Published:Updated:

அவைத்தலைவர் பதவி ரேஸ் முதல் தழுதழுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

``மெயில் இன்பாக்ஸை செக் செய்யவும்’’ - கழுகாரிமிருந்து குறுந்தகவல் வந்தது. இரண்டொரு நிமிடங்களில் இன்பாக்ஸை நிறைத்தன செய்திகள்!

``பதவிக்காக பால் ஊத்துறாரு!’’
குமரி மாவட்ட கூட்டுறவு அரசியல்

கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வினர், கூட்டுறவுத்துறையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறார்கள். அதில் ஒரு கட்டமாக, மேற்கு நெய்யூர் ராமச்சந்திர நாடார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்காக, தி.மு.க பிரமுகர் ஒருவர் செய்யும் காமெடியைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சேர வேண்டுமென்றால் தொடர்ச்சியாக 300 லிட்டர் பாலை கூட்டுறவு சங்கத்துக்கு விநியோகித்திருக்க வேண்டும்.

அவைத்தலைவர் பதவி ரேஸ் முதல் தழுதழுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், வீட்டில் ஒரு கன்றுக்குட்டிக்கூட வளர்க்காத மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர், பால்காரரிடம் பால் வாங்கி, அதுவும் போதாமல் பாக்கெட் பால் வாங்கி உடைத்து ஊற்றி, தினமும் கூட்டுறவு சங்கத்துக்கு பால் சப்ளை செய்துவருகிறார். நடுவில் ஊழியர்கள், ``பால் டிகிரி குறைவாக இருக்கிறது’’ எனச் சொன்னால், ``ஏம்ப்பா, பாலுக்கு பணமா கேட்டேன்... என் பேர்ல பால் வந்துச்சுன்னு எழுதிவையுங்க, அது போதும்!’’ என்கிறாராம் அந்த தி.மு.க புள்ளி.

பதவி நழுவி பாலில் விழுமா?!

தழுதழுத்த எம்.ஆர்.கே...
கடுகடுத்த கே.என்.நேரு!

வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடன் விவாதிப்பதற்காக, கடந்த வாரம் திருச்சி சென்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், `ஒவ்வொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வரும்போதும் நான் அமைச்சராவதற்கு நேரு அண்ணன்தான் முக்கியக் காரணம்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

அதற்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்’ என்று தழுதழுத்துப் பேசியிருக்கிறார். கட்சியில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல், மூத்த அமைச்சர்கள் அனைவரும் மௌனசாமிகளாக வலம்வரும் நிலையில், எம்.ஆர்.கே-வின் இந்தப் பேச்சைக் கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டாராம் அமைச்சர் நேரு. அவர் நினைத்ததுபோல எம்.ஆர்.கே பேசிய ஆடியோ அறிவாலயத்துக்குப் பறக்க... இரண்டு அமைச்சர்களுமே அப்செட்டில் இருக்கிறார்களாம்.

கொடுத்ததுக்கு மேலயே கூவுறாங்கப்பு!

சாமியாரைக் காப்பாற்றும் அரசியல் புள்ளிகள்!

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை அடுத்த கன்னியம்மன் கோயில் அருகில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். சமீபத்தில் இவர் ஒரு வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அந்த ஆடியோவில், `தமிழகத்தில் 42 ரௌடிகள் இருக்கிறார்கள். அவர்களில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரௌடிகள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் செய்யப்படலாம்’ என்று தேஜஸ் சுவாமிகள் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்தச் சாமியாரையும், அவருடன் போனில் பேசியவரையும், அவர்களுடன் தொடர்பிலிருந்த ரௌடி கொட்டப்பட்டு ஜெயக்குமாரையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

அவைத்தலைவர் பதவி ரேஸ் முதல் தழுதழுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

விசாரணையில், திரைத்துறைப் பிரபலங்களான திருச்சியைச் சேர்ந்த இளம் நடிகர், இனிமையான நடிகை உள்ளிட்ட பல பிரபலங்கள் சாமியாருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க பிரபலங்கள் சிலரும் சாமியாரோடு தொடர்பில் இருப்பதோடு, அவரை வெளியில் கொண்டுவருவதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்களாம். திருச்சி தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் இல்ல நிச்சயதார்த்தத்தை இந்த தேஜஸ் சுவாமிதான் முன்னின்று நடத்தியிருக்கிறார். அவரும் சாமியாரை வெளியில் கொண்டுவர தீவிரமாக முயல்கிறாராம்.

ஆன்மிக அரசியல் நடக்குது!

ஆளும் புள்ளிகள் சிபாரிசு...
மீண்டும் ஊழல் அதிகாரிகள்!

தென் மாவட்டங்களில் ஊழல் புகாரில் சிக்கியதால் கடந்த ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் பலரும், தி.மு.க முக்கியப் புள்ளிகளின் சிபாரிசு காரணமாக மீண்டும் அதிகாரம் மிகுந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். உதாரணமாக, நெல்லையில் ஏற்கெனவே ஊழல் புகாரில் சிக்கி, அன்றைய ஆட்சியரால் இடமாற்றம் செய்யப்பட்ட ஒருவர் தூத்துக்குடி அமைச்சரின் சிபாரிசு காரணமாக பவர்ஃபுல்லான திட்டமிடும் பதவியில் அமரவைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல நெல்லையை ஒட்டிய சில மாவட்டங்களில், நகராட்சிகளை நிர்வகிக்கும் பதவிக்கு சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நெல்லை மாவட்டச் செயலாளர் ஒருவர் மூலம் வந்திருக்கிறார். மீண்டும் கமிஷன் ராஜ்ஜியத்தை ஜெகஜோதியாக நடத்தவே சர்ச்சைக்குரிய இந்த அதிகாரிகளின் நியமனம் நடந்திருக்கிறதாம். `இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும்’ என்று புலம்புகிறார்கள் லோக்கல் உடன்பிறப்புகள்.

நெல்லைக்கு கொல்லைப்புறமா வந்திருக்காங்க!

சிறைக்குள் செல்ஃபி!
கண்டுகொள்ளாத அமைச்சர் ரகுபதி

சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வேலூர் மத்திய சிறையில் ஆய்வுசெய்தார். அவருடன் தி.மு.க பிரமுகர்கள் சுமார் 50 பேர், சிறைக்காவலர்களின் தடுப்பையும் மீறி சிறைக்குள் புகுந்தார்கள். தொடர்ந்து, அவர்கள் கைதிகளிடம் அமைச்சர் குறை கேட்டதையும், ஆய்வு மற்றும் சிறைக் கட்டமைப்பையும் தங்களின் செல்போன்களில் போட்டோவாகவும் வீடியோவாகவும் பதிவுசெய்தனர். இன்னும் சில உடன்பிறப்புகளோ, செல்ஃபி எடுத்து `சிறைக்கு அஞ்சாத சிங்கம்’ என்றெல்லாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அதகளப்படுத்தினார்கள்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சிறை விதிமுறைகளுக்கு எதிராக இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ என்னவோ, பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் கேட்டுக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

சிங்கம் செல்லையே சிதைச்சிருச்சுன்னு சொல்லுங்க!

உள்ளாட்சித் தேர்தல்...
சீட் வாங்குவதற்காக உருளும் நிர்வாகிகள்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இப்போதே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட விரும்புபவர்கள், இப்போதே மாவட்டச் செயலாளர்களிடம் இது பற்றிப் பேசி, தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தும் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாற்றுக் கட்சிகளிலிருந்து சமீபத்தில் தி.மு.க-வில் சேர்ந்த சிலருக்கு, `உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும்’ என உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ? - அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!

மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் வெளியிலிருந்து வந்தவர்கள் சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றனவாம். அதனால் இதுவரை கட்சிக்காக உழைத்த தி.மு.க-வினர் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். எனவே, மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்கள், உள்ளூர் கட்சிக்காரர்கள் என இரு தரப்பையும் சமாளிக்கும் வகையில் உள்ளாட்சிப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறதாம்.

எப்படியோ நல்லாட்சி கொடுத்தா சரி!

அவைத்தலைவர் பதவிக்கு குஸ்தி!

அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவர் உடல்நலம் பெற்றுத் திரும்பிய பிறகு, அவரது வயது கருதி கட்சிப் பணிகளிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. இதையடுத்து, கட்சியில் இப்போதே அவைத்தலைவர் பதவிக்கான ரேஸ் தொடங்கிவிட்டது.

அதிமுக
அதிமுக

இதில் பொன்னையன், பா.வளர்மதி, செங்கோட்டையன், தனபால், ஜே.சி.டி.பிரபாகர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் அவைத்தலைவர் பதவிக்காக முட்டிமோதுகிறார்கள். இவர்கள் தவிர ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி பெயர்களும் அடிபடும் நிலையில், ``ஏம்ப்பா... கட்சியில் முக்கியமான அமைச்சர் பதவியில இருந்து அனுபவிச்சவங்களே திரும்பவும் பதவி கேட்டா எப்படி?’’ என்று அடுத்தகட்ட தலைவர்கள் புலம்புகிறார்கள். வழக்கம்போல இந்த விவகாரத்திலும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள் கட்சியின் இரட்டையர்கள்.

அவை உனக்கு... தலைவர் எனக்கு!

அடுத்த கட்டுரைக்கு