Published:Updated:

`துரைமுருகனுக்கு டோஸ்விட்ட முதல்வர் தொடங்கி செல்லம் கொஞ்சும் அ.தி.மு.க மாஜி வரை!'- கழுகார் அப்டேட்ஸ்

``மழையில் மாட்டிக்கொண்டேன்... செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார்... வாட்ஸ்அப்பை நிறைத்திருந்தன `பரபர' செய்திகள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அண்ணனோட பினாமின்னா சும்மாவா!''
கண் சிமிட்டும் கரூர் உடன்பிறப்புகள்...

கரூர் மாவட்டத்தில், கடவூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளராகவும், கடவூர் ஒன்றியத் தலைவராகவும் இருந்தவர் செல்வராஜ். சென்னை மெட்ரோ ஒப்பந்தப் பணிகள் வரை எடுத்து செய்துவரும் இவர், சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தி.மு.க-வில் இணைந்தார். இவர் கட்சியில் இணைந்ததிலிருந்தே சர்ச்சையில் சிக்கிவருவதாக முணுமுணுக்கிறார்கள் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள். கட்சியில் பெரிதாகப் பதவியே இல்லாவிட்டாலும், மாவட்டச் செயலாளர் ரேஞ்சுக்கு ஊர் ஊராகச் சென்று கட்சியினரைச் சந்தித்துக் கூட்டம் நடத்தியதைக் கண்டு கொதித்துப்போன தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள், சமீபத்தில் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தினர்.

மிஸ்டர் கழுகு: கட்டி கட்டியாகத் தங்கம்... அமலாக்கத்துறை வலையில் மாஜி!

``பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில கோடிக்கணக்குல பயிர்க்கடன் வாங்குனார்னு இவர் மேல குற்றச்சாட்டு இருக்கு. லேடி ஒருத்தங்க, அவங்களோட கணவருக்கு செல்வராஜ் கொலை மிரட்டல் விடுப்பதாகப் போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. இத்தனை சர்ச்சைகள் இருந்தும் அவரை அசைக்க முடியலை... அண்ணனோட பினாமின்னா சும்மாவா!” என்று கண் சிமிட்டுகிறார்கள் கரூர் உடன்பிறப்புகள்!

மதுரைக்காரர் மீது தனிப்பாசம்!
பொருமும் சீனியர்கள்...

சமீபத்தில் பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்துக்காக மதுரைக்குத் தனி விமானத்தில் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தன்னுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இது சீனியர் அமைச்சர்கள் மத்தியில் பொருமலை அதிகரித்திருக்கிறது. ``வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறார். சீனியர்களை மதிக்குறது இல்லை.

ஸ்டாலின் - பி.டி.ஆர்
ஸ்டாலின் - பி.டி.ஆர்

இது பத்தியெல்லாம் நாம தலைவர்கிட்ட இவ்வளவு சொல்றோம். ஆனா, தலைவர் இன்னமும் அவரைத் தூக்கிவெச்சுக்கிட்டு கொஞ்சுறாரே!” என்று தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறார்கள்!

வாய்விட்ட துரைமுருகன்
டோஸ்விட்ட ஸ்டாலின்!

``தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு அனைத்துக் கூட்டுறவுப் பதவிகளையும் கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்தப்படும். நமது கட்சியினருக்கு அதில் பதவிகள் வழங்கப்படும்” - சமீபத்தில் ஜோலார்பேட்டையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது இது. இந்தப் பேச்சால் முதல்வர் தரப்பு கடும் அப்செட் என்கிறது கோட்டை வட்டாரம்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

``உள்ளே பேசிய விஷயங்களை எதற்காக இவர் பொதுவெளியில் பேசுகிறார்... இப்படி உளறிக்கொட்டினால் கூட்டுறவு அமைப்புகளை நாம் கலைப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க-வினர் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட மாட்டார்களா?” என்று துரைமுருகனுக்கு வேண்டப்பட்ட ஒருவரிடம் சீறியிருக்கிறது முதல்வர் தரப்பு. `யதார்த்தமாகச் சொன்னது இப்படி வில்லங்கமாகிவிட்டதே...’ என்று புலம்புகிறாராம் துரைமுருகன்!

மண்ணோடு சேர்த்து மணலும் அபேஸ்...
மயிலாடுதுறை கொள்ளை!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் கனிமவளத்துறை அனுமதி பெற்றும் பெறாமலும் பத்துக்கும் மேற்பட்ட சவுடு மண் குவாரிகள் இயங்குகின்றன. இவர்கள் சவுடு மண் மட்டுமல்லாமல், ஆற்று மணலையும் அத்துமீறி எடுத்து தினந்தோறும் லட்சக்கணக்கில் கல்லாகட்டுகிறார்கள்.

சவுடு மண்
சவுடு மண்
மாதிரி படம்

தாசில்தார் தொடங்கி லோக்கல் ஸ்டேஷன் வரை இவர்கள் கரன்ஸியைப் பாய்ச்சுவதுடன், மேலிடத்து மேடம் பெயரையும், ‘கண்’ணான அமைச்சர் பெயரையும் பயன்படுத்துவதால் உயரதிகாரிகளே இவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுகிறார்களாம்!

``அது போன ஆட்சி... இது இந்த ஆட்சி!’’
கன்னியாகுமரி அட்ராசிட்டி...

``கன்னியாகுமரி கடற்கரையில் மூடப்பட்ட சில கடைகளை மறுபடியும் திறக்க அனுமதி வாங்கித்தருகிறேன்’’ என்று சொல்லி அ.தி.மு.க-வில் இருந்தபோது சிலரிடம் பணம் வாங்கியிருக்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த அழகு பிரமுகர். ஆட்சி மாறியதும், இப்போது அலேக்காக தி.மு.க பக்கம் தாவிவிட்டார் அழகன்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

தனது யூனியன் சேர்மன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவும், பணம் வாங்கியவர்களிடமிருந்து தப்பிப்பதற்குமே இப்படியொரு முடிவை எடுத்தாராம். இதையடுத்து, கடைகளுக்காகப் பணம் கொடுத்தவர்கள் ``அனுமதி எங்கே?’’ என்று கேட்டால், மீண்டும் வெயிட்டாக ஒரு தொகையைக் கேட்கிறாராம். கேட்டால், ``அது போன ஆட்சி... இது இந்த ஆட்சி!’’ என்கிறாராம் அழகுப் பிரமுகர்!

மலைக்கோட்டை மாநகர் யாருக்கு?
அ.தி.மு.க-வில் களைகட்டும் மா.செ ரேஸ்!

மாநகராட்சித் தேர்தல் நெருங்குவதால், ‘சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்ய வேண்டுமா?’ என்று தனது வயது முதிர்வைக் காரணம் காட்டி, கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கியிருக்கிறார் திருச்சி அ.தி.மு.க மாநகர, மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மா.செ பதவியைப் பிடிக்க மாணவரணி மாவட்டச் செயலாளர் `ஆவின்’ கார்த்திகேயனும், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசனும் முட்டிமோதுகிறார்கள்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

இடையே, வெல்லமண்டியின் மகன் ஜவஹரும் மாவட்டச் செயலாளர் ஆசையில் காய்நகர்த்துவதால், திருச்சி மாவட்டத்தில் பஞ்சமில்லாமல் தொடர்கின்றன உள்ளடி வேலைகள். `ஆவின்’ கார்த்திகேயன் எடப்பாடியின் ஆதரவாளராக இருக்கும்நிலையில், பன்னீரின் ஆதரவாளராக இருந்த சீனிவாசனும் அடிக்கடி தனது காரை சேலத்துப் பக்கம் திருப்பியிருக்கிறார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர் ரேஸ் திருச்சியில் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``என் குட்டியில்ல... என் கண்ணுல்ல...’’
கசிந்த ஆடியோ... அதிர்ந்த அ.தி.முக மாஜி!

``நான் அங்கே வர்றது... சென்னைக்கு வந்து உங்களைப் பார்த்துட்டுப் போனது... எல்லாம் தெரிஞ்சுபோச்சு. புள்ளைங்க முன்னாடி அத்தனை பேச்சுப் பேசிட்டாங்க’’ என்று அந்தப் பெண் அழுகிறார். மறுமுனையிலோ, ``என் குட்டியில்ல... என் கண்ணுல்ல...’’ என்று கொஞ்சியபடியே ஆறுதல் சொல்கிறது ஓர் ஆண் குரல். மறுபடியும் அந்தப் பெண், ``பெட்ரோல் பங்க்லயும் வருமானம் இல்லை’’ என்று அழுகிறார். சமீபத்தில் அ.தி.மு.க முகாமில் கசிந்திருக்கும் ஆடியோ பேச்சுத்தான் இது.

`திருமாவிடம் கறார் காட்டிய முதல்வர்; ஹெச்.ராஜாவைக் கண்டு அலறும் பாஜக சீனியர்கள்!' கழுகார் அப்டேட்ஸ்

ஏற்கெனவே கடந்த ஆட்சியில் பெட்ரோல் பங்க் பிரச்னை தொடர்பாக ஒரு எஸ்.ஐ-யை மாற்றும்படி மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்டிருந்தார் அந்த முன்னாள் அமைச்சர். அந்த பிரச்னையைத்தான் உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இப்போதும் அந்தப் பெண், மாஜியின் போன் பேச்சைக் கசியவிட்டிருக்கிறாராம். தொடர்ந்து, மாஜியின் `கிருஷ்ண லீலைகள்’ ஒவ்வொன்றாக வெளியே வரும் என்று வந்திருக்கும் தகவலால் ஆடிப்போயிருக்கிறாராம் அந்த மாஜி!

``எம்.எல்.ஏ மேடம் ரொம்ப பிஸி!’’
செங்கல்பட்டில் புலம்பும் உடன்பிறப்புகள்...

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ ஒருவர் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது வீட்டைவிட்டே வெளியே வரவில்லையாம். பிரசாரத்துக்கு அமைச்சர் வந்தபோது மட்டும் தலையைக் காட்டியவர், அதன் பிறகு வீட்டுக்குள் சென்று கதவுகளை அடைத்துக்கொண்டாராம். கட்சியின் வேட்பாளர்கள் வீட்டுக்கு வந்து கூப்பிட்டால்கூட, ``மேடம் பிஸி... மேடம் வீட்டுல இல்லை...’’ என்கிறரீதியிலேயே பதில்கள் வந்தனவாம். இதற்கிடையே, தொழிலதிபராக இருக்கும் எம்.எல்.ஏ-வின் கணவரும், மாவட்ட அளவிலான கட்சிப் பதவிக்காக காய்நகர்த்திவருகிறார். இதைப் பார்த்த உடன்பிறப்புகளோ, ``பதவியை வாங்கிட்டு மனைவி பத்திரமா வீட்டுக்குள்ள பதுங்கிட்டாங்க... கணவருக்குப் பதவி கொடுத்தால், அவர் கம்பெனியில பிஸியாகிடுவார்... கட்சியை கவனிக்குறது யாரு?’’ என்று புலம்புகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு