Published:Updated:

தலைமைமீது அப்செட்டில் இருக்கும் சீனியர் முதல் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்காததால் கோபம்! | கோலோச்சும் அ.தி.மு.க ஆதரவு நிறுவனம்! | அண்ணாமலை அமெரிக்காவுக்குப் பயணம்... | கூட்டுச் சேர்ந்து பி.டி.ஆரை வீழ்த்திய கட்சியினர்... | கலகலத்துப்போன அப்பாவு முகாம்! | கட்டட அனுமதி மாயமான மர்மம் என்ன? | கழுகார் அப்டேட்ஸ்

தலைமைமீது அப்செட்டில் இருக்கும் சீனியர் முதல் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்காததால் கோபம்! | கோலோச்சும் அ.தி.மு.க ஆதரவு நிறுவனம்! | அண்ணாமலை அமெரிக்காவுக்குப் பயணம்... | கூட்டுச் சேர்ந்து பி.டி.ஆரை வீழ்த்திய கட்சியினர்... | கலகலத்துப்போன அப்பாவு முகாம்! | கட்டட அனுமதி மாயமான மர்மம் என்ன? | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
தலைமைமீது அப்செட்டில் இருக்கும் சீனியர்...
வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்காததால் கோபம்!

தன்னுடைய வாரிசை எப்படியாவது இந்த முறை வெயில் மாவட்டத்தின் செயலாளராக நியமித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார் அந்த சூப்பர் சீனியர் அமைச்சர். கட்சியிலும் தான் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், இதில் தடையேதும் இருக்காது என்பது அவரது நம்பிக்கை. ஆனால், அந்த வாரிசு குறித்து தலைமையிடம் ஏடாகூடமாகப் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள் மற்ற சீனியர்கள். இதனால் வாரிசுக்காகப் பரிந்து பேசிய மூத்தவரிடம், ‘‘மாவட்டச் செயலாளர் பதவிக்கு உங்கள் மகன் சரிப்பட்டு வர மாட்டார். அடுத்த முறை பார்த்துக்கலாம்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டதாம் தலைமை. இதனால் தலைமைமீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அந்த சூப்பர் சீனியர் அமைச்சர்.

மருத்துவ கவுன்சலிங் டெண்டர்...
கோலோச்சும் அ.தி.மு.க ஆதரவு நிறுவனம்!

மருத்துவ கவுன்சலிங்கை நடத்துவது தமிழ்நாடு அரசாக இருந்தாலும், அதற்கான தொழில்நுட்பப் பணிகளை கவனிக்கும் வேலைகள் தனியாருக்கே டெண்டர் விடப்படுகின்றன. மீசைக் கவிஞரின் பெயரைக்கொண்ட ஒரு டேட்டா சென்டர்தான், இந்தப் பணியை கடந்த 10 ஆண்டுகளாக டெண்டர் எடுத்துவருகிறதாம். அ.தி.மு.க ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற இந்த நிறுவனம்தான், இந்த ஆண்டும் மருத்துவ கவுன்சலிங்கை ஆன்லைனில் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் மீது நிறைய புகார்கள் இருப்பதாகவும், ஒரு வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உள்ளானதாகவும் சொல்கிறார்கள் போட்டி நிறுவனத்தினர். “கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு கோலோச்சியவர்கள், இந்த ஆட்சியில் அதிகாரிகளைவைத்து நினைத்ததை முடிக்கிறார்கள். அதனால்தான், ‘பிளாக் மார்க்’-குக்கு உள்ளான அதே நிறுவனத்துக்கு இந்த ஆண்டும் டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்று ஆளுங்கட்சியினரும் புலம்புகிறார்களாம்.

அண்ணாமலை அமெரிக்காவுக்குப் பயணம்...
அப்செட்டில் கமலாலய சீனியர்கள்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடிக்கடி காணாமல்போய்விடுகிறாராம். சமீபத்தில் வாரணாசியில் இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் பங்கெடுத்த அண்ணாமலை, அடுத்ததாகத் தனது தனிப்பட்ட ட்ரெயினிங் புரோகிராமுக்காகப் பத்து நாள் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்கிறார்.

