Published:Updated:

'தூது'விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

தூதுவிட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

திறக்கும் அறிவாலயக் கதவுகள்...
குஷியில் தோப்பு வெங்கடாசலம்!

சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காதது, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது, சுயேச்சையாக பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளே வாங்கியது... எனக் கடந்த சில மாதங்களாகவே பிரச்னைக்கு மேல் பிரச்னையையே சந்தித்துவரும் தோப்பு வெங்கடாசலம் பக்கம் தென்றல் காற்று வீச ஆரம்பித்திருக்கிறதாம். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க-வில் இணைய அவர் தூதுவிட்டபோது, அறிவாலயத்தின் கதவுகள் சாத்தப்பட்டன.

`தோப்பு' வெங்கடாச்சலம்
`தோப்பு' வெங்கடாச்சலம்

அந்தக் கதவுகளை இப்போது செந்தில் பாலாஜி மூலமாகத் திறக்க முயல்கிறாராம் தோப்பு. அதில் ஓரளவுக்கு பாசிட்டிவ் சிக்னலும் கிடைத்திருப்பதால், தோப்பு குஷியாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க-வில் பொறுப்பிலிருக்கும் பலரோடு தி.மு.க-வுக்குப் போனால்தான் மரியாதை கிடைக்கும் என்பதால், இப்போது ஆள்பிடிக்கும் பணியில் தோப்பு தீவிரமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதானே... தோப்பு தனிமரமா போன நல்லா இருக்குமா?!

ஈகோவைத் தூண்டிவிடும் உடன்பிறப்புகள்!

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னியும், புதிய எஸ்.பி-யாக சசிமோகனும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள். பதவியேற்றவுடனேயே மாவட்ட அமைச்சரான முத்துசாமியை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார் கலெக்டர். அதேசமயம், ஜூன் 7-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி சசிமோகன் இதுவரை அமைச்சரைச் சந்திக்கவில்லையாம். இவ்வளவுக்கும் எஸ்.பி அலுவலகத்துக்கு அருகிலேயேதான் அமைச்சர் முத்துசாமியின் வீடும் இருக்கிறது.

முத்துசாமி
முத்துசாமி

இந்த விவகாரத்தை ஈகோவாக எடுத்துக்கொண்ட உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ஏனுங்கண்ணா, எம்புட்டு வினையம் இருந்தா எஸ்.பி உங்களை வந்து பார்க்காம இருப்பார்” என்று பற்ற வைத்தார்களாம். ஆனால், அமைச்சரோ பெருந்தன்மையாக, ‘‘பரவாயில்லை விடுங்க. அவருக்குப் பல வேலைகள் இருக்கும்’’ என்று அமைதியாகிவிட்டாராம். ஆனாலும், உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் சிலர் இந்த விவகாரத்தைப் பெரிதாக்கிக் குளிர்காய முற்படுகிறார்களாம்!

பேனை டைனோசராக்காம விட மாட்டாங்கபோல!

தூதுவிட்ட பாலாஜி
கண்டுகொள்ளாத தி.மு.க!

கடந்த ஆட்சியில் பால்வளத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, துறை அமைச்சர் நாசர் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார். இதனால் அரண்டுபோயிருக்கும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “விவரம் தெரியாம ஏதேதோ பேசிட்டேன்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க” என்கிற ரீதியில் தி.மு.க முகாமுக்குத் தூதுவிட்டிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

ஆனாலும், பாலாஜியின் பாச்சா தி.மு.க-விடம் எடுபடவில்லையாம். மாவட்ட வாரியாக பால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடு கோப்புகள் கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லை, மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல்களைத் தூசுதட்டி வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் பதற்றத்திலிருக்கிறார்கள்.

வெளுத்ததெல்லாம் பாலுன்னு தி.மு.க நினைக்காதுபோலிருக்கே!

"மகனை வளர்த்துவிடுங்க!"

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் அறிந்த அமைச்சர் ஒருவர் கட்சி நிகழ்ச்சிகளில் தன் மகனை முன்னிலைப்படுத்தி, கட்சியில் வளர்த்துவிடும்படி உள்ளூர் நிர்வாகிகளிடம் வலியுறுத்திவருகிறார். இவ்வளவு நாள்களாக இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்த வாரிசும், இப்போது களத்தில் கால் பதித்திருப்பதால், புகுந்து விளையாடுகிறாராம். இளைஞரணி நிர்வாகி என்ற பேனரில் அறிமுகப்படுத்தப்படும் வாரிசு, தமிழக அரசு வழங்கும் 14 வகையான மளிகைப் பொருள்களை விநியோகிக்கும் நிகழ்வுகளைக்கூட விடாமல் முன்னின்று ஆதிக்கம் செலுத்துகிறாராம். இந்த விவகாரங்களையெல்லாம் போட்டோ ஆதாரங்களுடன் அறிவாலயத்துக்கு புகார் தட்டிவிட்டிருக்கிறது எதிர்க் கோஷ்டி.

அங்கேயும் வாரிசுதானே அதை விசாரிக்கணும்!

‘‘அவர் வேணா அமைதியா இருக்கட்டும்...’’
கொதிக்கும் அ.தி.மு.க வேட்பாளர்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தொகுதியில் அ.தி.மு.க சார்பாகக் களமிறங்கிய பாரதி தேர்தலில் தோல்வியடைந்தார். தனது தோல்விக்கு கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என்று மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுவான பவுன்ராஜிடம் அவர் மனு கொடுத்திருக்கிறார்.

பவுன்ராஜ்
பவுன்ராஜ்

அதற்கு பவுன்ராஜ், ‘‘நீ மட்டுமா தோத்த? நான் உட்பட மாவட்டத்துல இருக்குற மூணு தொகுதியிலயும் நாம எல்லாரும்தான் தோத்துப்போயிட்டோம். கட்சியில இருக்குற கொஞ்ச நஞ்ச பேரையும் நீக்கிட்டா யாரைவெச்சு கட்சி நடத்துறது? பேசாம வேலையைப் பாருங்க...’’ என்று அட்வைஸ் கொடுத்தாராம். ஆனாலும், கட்சித் தலைமைக்கு கடுதாசி அனுப்பியே தீருவேன் என்று தீவிரமாக இருக்கிறாராம் பாரதி.

ராயப்பேட்டை வந்து பாருங்க பாரதி... இன்னும் ரணகளமா இருக்கும்!

‘‘எங்களை நசுக்கப் பார்க்கிறார்கள்!’’
புலம்பும் அ.தி.மு.க ஐடி விங்!

திருவள்ளூர், சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் மீது வழக்கு போட்டுவருகிறது தமிழகக் காவல்துறை. இது தொடர்பாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டும், வழக்கு படலம் நின்றபாடில்லை. இதையடுத்து, ‘‘சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க-வின் குரலை நசுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று புலம்புகிறது ஐடி விங் நிர்வாகிகள் வட்டாரம்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

இந்த அழுத்தம் தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்கிறதாம். விவாதங்களில் அ.தி.மு.க சார்பில் யாரை அழைக்க வேண்டும் என்பதிலும் தி.மு.க-வினர் மூக்கை நுழைக்கிறார்களாம். ‘‘அந்தப் பிரமுகர் விவாதத்துக்கு வந்தால், தி.மு.க தரப்பில் நாங்கள் வர மாட்டோம்’’ என்று மறைமுக மிரட்டல் விடுக்கப்படுவதால், சில தொலைக்காட்சி நிறுவனங்களும் தயங்குகின்றனவாம்.

‘‘இவங்க என்ன தாஜ்மஹாலா கட்டுறாங்க?’’

டெல்லியில் கட்டப்பட்டுவரும் தி.மு.க கட்சி அலுவலகத்தை, அண்ணா நகர் தரப்பினர்தான் முன்னின்று மேற்பார்வை பார்த்துவருகிறார்கள். ஜூன் 17-ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றிருந்தபோது, கட்டடப் பணிகளை அவருக்கு அண்ணாநகர் அரசியல் புள்ளியின் வாரிசுதான் விளக்கியிருக்கிறார். அத்துடன், ‘‘நாங்களே இந்தக் கட்டட வேலையை முடிச்சுத் தர்றோம்; முழுப் பொறுப்பையும் ஒப்படையுங்க’’ என்று கேட்டிருக்கிறார் வாரிசு பிரமுகர். இதைக் கேட்டதும் உடனிருந்த மூத்த நிர்வாகிகள் இருவர் டென்ஷனாகிவிட்டார்களாம். ‘‘இவங்க அட்டகாசம் தாங்க முடியலை.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு மாவட்டத்துலேயும் கட்சி அலுவலகத்தை நாமதான் கட்டியிருக்கோம். இவங்க என்ன தாஜ்மஹாலா கட்டப்போறாங்க... இவங்ககிட்ட பொறுப்பை ஒப்படைக்குறதுக்கு?’’ என்று ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார்கள்.

தாஜ்மஹால் எல்லாம் இல்லைங்க... வெறும் 'கல்லா'தான் கட்டுவாங்க!

ஐ.டி வளையத்தில் தி.மு.க வி.ஐ.பி!

தி.மு.க ஆட்சி வந்ததிலிருந்து மத்திய வருமான வரித்துறையினரின் ரெய்டு எதுவும் நடக்கவில்லை என்றாலும், அந்தத் துறையின் உளவுப்பிரிவினர் தி.மு.க முக்கியப் பிரமுகர்களைக் கண்காணித்துவருகிறார்கள். அந்த வகையில் மக்கள் பிரதிநிதியும், தொழிலதிபருபான ஒருவரின் பணப் பரிமாற்றங்கள் உற்று கவனிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் ஏழு எழுத்து ஹோட்டல் ஒன்று, ஒன்றரை லட்சம் சதுர அடி கட்டடத்துடன் பாதியில் நிற்கிறது. அதை வாங்க தமிழக வி.ஐ.பி-கள் பலரும் முட்டிமோதியதில், ஆளுங்கட்சியின் பெரும் தொழிபதிபர் ஒருவர் ஜெயித்திருக்கிறாராம். எல்லாமே சட்டப்படி நடப்பதாகச் சொல்லப்பட்டாலும், ஏதாவது வில்லங்கம் சிக்குமா என்று பூதக்கண்ணாடியை வைத்து பார்த்துவருகிறார்கள் வருமான வரித்துறையினர். ஜெகமே தந்திரம்!

அடுத்த கட்டுரைக்கு