Published:Updated:

`முதல்வர் காசோலைக்கே பணமில்லை... முகம் திருப்பிய பொன்முடி!' - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

அதிகாலையிலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். ``மார்கழி ஆரம்பித்ததுமே குளிரும் அதிகமாகிவிட்டது. மெயிலில் செய்திகள் அனுப்பியிருக்கிறேன்.’’ மெயிலில் கொட்டிக்கிடந்தன கழுகாரின் செய்திகள்...

``முதல்வர் காசோலைக்குப் பணம் தர முடியாது!”
ஷாக் கொடுத்த வங்கி நிர்வாகம்...

திருத்தணியில் டிசம்பர் 15-ம் தேதியன்று மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு முதல்வர் கையால் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை வங்கியில் கொடுத்தபோது, ‘‘இந்தக் காசோலைக்குப் பணம் தர முடியாது.

இது முதல்வர் நிகழ்ச்சிக்காக மட்டுமே கொடுக்கப்பட்டது’’ என்று வங்கி நிர்வாகம் கூறியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுயஉதவிக் குழுப் பெண்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட, விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை சென்றிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`முதல்வர் காசோலைக்கே பணமில்லை... முகம் திருப்பிய பொன்முடி!' - கழுகார் அப்டேட்ஸ்

`என்னதான் நடந்தது?’ என்று விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம்.

சென்னை கூட்டுறவு சங்கத்தில் ரெய்டு...
விசாரணை வளையத்தில் சேலம் ‘நிழல்’ பிரமுகர்!

சென்னை தி.நகரில் இருக்கும் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகம், தி.நகர் கிளை ஆகியவற்றில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதன் பின்னணியை விசாரித்தால், ‘‘வங்கி என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு நீதிமன்றமும், மத்திய அரசும் கடிவாளம் போட்டிருக்கின்றன. அதன் பிறகும், அதே பெயரில் சங்கம் செயல்பட்டுவருகிறது.

கூட்டுறவு சங்கம் என்பதால் வங்கிகளைப்போல லட்சக்கணக்கில் பணம் பெறக் கூடாது. செக் மூலமாகவே சேவை வழங்க வேண்டும். அதையெல்லாம் மீறியிருக்கிறார்கள். அதேபோல, பண மதிப்பிழப்பு நேரத்தில் கோடிக்கணக்கில் பணம் இங்கிருந்து மாற்றப்பட்டிருக்கும் தகவலும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்திருக்கிறது. அதனாலேயே சோதனை நடத்தப்பட்டது’’ என்கிறார்கள். இந்த விவகாரத்தில் சேலத்து வி.வி.ஐ.பி-யின் நிழலானவருக்குத் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கப்படுகிறதாம்.

செல்லப்பாண்டியன் மகன்மீது குண்டர் சட்டம்...
அரசியல்ரீதியான பழிவாங்கலா?

தூத்துக்குடி அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகன் ஞானராஜ் ஜெபசிங்கை முந்திரி லாரியைக் கடத்திச் சென்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ். இதற்குப் பின்னால் மற்றொரு காரணத்தையும் சொல்கிறார்கள். ‘‘லாரியைக் கடத்திச் சென்றால், கடத்தல் அல்லது திருட்டு வழக்கு போடலாம்.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்

ஆனால், குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியதால்தான் இது அரசியல்ரீதியான பழிவாங்கல் என்று சொல்கிறோம். பொதுவாக செல்லப்பாண்டியன் கட்சிக் கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தி.மு.க-வையும், ஸ்டாலினையும் ஒருமையில் கடுமையாக வசைபாடுவார். தற்போதும்கூட, உள்ளூர் அமைச்சர்களான கீதா ஜீவனையும் அனிதா ராதாகிருஷ்ணனையும் விட்டுவைப்பதில்லை. இதையடுத்து, தூத்துக்குடியில் வரும் மாநகராட்சித் தேர்தலில், அவரது ஆக்டிவ் அரசியலுக்கு செக் வைக்கும்விதமாகவே அவரின் வாரிசுமீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

முறைகேட்டில் சிக்கிய ‘அரசு’ அதிகாரி...
மீண்டும் மதுரைக்கு வந்தது எப்படி?

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட முறைகேட்டில் முக்கியமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மாநகராட்சி அதிகாரி அவர். பல்வேறு குற்றச்சாட்டுகளால் பதவியிறக்கம் செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், உள்ளூர் வி.ஐ.பி-யை வெயிட்டாக கவனித்து, மீண்டும் மதுரை மாநகராட்சிக்கே வந்து, அதே பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்.

மதுரை
மதுரை

இதைப் பார்த்து சக அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். ‘‘எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கட்சியின் அதிகாரப்புள்ளிகளுடன் ஒட்டிக்கொண்டு காரியத்தைச் சாதித்துக்கொள்வதில் வல்லவர் இவர். மாநகராட்சிக்கு எந்த கமிஷனர் வந்தாலும், அவர்களை டம்மியாக்கிவிட்டு இவர்தான் ஆக்டிங் கமிஷனராகச் செயல்படுவார். திட்டப்பணிகளில் கமிஷனைக் கறப்பதில் வல்லவரான இவர்மீது பல்வேறு புகார்கள் இருக்கும் நிலையில் மதுரை மாநகராட்சியில் மீண்டும் அவரது ஆட்டம் தொடங்கிவிட்டது” என்கிறார்கள்.

பையா கிருஷ்ணனின் கோபத்துக்குக் காரணம் என்ன?
 பையா கிருஷ்ணன்
பையா கிருஷ்ணன்
தி.விஜய்

கோவை மாவட்ட அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு ஆட்களைச் சேர்க்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துவருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால், செந்தில் பாலாஜியின் இந்த மூவை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான பையா கிருஷ்ணன் விரும்புவதில்லையாம். ஏற்கெனவே, தேர்தலுக்கு முன்பு கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் தி.மு.க-வில் இணைந்த நிலையில், தற்போது கோவை முன்னாள் எம்.பி நாகராஜனும் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இருவருமே பையா கிருஷ்ணனின் மேற்கு மாவட்டத்துக்குள் வருபவர்கள். இவர்கள் இருவரும் பையா கிருஷ்ணனின் சமுதாயம் என்பதால், எங்கே தனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அதிருப்தியில் இருக்கிறாராம் பையா கிருஷ்ணன். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியும் சரி... தி.மு.க தலைமையும் சரி... பையா கிருஷ்ணனின் கோபத்தைச் சட்டை செய்வதில்லையாம்!

புதிய கல்விக்கொள்கைக்கு புகழ் மாலை...
முகத்தைத் திருப்பிக்கொண்ட பொன்முடி!

சில நாள்களுக்கு முன்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்புவிழா நடந்தது. அதில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘பாரம்பர்யத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் வகையிலேயே புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது’’ என்று புதிய கல்விக்கொள்கையை வரவேற்றுப் பேசினார். கடந்தகாலத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மேடையிலிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதை கவனிக்காததுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டு சமாளித்தார்.

`முதல்வர் காசோலைக்கே பணமில்லை... முகம் திருப்பிய பொன்முடி!' - கழுகார் அப்டேட்ஸ்

இன்னொரு பக்கம், இந்த விழாவில் பங்கேற்க முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் வந்தபோது அவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்காததால், கோபமாக வாசலில் நின்றுகொண்டிருந்தனர். இதை கவனித்த அமைச்சர் பொன்முடி, அவர்களை அழைத்துவந்து முன்வரிசையில் அமரவைக்கும்படி பணியாளர்களிடம் காட்டமாகச் சொன்னார். அதன் பிறகே மூவருக்கும் முன்வரிசையில் சீட் போடப்பட்டு, அமரவைக்கப்பட்டார்கள்.