Published:Updated:

எடப்பாடி குடும்பத்தினரின் மிளகாய் வற்றல் யாகம் முதல் சி.விஜயபாஸ்கரின் நக்கல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``சட்டமன்ற விடுதி வளாகத்தில் இருக்கிறேன். செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்'' என்று கழுகாரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

மாநிலத் தலைவரின் உள்குத்து!
பா.ஜ.க நிர்வாகிகள் கடுகடுப்பு

கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர், பா.ஜ.க மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து தமிழக பா.ஜ.க நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திவந்தார். அவருடன் தமிழகக் கட்சி நிர்வாகிகள் சிலரும் சென்றிருந்தார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதியன்று காலை அமித் ஷா, நட்டா ஆகியோரை தமிழக பா.ஜ.க தலைவரும் நிர்வாகிகளும் இணைந்து சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி குடும்பத்தினரின் மிளகாய் வற்றல் யாகம் முதல் சி.விஜயபாஸ்கரின் நக்கல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், அன்றைய தினம் மதியமே தமிழக நிர்வாகிகளிடம், ``தலைவர்கள்கிட்ட இன்னைக்கு நேரம் கிடைக்கலை. அதனால, நீங்க ஃபிளைட்டைப் பிடிச்சு சென்னை போயிடுங்க. நான் அப்புறமா வர்றேன்’’ என்ற மாநிலத் தலைவர், அவர்களை முதலில் சென்னைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பிறகு மாலை 6 மணிக்கு அமித் ஷாவையும், 7 மணிக்கு நட்டாவையும் மாநிலத் தலைவர் மட்டும் தனியாகச் சென்று சந்தித்திருக்கிறார். சென்னைக்கு வந்து சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்த விஷயம் தெரிந்து மாநிலத் தலைவர் மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்கள்.

``நாங்களும் காத்திருக்கோம்!’’
நக்கல் அடித்த சி.விஜயபாஸ்கர்

ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை எம்.எல்.ஏ ஹாஸ்டலில் முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தினார்கள் தமிழல லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார். போலீஸ் அதிகாரிகளின் எந்தவொரு கேள்விக்கும் அசராமல் பதில் அளித்தாராம் வேலுமணி.

எடப்பாடி குடும்பத்தினரின் மிளகாய் வற்றல் யாகம் முதல் சி.விஜயபாஸ்கரின் நக்கல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

ஹாஸ்டலுக்கு வெளியே கட்சியினர் முற்றுகையிட்டிருந்த நிலையில், அங்கு வந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ``ஒண்ணும் பண்ண முடியாது; இதையெல்லாம் நாங்களும் எதிர்பார்த்துத்தான் காத்திருக்கோம்’’ என்று நக்கலாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அங்கிருந்த அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளோ, ``ஓ... அண்ணனும் ரெய்டை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கிறாருபோல... ரொம்ப தைரியம்தான்!’’ என்றார்கள் வெள்ளந்தியாக.

எடப்பாடி குடும்பத்தினர் மிளகாய் யாகம்!

கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரத்யங்கரா தேவி கோயிலில் அமாவாசைதோறும் நடக்கும் மிளகாய் வற்றல் யாகம் வெகு பிரசித்தி. ஜெயலலிதா-சசிகலா இங்கு யாகம் செய்த பிறகுதான் ஜெயலலிதாவுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைத்தது என்பது அவர்கள் தரப்பின் நம்பிக்கை. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆடி அமாவாசை அன்று, எடப்பாடியின் குடும்பத்தினர் இந்தக் கோயிலில் சிறப்பு யாகம் செய்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இவர்களை இரண்டெழுத்து மணல் புள்ளி ஒருவர்தான் அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தாராம். எடப்பாடி எதை மீட்க இந்த யாகம் நடத்தப்பட்டது என்பதே இப்போது கட்சியினர் மத்தியில் பேச்சாக இருக்கிறது!

கட்டி உருண்ட ஊழியர்கள்...
பஞ்சாயத்தை முடித்துவைத்த எம்.எல்.ஏ!

திண்டிவனம் மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவரும் சிவனின் பெயர்கொண்ட அதிகாரி, முன்னாள் அமைச்சர் ஒருவரின் தயவில் கடந்த 15 ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் பணிபுரிகிறார். சமீபத்தில் அந்த அதிகாரியும், அதே துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களும் அலுவலகத்திலேயே மது போதையில் அடித்துக்கொண்டு கட்டி உருண்டிருக்கிறார்கள். மின் கட்டணம் செலுத்தப்போன மக்கள், இதைப் பார்த்து தெறித்து ஓடியிருக்கிறார்கள். இதையடுத்து, காவல்துறையினர் வந்து மூவரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிச்சென்றிருக்கிறார்கள். சிவன் அதிகாரி முன்னாள் அமைச்சரின் உதவியை நாட, அவர் வில்வித்தை நாயகனின் பெயர்கொண்ட எம்.எல்.ஏ-வை பஞ்சாயத்துக்கு அனுப்பி அதிகாரியை மீட்டிருக்கிறார். அந்த மின்துறை அதிகாரி, ஏற்கெனவே விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி துறைரீதியிலான நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றியம் மீது கடுப்பு...
அமைச்சரை முற்றுகையிட்ட உடன்பிறப்புகள்!

நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சரின் ஆதரவாளரான மேலூர் தி.மு.க ஒன்றியச் செயலாளர் உதயதேவன், கடந்த பத்து ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறார். அவர் மீதான அதிருப்தியால் ஒன்றியத்தில் ஏராளமான தி.மு.க-வினர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டதாக சொந்தக் கட்சியினரே குற்றம்சாட்டுகிறார்கள். சமீபத்தில், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட விழா, கேத்தொரையில் நடைபெற்றது.

எடப்பாடி குடும்பத்தினரின் மிளகாய் வற்றல் யாகம் முதல் சி.விஜயபாஸ்கரின் நக்கல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

வனத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த இந்த விழாவுக்கு அந்த ஒன்றியச் செயலாளர் என்ட்ரி கொடுத்ததும், கூட்டத்தில் இருந்தவர்கள் `ஒழிக... ஒழிக...’ என்று கோஷமிடத் தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அமைச்சரையும் ஒரு கும்பல் முற்றுகையிடத் தொடங்கியது. அமைச்சரை மீட்டு காரில் ஏற்றி அனுப்பிவைப்பதற்குள் படாதபாடுபட்டுவிட்டார்கள் அவரின் ஆதரவாளர்கள்!

முரட்டு விசுவாசம்!
தூக்கியடிக்கப்பட்ட பி.ஆர்.ஓ

மேற்கு மண்டல மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த அந்த `நல்ல’ அதிகாரி, தி.மு.க பின்னணியைக்கொண்டவர் என்பதால், இந்த முறை பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவரை வளமான மாவட்டத்திலிருந்து வறண்ட மாவட்டத்துக்கு மாற்றிவிட்டார்ககள். தி.மு.க பின்னணியைக்கொண்டவராக இருந்தாலும், கடந்த ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் உச்ச அமைச்சரிடம் அவர் காட்டிய முரட்டு விசுவாசமே, இந்தத் தூக்கியடிப்புக்குக் காரணம் என்கிறார்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எத்தனை பேருக்குத்தான் கமிஷன் அழுறது?’’
பாதியில் தொங்கும் சாலைப் பணிகள்!

முட்டை மாவட்டத்தின் மூன்றெழுத்து கட்டுமான நிறுவனம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில் தஞ்சாவூர், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளைப் புதிதாக அமைக்கவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதற்காக அப்போதைய ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கொடுத்து, பல இடங்களில் சாலைப் பணிகளை செய்துவந்தனர்.

`புதுச்சேரி ஆளுநரின் அதிரடி உத்தரவு முதல் பஞ்சாயத்து பேசிய பழநி மாணிக்கம் வரை!' கழுகார் அப்டேட்ஸ்

இந்தநிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இனிஷியல் அமைச்சர் கேட்பதாகச் சொல்லி மீண்டும் கமிஷன் கேட்டிருக்கிறார்கள். இதனால், கடுப்பான நிறுவனத்தினர், `எத்தனை பேருக்குத்தான் கமிஷன் அழுறது?’ என்று சொல்லி பணிகளை நிறுத்திவிட்டதால், புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலைப் பணிகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

புதிய துணைவேந்தர் நியமனம்
ஆளுநர் சிபாரிசு காரணமா?

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்தமுறை சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததில் ஏற்பட்ட சிக்கலால், இந்த முறை துணைவேந்தர் தேர்வில் எந்தச் சச்சரவும் இருக்கக் கூடாது என்று கவனமாக இருந்தார்களாம்.

துணைவேந்தர் வேல்ராஜ்
துணைவேந்தர் வேல்ராஜ்

வேல்ராஜின் பூர்வீகம் நாகர்கோவில் என்பதால், அதே ஊரைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர்தான் அவருக்கு சிபாரிசு செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், தி.மு.க தரப்பில் வேறொருவரின் பெயர் முன்மொழியப்பட்டதாம். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் வேல்ராஜை நியமித்திருக்கிறார்கள். அதனால், `இந்த முறையாவது ஆளுங்கட்சிக்கும் துணைவேந்தருக்கும் ஒத்துப்போகுமா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு