைத்துவிட்டாரா?’’ என்றும் முணுமுணுக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இந்த வயசுல இப்படியொரு பேச்சு தேவையா?
முகம் சுளிக்கவைத்த ‘கானா’ பேச்சு...

சமீபத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து நெல்லையில் நடந்த போராட்டத்தில் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ‘‘அந்தப் பெண் கவுன்சிலருக்கு மண்டலத் தலைவர் பொறுப்பைக் கொடுக்க, என்ன மேஜிக் செய்தீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அந்தப் பெண் கவுன்சிலரைப் பார்ப்பதுபோல மாநகராட்சி சாலைகளையும் பார்த்து சரி பண்ணுங்க’’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கழுகார்
கழுகார்

அவரது இந்தப் பேச்சை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க-வினரே ரசிக்கவில்லை. ‘‘சில வருஷத்துக்கு முன்னாடி இவர் தி.மு.க-வுல இருந்தப்ப, அவரின் பேத்தி வயசுடைய ஒரு பொண்ணுகிட்ட பிரச்னை செஞ்சு, அந்தப் பொண்ணு அவர்மேல போலீஸில் புகார் கொடுத்தார். இப்போ திரும்பவும் அண்ணாச்சி ஆரம்பிச்சிட்டார்... அவர் வயசுக்கும், அரசியல் அனுபவத்துக்கும் பேசுற பேச்சா இது!” என்று கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்களே முகம் சுளிக்கிறார்கள்!

சசிகலா சேலம் பயணம்...
ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட சசிகலா ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் சேலத்தில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்கிறார். தாரமங்கலம் சிவன் கோயில், கந்தாஸ்ரமம் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்வதுடன், தன் ஆதரவு நிர்வாகிகளைச் சந்திக்கவும் சசிகலா திட்டமிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று கூறப்படும் நிலையில், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், சசி ஆதரவாளர்களுக்கு போன் செய்து ‘‘எல்லோரும் சேலத்துக்கு வாங்க... சின்னம்மாவுக்குப் பெரிய அளவுல வரவேற்பு கொடுக்கணும்’’ என்று பேசியிருக்கிறார்.

சசிகலா
சசிகலா

பதிலுக்கு அவர்களோ, ‘‘எங்ககிட்ட செலவுக்குப் பணம் இல்லை. சின்னம்மாவும் எதுவும் தர்றதில்லை. எவ்வளவு நாளைக்குத்தான் கைக்காசை செலவு செய்யறது?’’ என்று புலம்பியிருக்கிறார்கள். இதைக் கேட்ட கார்த்திகேயன், “சின்னம்மாகிட்ட விஷயத்தைச் சொல்றேன்” என்றாராம் குரலில் சுரத்தே இல்லாமல்!

“தலைவர் பதவிக்கு மரியாதையே இல்லை!”
குன்னூரில் புலம்பும் உடன்பிறப்புகள்

குன்னூர் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தன் மகன் வாசிம் ராஜாவை நகராட்சித் துணைத் தலைவராக ஆக்கியிருக்கிறார் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக். இந்த நிலையில், நகராட்சித் தலைவர் ஷீலா கேத்ரினை, துணைத் தலைவர் நிற்கவைத்தே பேசுவதாகப் புகார் எழுந்துள்ளது. தவிர, நகராட்சித் தலைவரை ஒதுக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களுடன் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும் வாசிம் ராஜா, போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை மீடியாக்களில் வெளியிட்டுவருகிறார். இது பற்றிப் பேசும் குன்னூர் உடன்பிறப்புகள், ‘‘பதவியேற்று ஒரு மாசம்தான் ஆகுது.

சசிகலா சேலம் பயணம்... ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

அதுக்குள்ள இவரே தலைவர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கிட்டார்‌. முக்கியமான முடிவையெல்லாம் இவர்கிட்டதான் சொல்லணும்னு நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவு போட்டிருக்கிறார். மாவட்டச் செயலாளரோட மகன்கிறதால நகராட்சிப் பெண் தலைவரும் அமைதியாக ஒதுங்கிட்டாரு. நகராட்சித் தலைவர் என்கிற பதவிக்கு மரியாதையே இல்லாமப் போச்சு’’ என்று முணுமுணுக்கிறார்கள்!

செந்தில் பாலாஜிக்கு ஏன் முக்கியத்துவம்?”
கடுப்பில் சீனியர் அமைச்சர்கள்

கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த தொழில் நிறுவனங்களை மீட்க, குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு நன்றி சொல்வதற்காக, கோவை கொடிசியா கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், ஏப்ரல் 8 அன்று முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இருந்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதையடுத்து, “இது என்ன கட்சி நிகழ்ச்சியா... தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன வேலை... எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் எப்படி... செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?” என்று இதர இரண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் அடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism