Published:Updated:

கருணாநிதியின் யானைப் பாசம் முதல் ‘காட்டுராஜா’வின் வசூல் வேட்டை வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

‘‘தலைமைச் செயலகத்தில் ஒரு வேலையிருக்கிறது. உமக்கான செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கிறேன்’’ என்று சுருக்கமாகப் பேசிவிட்டு போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் நமது வாட்ஸ்அப்பை நிறைத்தன கழுகாரின் செய்திகள்.

கருணாநிதியுடன் யானை...
எங்கிருந்து வந்தது?

மறைந்த முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று வருவதால், அதற்கு முன்பாகவே சட்டமன்றத்தில் அவரது படத்தைத் திறந்துவிட வேண்டு்ம் என்பதில் உறுதியாக இருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஜனாதிபதி அலுவலகத்துக்கு இந்தத் தகவல் அழுத்திச் சொல்லப்பட்டதும், ``கண்டிப்பாக, வருவேன்” என்று பாசிட்டிவாக பதில் வந்ததுடன், சொன்னதுபோலவே தமிழக அரசு கொடுத்த தேதியில் சென்னைக்கு வந்து கருணாநிதியின் படத்தைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்.

கருணாநிதி படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!
கருணாநிதி படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்!

யானைமீது கருணாநிதி கைவைத்து நிற்கும் புகைப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியை விசாரித்தால், கருணாநிதி யானைகள் மீது மிகுந்த அக்கறைகொண்டவர் என்று அவரது இன்னொரு பக்கத்தை விவரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமாக இருந்த சிலர். இதற்குச் சாட்சியாக கோபாலபுரம் வீட்டில் வெள்ளை நிற யானையின் சிலையுடன் கருணாநிதி நிற்கும் புகைப்படத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்!

எந்தத் திட்டம் முதலில்?
தீவிர ஆலோசனையில் ஸ்டாலின்!

ஆகஸ்ட் 13-ம் தேதியன்று தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்க ஆலோசனை நடக்கிறது. பட்ஜெட் உரையில் இடம்பெறவேண்டிய விஷயங்களில் பெரும்பாலானவை, தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற விஷயங்களை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டுவருகின்றனவாம்.

கருணாநிதியின் யானைப் பாசம் முதல் ‘காட்டுராஜா’வின் வசூல் வேட்டை வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

ஆனால், திட்டங்களுக்குத் தேவையான நிதி பற்றாக்குறையாக இருப்பதால் எந்தத் திட்டத்தை முதலில் அறிவிப்பது, எதைத் தள்ளிப்போடுவது என பெரிய ஆலோசனையே நடந்துவருகிறது. தி.மு.க அரசின் 100 நாள் சாதனைகளையும் பட்டியலிட்டு, அதை விளம்பரமாகக் கொடுக்கும் திட்டமும் தமிழக அரசிடம் இருக்கிறதாம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், ஸ்டாலினின் லண்டன் பயணத்துக்கு நாள் குறிக்கப்படும் என்கிறார்கள் முதல்வர் அலுவலகத்தினர்.

‘காட்டு ராஜா’வின் வசூல் வேட்டை!

உயரமான மலையிலுள்ள ஊரின் பாரம்பர்யமான இல்லம், தற்போது ஊழல் பணம் கைமாறும் இல்லமாக மாறிவருகிறதாம். இந்தக் கட்டடத்தில் வைத்துத்தான், அந்த ஊரில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு வரைமுறை செய்து தருகிறோம் என்று `காட்டு ராஜா’ புள்ளியும், அவருக்கு நெருக்கமான நகர பிரமுகரும் லாபி செய்கிறார்கள். அந்த நகரிலுள்ள விதிமீறிக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை லிஸ்ட் எடுத்திருப்பவர்கள், ஒவ்வொரு கட்டட உரிமையாளரிடமும் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப பத்து ‘எல்’ வரை வசூலித்துவிடுகிறார்கள். கல்விக் கடவுள் பெயரைக்கொண்ட அதிகாரியின் ஒருங்கிணைப்பில் நடக்கும் இந்த டீலிங்கில், லாட்டரி அதிபரின் நண்பர் ஒருவர் புதுப்பிக்கும் ஹோட்டலுக்கு `25 எல்’ வரை கொடுத்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் இப்படி வசூல் வேட்டை நடத்துவது, ஆளும் தரப்புக்கு ஆபத்தாக மாறிவிடும் என்று அச்சப்படுகிறார்கள் கட்சியின் தொண்டர்கள்!

பெட்டிக்கடை மது விற்பனை
பஞ்சாயத்து பேசிய காக்கிகள்!

‘மயில்’ மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து இது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகே சிறிய பெட்டிக்கடையைவைத்து, டாஸ்மாக் பூட்டியிருக்கும் நேரங்களில் அதிக விலைக்கு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்தார்கள். இதில் காவல்துறையும் கணிசமான மாமூலை வசூலித்துவந்தது. தற்போது ஆட்சி மாறியதும், நகரின் முக்கிய தி.மு.க பிரமுகர்கள் இந்தத் தொழிலைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
மாதிரி படம்

இதையடுத்து, ஏற்கெனவே தொழில் செய்த அ.தி.மு.க புள்ளிகளுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்படவே, விஷயம் காவல்துறையின் கவனத்துக்குச் சென்றது. இருதரப்பையும் அழைத்துப் பேசிய காவல்துறையினர் சிலர், ``உங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா ரெண்டு பேருக்கும்தான் நஷ்டம்... அவங்க ஒரு பக்கம் தொழில் பண்ணட்டும்... நீங்க ஒருபக்கம் தொழில் பண்ணுங்க. தேவையான ஒத்துழைப்பை நாங்க தர்றோம்’’ என்று இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாம். இருதரப்பிலும் மாமூல் கொழிப்பதற்காகவே இப்படியோர் ஏற்பாடு என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் நேர்மையான காக்கிகள் சிலர்!

மாவட்டம் Vs மாநிலம்
மல்லுக்கட்டும் நெல்லை பா.ஜ.க!

நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும், மாவட்டத் தலைவர் மகாராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால், நெல்லை மாவட்ட பா.ஜ.க எதிரும் புதிருமாக, இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோதிக்கொள்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் நிர்வாகிகள் சிலரை மாவட்டத் தலைவர் மகாராஜன் நீக்கிய நிலையில், அவர்களைத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் கட்சியில் சேர்த்து, மகாராஜனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் நயினார் நாகேந்திரன்.

செய்தியாளர்களிடம் பேசும் நயினார் நாகேந்திரன்
செய்தியாளர்களிடம் பேசும் நயினார் நாகேந்திரன்

அத்துடன் விடவில்லை... நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சென்னைக்குச் சென்று மாவட்டத் தலைவரை நீக்கும்படி கட்சித் தலைமையிடம் வலியுறுத்திவருகிறார்கள். எப்படியும் மாவட்டத் தலைமையை மாற்றியே தீருவேன் என நயினார் நாகேந்திரன் தீவிரம் காட்டுவதால், நெல்லை மாவட்டத்தில் தாமரைக் கட்சிக்குள் தள்ளாட்டம் அதிகரித்திருக்கிறது.

தங்கத்துக்கு அடி மேல் அடி!

சட்டசபைத் தேர்தலில், தான் எதிர்பார்த்த தொகுதி கிடைக்காததால், த.மா.கா-விலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் தி.மு.க-வில் இணைந்தார். கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதால், தனக்கு பவர்ஃபுல் பதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் தங்கம். ஆனால், அவரின் மருமகன் அருண்பிரகாஷ் மூலம் வந்த வில்லங்கம் ஒன்று, அவரது நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்துவிட்டது. ``என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, என்னிடமிருந்து 7 கோடி ரூபாய் வாங்கி அருண்பிரகாஷ் மோசடி செய்துவிட்டார்’’ என்று கோவையைச் சேர்ந்த சிந்துஜா என்ற பெண் சமீபத்தில் டி.ஜி.பி அலுவலத்தில் புகார் அளித்திருப்பதுதான் அதற்குக் காரணம்.

கோவை தங்கம்
கோவை தங்கம்

``பணத்தைக் கேட்டபோது ஆளுங்கட்சியின் பெயரைச் சொல்லி கோவை தங்கம், அவரின் மகள், மருமகன் ஆகியோர் என்னை மிரட்டுகிறார்கள்’’ என்று புகாரில் தெரிவித்திருக்கிறார் சிந்துஜா. இதன் அடிப்படையில் அருண்பிரகாஷ் மீது கோவை போலீஸார் வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். தன்மீது புகார் கொடுத்த சிந்துஜா மீது கோவை தங்கமும் புகார் அளித்திருக்கிறார். அதில், ‘‘எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யார் தவறு செய்தாலும் தவறுதான். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த த.மா.கா-வினர்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, த.மா.கா-வினரும் பல்வேறு விவகாரங்களைத் தோண்டியெடுத்து பதிலடி கொடுத்துவருவதால், ஏகத்துக்கும் கவலையில் இருக்கிறார் கோவை தங்கம்.

முதல்வரிடம் சென்ற முதுகளத்தூர் பஞ்சாயத்து!

முதுகளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியால் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வினர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். `மாவட்ட கோட்டாவில் தனக்கு அமைச்சர் சான்ஸ் கிடைக்கும்’ என்று காதர்பாட்சா முத்துராமலிங்கம் காத்திருந்த நிலையில், ராஜ கண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால், கடும் அப்செட்டில் இருந்தார் முத்துராமலிங்கம்.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

இதனால், அமைச்சரின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதுடன் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளையும் `அமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளக் கூடாது’ என்று எச்சரிக்கிறாராம். மாவட்டச் செயலாளருக்கு பயந்து, மாவட்டப் பிரச்னைகளைப் பற்றிக்கூட அமைச்சரைச் சந்தித்து சொல்ல முடியாமல் தி.மு.க நிர்வாகிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பஞ்சாயத்து தற்போது முதல்வர் ஸ்டாலினின் டேபிளுக்குச் சென்றிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் விசாரணை தொடங்கலாம் என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்!

``எஸ்.பி-யை மாத்தினது யாரு?’’

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பட்டிமன்றம் கணக்காக விவாதம் றெக்கைகட்டிப் பறக்கிறது. சமீபத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பாக கலெக்டரிடம் மனுகொடுக்கச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலைமறியலில் ஈடுபட்டபோது எஸ்.பி-யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இப்போது எஸ்.பி மாற்றப்பட்ட நிலையில், ``எங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, எஸ்.பி-யையே டிரான்ஸ்ஃபர் செஞ்சுட்டோம்” என்று தோழர்கள் சிலர் மார்தட்டுகிறார்கள்.

கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த  துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!

இன்னொரு பக்கம், அரசியல் பிரமுகர் கொலை தொடர்பாக, தன் சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபமடைந்து, எஸ்.பி-யை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டதாக உடன்பிறப்புகள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார்கள். இருதரப்பும் இப்படி மார்தட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் உண்மையிலேயே மகிழ்ச்சியில் இருப்பது எஸ்.பி-தானாம். ``இவங்க ரெண்டு தரப்புமே என் இடமாற்றத்துக்குக் காரணம் இல்லை... ஏற்கெனவே நான் ஏ.டி.எஸ்.பி-யாக வேலை பார்த்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்தான், அவருக்கு உதவியா இருப்பேன்னு என்னை தென் மாவட்டத்துக்கு அழைச்சுக்கிட்டாரு!” என்று புளகாங்கிதம் அடைகிறாராம் எஸ்.பி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு