Published:Updated:

`புதுச்சேரி ஆளுநரின் அதிரடி உத்தரவு முதல் பஞ்சாயத்து பேசிய பழநி மாணிக்கம் வரை!' கழுகார் அப்டேட்ஸ்

``ஊருக்குக் கிளம்புகிறேன். செய்திகளில் சந்தேகம் ஏதாவது இருந்தால், அலைபேசியில் அழைக்கவும்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் கழுகார். இன்பாக்ஸில் வந்து விழுந்தன சுடச்சுடச் செய்திகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கமிஷனர் - எம்.எல்.ஏ மோதல்
பஞ்சாயத்து பேசிய பழநி மாணிக்கம்!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமாருக்கும், தஞ்சாவூர் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகத்துக்கும் தொடர்ந்து முட்டல் மோதல்கள் எழுந்து வருகின்றன. ஏற்கெனவே, புதிய பேருந்து நிலையக் கடைகளை ஏலம்விடும் விஷயத்தில் சரவணகுமார் கறார் காட்டியதில், எம்.எல்.ஏ-வுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 பழநி மாணிக்கம்
பழநி மாணிக்கம்

இதையடுத்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்திலும் இருவருக்கும் மோதல் வெடித்திருக்கிறது. இப்படி, பல விஷயங்களிலும் இருவருக்குள் மோதல் போக்கு நீடித்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் தொகுதியின் தி.மு.க எம்.பி பழநி மாணிக்கம், ``ஒரே ஏரியாவுல இருந்துக்கிட்டு எதுக்கு ரெண்டு பேரும் மோதிக்கிறீங்க?” என்று சுற்றுலா மாளிகையில் வைத்து இருவருக்கும் சமாதானம் செய்தாராம். அப்போதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்கவே... டென்ஷனான மாநகராட்சி ஆணையர், ``நான் பேச வேண்டிய இடத்துல பேசிக்கிறேங்க” என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாராம்.

ஆற்று மணல் அள்ளும் உரிமம்
வாரிச்சுருட்டிய சாமியார்!

தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுவதற்கான உரிமம் குறித்து அரசுத் தரப்பு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும், ஆற்றுமணல் தட்டுப்பாட்டைத் தீர்க்க ஆலோசனைகள் ஒருபுறம் நடந்துவருகின்றன. இந்தநிலையில், ``தமிழகத்தில் மணல் அள்ளும் உரிமையை எங்களுக்குதான் மேலிடம் கொடுத்திருக்கிறது’' என்று சிலர் களத்தில் இறங்கி கல்லாகட்டி வருகிறார்களாம்.

ஆற்று மணல்
ஆற்று மணல்

குறிப்பாக, மதுரைப் பகுதியில் சாமியார் ஒருவர், ``தென் மாவட்டங்களுக்கு மணல் அள்ளும் உரிமை எனக்குத்தான்’’ என்று சொல்லி பல கோடிகளை வசூல் செய்துவிட்டாராம். இப்போது குட்டு வெளிப்பட்டுவிட்டதால் பணம் கொடுத்தவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

``நான் ஆக்‌ஷன் எடுக்க வேண்டிவரும்!’’
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அதிரடி

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் போலி ஆவணம் தயாரித்து, அரசியல்வாதிகள் சிலரின் பின்புலத்தோடு நில அபகரிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், துணைநிலை ஆளுநருக்குப் புகார் அனுப்பியிருந்தது. இதையடுத்து, போலிப் பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு செய்ததாக மும்தாஜ்பேகம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கட்டபொம்மன் என்பவர் உள்ளிட்ட சிலரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

கடந்த பல மாதங்களாக நிலஅபகரிப்பு விவகாரங்கள் பெரிதாக விசாரிக்கப்படாமல் சுணங்கிக்கிடந்த நிலையில், தற்போது போலீஸாரின் அதிரடி ஆக்‌ஷனுக்குக் காரணம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்தானாம். ``ஒழுங்கா ஆக்‌ஷன் எடுக்கலைன்னா, நான் ஆக்‌ஷன் எடுக்கவேண்டி வரும்’’ என்று போலீஸ் உயரதிகாரிகளை தமிழிசை எச்சரித்த பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கைதானவர்கள் பல ஆண்டுகளாகவே புதுச்சேரியின் அரசியல் புள்ளிகள் பலருக்கும் நெருக்கமாக இருந்தவர்களாம்!

போட்டுக்கொடுத்த நடுநாயகம்...
அதிர்ச்சியில் உறைந்த பெல்!

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளரான கிரகாம் பெல்லுக்குச் சொந்தமான பள்ளி, அலுவலகம், வீடுகள் ஆகியவற்றில் கடந்த வாரம் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது கிரகாம் பெல் அங்கு இல்லாததால், குடும்பத்தினர் போன் போட்டு அவருக்குத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, சோதனையிடுவது வருமான வரித்துறையா அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் வணிக வரித்துறையா என்று குழப்பம் அடைந்த கிரகாம் பெல், வணிக வரித்துறையின் மேலிடம் வரை விசாரித்திருக்கிறார்.

கருணாநிதியின் யானைப் பாசம் முதல் ‘காட்டுராஜா’வின் வசூல் வேட்டை வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

அப்போது `நடுநாயகமானவர்’ போட்டுக்கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில்தான் வணிக வரித்துறையினர் சோதனைக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து அதிர்ச்சியானாராம் கிரகாம் பெல். இதையடுத்து, அறிவாலயத்துக்கு பெல் அடிக்கத் தயாராகிவருகிறார் பெல்!

சாமியாடிய சாமிநாதன்...
வறுத்தெடுத்த ஜெயலட்சுமி.. புதுச்சேரி பா.ஜ.க பஞ்சாயத்து

புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கும், அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவர் ஜெயலட்சுமிக்கும் பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது. கட்சிக் கூட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜெயலட்சுமியைத் தவிர்க்கும் சாமிநாதன், மகளிரணியின் மற்ற நிர்வாகிகளை மட்டும் அழைக்கிறாராம்.

புதுச்சேரி பா.ஜ.க
புதுச்சேரி பா.ஜ.க

இதில் கடுப்பான ஜெயலட்சுமி, சாமிநாதன் கூட்டத்துக்குச் சென்று வந்த மகளிரணி நிர்வாகி ஒருவருக்கு போன் போட்டு ``என் அனுமதியில்லாம அவரோட கூட்டத்துக்குப் போகக்கூடாது’’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். சாமிநாதனின் ஆதரவாளரான அந்த மகளிரணி நிர்வாகியோ, அந்த செல்போன் உரையாடலை ரெக்கார்டு செய்து வெளியே கசியவிட்டிருக்கிறார். இதையடுத்து ஜெயலட்சுமிக்கு எதிராக டெல்லி வரை சாமியாடியிருக்கிறார் சாமிநாதன்!

``நடக்குறது எங்க ஆட்சி தெரியுமில்ல!’’
குட்காவில் கல்லாகட்டும் தி.மு.க செயலாளர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் `வா... வா..’ என்றழைக்கும் வாசனையான பிரியாணிக்குப் புகழ்பெற்ற நகரத்தின் தி.மு.க செயலாளரின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் காவல்துறையினர். ஏற்கெனவே இவர்மீது அரசுப் பேருந்து மீது தாக்குதல் நடத்தியது உட்பட சில வழக்குகள் இருக்கின்றன. இந்தநிலையில், தற்போது ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குட்கா கள்ளச்சந்தையும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

குட்கா
குட்கா

சமீபத்தில் போலீஸ் ரெய்டில் சிக்கிய 25 குட்கா மூட்டைகளில், மூன்றை மட்டுமே காவல்துறையினரிடம் கணக்கு காட்டச் சொல்லிவிட்டு, மற்றதை அள்ளிப்போட்டுக்கொண்டு போய்விட்டாராம். தனது சொல்லுக்குக் கட்டுப்படாத காவல்துறை உயரதிகாரிகளை, ``நடக்குறது எங்க ஆட்சி, தெரியுமில்ல” என்று நேரடியாகவே மிரட்டுகிறாராம். அறிவாலயத்துக்கு ஓலை அனுப்பத் தயாராகியிருக்கிறது மாவட்ட உளவுத்துறை!

``கொரோனா போகாது!’’
மக்கள் பிரதிநிதியின் வசூல் வேட்டை

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை மையங்களில் ஆறு மாதங்கள் மட்டும் பணிபுரிவதற்காக 12,000 ரூபாய் முதல் 14,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் செவிலியர், தொழில் நுட்பவியலாளர் உட்பட 71 பணிகளுக்குக் கடந்த மாதம் நேர்காணல் நடைபெற்றது.

கொரோனா
கொரோனா

சொற்ப ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேரும் இந்த முன்களப் பணியாளர்களின் பணி நியமனத்திலும் வசூல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறாராம் மக்கள் பிரதிநிதி ஒருவர். ``சார், ஆறு மாசச் சம்பளமே 70,000 ரூபா தாண்டாது... இதுக்குப் போய் லஞ்சம் கேட்குறீங்களே?” என்று சிலர் கேட்டபோது, ``ஆறு மாசத்துல கொரோனா போயிடுமா? அடுத்தடுத்த அலை வரப் போகுது. அதனால, அதுக்கு அப்புறமும் பணி நீட்டிப்பு செஞ்சு, பிறகு பணி நிரந்தரம் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. கிடைக்குற சான்ஸை விட்டுறாதீங்க” என்று சொல்லியே 50-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மக்கள் பிரதிநிதி வசூல் செய்துவிட்டார் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு