Published:Updated:

சொதப்பிய `விக்ரம்’ ஆடியோ லாஞ்ச் முதல் அன்புமணியின் பட்டாபிஷேகம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்-அப் காலில் அழைத்த கழுகார், "வணக்கம். மெயிலை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். பறந்து பறந்து சேகரித்த தகவல்களையெல்லாம், வாசகர்களுக்காகக் குட்டிக் குட்டிச் செய்திகளாகச் செதுக்கியிருந்தார். அவை அப்படியே இங்கே...

சொதப்பிய `விக்ரம்’ ஆடியோ லாஞ்ச் முதல் அன்புமணியின் பட்டாபிஷேகம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்-அப் காலில் அழைத்த கழுகார், "வணக்கம். மெயிலை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். பறந்து பறந்து சேகரித்த தகவல்களையெல்லாம், வாசகர்களுக்காகக் குட்டிக் குட்டிச் செய்திகளாகச் செதுக்கியிருந்தார். அவை அப்படியே இங்கே...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
சொதப்பலில் முடிந்த ‘விக்ரம்’ ஆடியோ லாஞ்ச்...
வாங்க மறுத்த தனியார் டி.வி!

கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டுவிழா, மே 15-ம் தேதி நடந்தது அல்லவா... அதில் ஒரு குழப்பம். கமலின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில், மூன்றெழுத்து தனியார் டி.வி-தான் முன்னணியில் நிற்கும். ‘ஆடியோ லாஞ்ச்’ விழாவையும் அந்தச் சேனலிலேயே ஒளிபரப்ப, பேச்சுவார்த்தை நடந்தது. “விழா முடிந்ததும், ஃபுட்டேஜைக் கொண்டு வாங்க. தொகையை முடிவுசெய்யலாம்” என்று சொல்லியிருக்கிறது டி.வி. அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மொத்த ஃபுட்டேஜையும் வாங்கிப் பார்த்த டி.வி நிறுவனத்துக்குப் பெரிய ஷாக். வருவதாக ஒப்புக்கொண்ட வி.ஐ.பி-க்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது, கேமரா கோணம், எடிட்டிங் எல்லாமே சொதப்பலாம்.

விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா
விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணமாக உதயநிதி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, கைதட்டுகிற ஆடியன்ஸ் கூட்டத்தைக் காட்டுகையில் அதிலும் உதயநிதி உட்கார்ந்திருக்கிறாராம். “இது எங்களது நிறுவன ஸ்டாண்டர்டுக்கு ஏற்றதாக இல்லை, வேண்டாம்” என்று கைவிரித்துவிட்டது அந்த நிறுவனம். ஆனாலும், மே 22-ம் தேதி அதே டி.வி-யில் அதே நிகழ்ச்சி ஒளிபரப்பானது. எப்படி என்று விசாரித்தால், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 40 ‘ல’கரங்கள் செலவுசெய்து, மூன்று மணி நேர ஸ்லாட் எடுத்து அந்த டி.வி-யிலே ஒளிபரப்பவைத்த கதையைச் சோகத்தோடு சொல்கிறார்கள் வீடியோ குழுவினர்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அன்புமணிக்கு பதவி...
ஜி.கே.மணிக்குப் பாராட்டு!

பா.ம.க தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றிய ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் (மே 24, 2022) சென்னையில் பாராட்டுவிழா நடந்தது. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஜி.கே.மணியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.

சொதப்பிய `விக்ரம்’ ஆடியோ லாஞ்ச் முதல் அன்புமணியின் பட்டாபிஷேகம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

`பா.ம.க வரலாற்றில் இப்படியெல்லாம் வழக்கம் கிடையாதே... என்ன விஷயம்?’ என்று விசாரித்தால், இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு, கட்சித் தலைவராக பட்டாபிஷேகம் செய்யத் திட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மே 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவிலேயே இந்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பா.ம.க-வினர். மணியை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல், பொதுச்செயலாளர் அல்லது துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து ‘கௌரவிக்கும்’ திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறதாம் தைலாபுரம்!

அ.தி.மு.க புள்ளியை இழுத்த அண்ணாமலை...
விரைவில் நடக்கிறது இணைப்பு!

எம்.ஜி.ஆர் பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதே பெரிய கட்சிப் பணிதான் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க-வின் ‘சைதை’ புள்ளி, அ.தி.மு.க-விடம் ராஜ்ய சபா சீட் கேட்டாராம். சீட் கொடுக்காததுகூட பரவாயில்லை, ‘கெக்கே... புக்கே...’ என்று சிரித்து அனுப்பிவிட்டார்களாம் கட்சிக்காரர்கள். ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கு அழைத்தும் வர மறுத்த அவரை, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் அணுகியிருக்கிறது தாமரைத் தரப்பு. இந்த முறை சைதைப்புள்ளி தலையாட்டிவிட்டதாகவும், விரைவில் இணைப்பு நடக்கும் என்றும் கமலாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்!

கொடிக்கம்பங்களைத் தவிர்த்த முதல்வர்...
போட்டோ ஷூட் நடத்திய குடும்பத்தினர்!

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக ஊட்டிக்குச் சென்ற முதல்வருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கிறோம் என்ற பெயரில் ஒரு வாரத்துக்கு முன்பே ஆளுங்கட்சியினர் அலப்பறை செய்திருக்கிறார்கள். வழிநெடுகிலும் தி.மு.க கொடிகளையும், பிரமாண்ட வரவேற்பு பேனர்களையும் வைத்திருந்தார்கள். இது குறித்த தகவல்களால் கடுப்பான முதல்வர், “இது அரசு விழா. கட்சிக் கூட்டம் கிடையாது‌. உடனடியாகக் கழகக் கொடிகளையும், வரவேற்பு பேனர்களையும் அகற்றுங்கள்” என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டிருக்கிறார்.

சொதப்பிய `விக்ரம்’ ஆடியோ லாஞ்ச் முதல் அன்புமணியின் பட்டாபிஷேகம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

மலர்க் கண்காட்சி, வெலிங்டன் ராணுவ மையம் போன்ற ஒருசில நிகழ்வுகளில் முதல்வருடன் சென்ற குடும்ப உறவுகள், தோடர் பழங்குடி கிராமத்துக்கு மட்டும் செல்லவில்லையாம். அந்த நேரத்தில் முதல்வரின் ஆஸ்தான போட்டோகிராபரை வைத்து, தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள் குடும்பத்தினர் என்று கிசுகிசுக்கிறார்கள் கட்சிக்காரர்கள்!

மா‌.செ புகழ் பாடிய முதல்வர்...
அப்செட்டில் அமைச்சர்!

நீலகிரி மாவட்ட தி.மு.க முன்னாள் கொறடாவும், மாவட்டச் செயலாளருமான முபாரக் அணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அணி என்று இரண்டு பெரும் பிளவாக இருப்பது தெரிந்த செய்திதான். முதல்வரின் ஊட்டி வருகையின்போது, இரு தரப்பும் மாறி மாறிப் புகார் வாசிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உஷாரான மா.செ முபாரக், கட்சியில் விவகாரமான ஆட்கள் யாரும் முதல்வரை நெருங்காதவாறு அணைபோட்டிருக்கிறார்.

சொதப்பிய `விக்ரம்’ ஆடியோ லாஞ்ச் முதல் அன்புமணியின் பட்டாபிஷேகம் வரை... கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

ஊட்டியில் அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனைப் புகழ்ந்து பேசிய முதல்வர், அப்படியே மா.செ முபாரக்கின் புகழையும் பாடியிருக்கிறார். உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர் நாற்காலிக்கு அடிபோட்டுவந்த அமைச்சர் ராமச்சந்திரன், “ஏணி சின்னத்துல ஒரு குத்து... தென்னை மரத்துல ஒரு குத்து...” என்று முதல்வர் பேசிவிட்டுப் போனதில் கடும் அப்செட்டாம்!

அமைச்சர்களுக்கு எம்.எல்.ஏ-க்கள் அடிமையா..?
திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் சர்ச்சை!

திருச்சியில் நடந்த தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவர்கள். இனி பொன்முடியின் அடிமையான புகழேந்தி எம்.எல்.ஏ பேசுவார்” என்று சொன்னது சர்ச்சையானது. அதே போன்ற சம்பவம் மதுரையிலும் நடந்திருக்கிறது. மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட கருப்பாயூரணியில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பி.மூர்த்தியிடம், பக்கத்து ஏரியாவான வடக்குத் தொகுதி மக்களும் மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

“உங்கள் தொகுதி எம்.எல்.ஏ-விடம் கொடுக்காமல் என்னிடம் ஏன் கொடுக்கிறீர்கள்?” என்று அமைச்சர் கேட்க, மக்களோ திருதிருவென விழித்தனர். “உங்க எம்.எல்.ஏ யாரு தெரியுமா... அவர் பேர் தெரியுமா... இங்கே வந்திருக்கிறாரா?’’ என்று தொடர்ச்சியாகக் கேள்வி கேட்க, “தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும்போது பார்த்தோம்” என்று சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். “அடுத்த முறை வந்தா புடிச்சுவெய்யுங்க” என்று மக்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு மனுக்களை வாங்கியிருக்கிறார் அமைச்சர். “கோ.தளபதி எம்.எல்.ஏ செயல்பாடு கொஞ்சம் ஸ்லோதான். அதுக்காகச் சொந்தக் கட்சிக்காரரை இப்படியா அவமானப்படுத்துவது?” என்று பொங்குகிறது எம்.எல்.ஏ தரப்பு!

தீயணைப்புத்துறை பணி மாற்றம்...
தீப்பிடிக்கும் விவகாரம்!

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 13 மாவட்டத் தீயணைப்பு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிறைய தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் கொண்ட மாவட்டங்களுக்குப் பசையுள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம். குறிப்பாக, முக்கிய நகரத்துக்கு அதிக ‘ஸ்வீட் பாக்ஸ்’ கொடுத்தவருக்கே போஸ்ட்டிங் கிடைத்திருக்கிறதாம்.

தீயணைப்பு
தீயணைப்பு

எம்.எஸ்.பி எனப்படும் பன்னடுக்குக் கட்டடங்களுக்கான தீயணைப்புத்துறையின் லைசென்ஸ் முறைகேட்டை வெளிக்கொண்டுவந்த ஒரு நேர்மையான அதிகாரியை, கடலோர மாவட்டத்துக்குத் தூக்கியடித்துவிட்டார்களாம். `காசேதான் கடவுளடா...’ என்று சோக கீதம் பாடுகிறார்கள் நேர்மையான அதிகாரிகள். தீயணைப்புத்துறையில் சீக்கிரமே இந்த விவகாரம் தீப்பிடிக்கும் என்கிறார்கள்!

பழைய குணம் மாறலியே...
புலம்பும் நிர்வாகிகள்!

காவிக் கட்சியின் மாநிலத் தலைவர், தன் கட்சி நிர்வாகிகளைப் பெரிதாக நம்புவதில்லையாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியைக் கடந்து சில நபர்களுடன் நெருக்கமாக இருக்கிறாராம். அவர்கள் இன்ஃபார்மர்கள்போல மாவட்ட அளவில் கட்சிக்குள் நடக்கும் வெளிவராத பிரச்னைகள் குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.

இதனால், பொறுப்பு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் கும்பலின் ஆதிக்கம் அதிகமாகிவருகிறது என்கிறார்கள் கட்சிக்காரர்கள். “தலைவரான பிறகும் பழைய குணம் அவருக்கு மாறலை பாரேன்” என்று புலம்பித் திரிகிறார்கள் அவர்கள்.

‘பணி நிரந்தரம் பெற்றுத் தருகிறோம்’
குமரியில் நடக்கும் புதுவிதமான பண வேட்டை!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 51 பேரூராட்சிகளில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையிலேயே வேலை செய்கிறார்கள். கடந்த ஆட்சியில் ஒரு கும்பல், ‘அமைச்சருக்குப் பணம் கொடுத்தால், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று பல ஊழியர்களிடமிருந்தும் தலா 50,000 ரூபாய் வசூலித்திருக்கிறது. அதே கும்பல் அ.தி.மு.க ஆட்சி முடியும் தறுவாயில், ‘உடனே பணி நிரந்தரம் ஆகும்’ என்று ஆசைகாட்டி மேலும் 50,000 ரூபாய் வசூலித்ததாம்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

இப்போது, ‘இந்த ஆட்சியில் உறுதியாகப் பணி நிரந்தரம் ஆகும். அதற்கு முன்பணமாக, தலா 20,000 ரூபாய் மட்டும் கொடுங்கள் போதும்’ என்று மறுபடியும் வசூலில் மும்முரமாக இறங்கியுள்ளது அதே டீம் என்கிறார்கள். இந்த முறை பணம் கொடுப்பதா, போலீஸில் பிடித்துக் கொடுப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள்!