தலைமைமீது அப்செட்டில் இருக்கும் சீனியர் முதல் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

“ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், பா.ஜ.க பிரமுகர்கள் மீதான தாக்குதல் என நெருக்கடியான இந்த நேரத்தில், ஒவ்வோர் ஊராகப் பயணப்பட்டுக்கொண்டிருப்பது நன்றாகவா இருக்கிறது... அதுசரி, போராட்டத்துக்கு நடுவிலேயே ஆட்டோ பிடித்து எஸ்கேப்பானவர்தானே இவர்?” என அப்செட்டில் இருக்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

கூட்டுச் சேர்ந்து பி.டி.ஆரை வீழ்த்திய கட்சியினர்...
மதுரை தி.மு.க மா.செ விறுவிறு!

வெறும் எம்.எல்.ஏ-வாக இருந்தவரையில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சரானதும் தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை உருவாக்கி, அசல் மதுரை அரசியல்வாதியாகவே மாறினார். மதுரை மாநகராட்சித் தேர்தலுக்கு முழுப்பொறுப்பு எடுத்துக்கொண்ட அவர், தன் ஆதரவாளருக்கு மேயர் பொறுப்பு, மண்டலத் தலைவர் பொறுப்பு வாங்கிக் கொடுத்து, மாவட்ட தி.மு.க செயலாளர்களை அப்செட்டுக்கு ஆளாக்கினார். அடுத்ததாக, ஒன்றாக்கப்பட்ட மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் பதவியை மாணவர் அணியைச் சேர்ந்தவரும், தன் ஆதரவாளருமான அதலை செந்திலுக்குப் பெற்றுக்கொடுக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழைய தி.மு.க நிர்வாகிகளும், அனைத்து வட்டச் செயலாளர்களும் தங்களுக்குள் இருந்த பகையை மறந்து பி.டி.ஆருக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

பின்னர் ‘கோ.தளபதியே ஒன்றுபட்ட மாவட்டச் செயலாளராக இருக்கட்டும்’ என்று உறுதியாக நின்று, பி.டி.ஆரின் பரிந்துரை செல்லுபடியாகாமல் பார்த்துக்கொண்டனர். தலைமையும் கோ.தளபதியையே மா.செ-வாக நியமித்தது. எல்லாவற்றிலும் கெத்துகாட்டிய பி.டி.ஆர்., இந்த விவகாரத்தில் தோற்றிருப்பதைக் கண்டு உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாம்.

முயற்சி பலிக்காத சோகம்...
கலகலத்துப்போன அப்பாவு முகாம்!

தி.மு.க-வின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆவுடையப்பனை மாற்றிவிட்டு, ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.தங்கப்பாண்டியனை மா.செ-வாக்க சபாநாயகர் அப்பாவு தலைமையிலான குழுவினர் தீவிரமாக முயன்றுவந்தார்கள். பொதுவாகவே கட்சி செயல்பாட்டில் கொஞ்சம் மந்தமான ஆள் என்பதால் ஆவுடையப்பன் மீது கட்சித் தலைமையும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் பரப்பப்பட்டது.

அப்பாவு
அப்பாவு

ஆனால், பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றிவிட்டார் ஆவுடையப்பன். பதவி இருப்பவர்களின் பக்கம் கூட்டம் சேர்வதுதானே உலக வழக்கம்... அப்படி, நெல்லை தொகுதி எம்.பி-யான ஞானதிரவியம் தொடங்கி ஒன்றிய, நகரச் செயலாளர்கள் பலர் மீண்டும் ஆவுடையப்பனின் ஆதரவாளர்களாக மாறிவிட்டார்களாம். அதனால் அப்பாவு ஆதரவாளர்களின் முகாம் கலகலத்துப்போயிருக்கிறது!

கட்டட அனுமதி மாயமான மர்மம் என்ன?
மேற்கு மாநகராட்சியில் தொடரும் சர்ச்சை!

மேற்கு மாவட்ட மாநகராட்சி ஒன்றில், `ரிசர்வ் சைட்’ எனப்படும் பூங்கா இடத்தில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காரணம், அந்தக் கட்டட உரிமையாளருக்கும், காவல்துறையின் பெரிய அதிகாரிக்கும் இடையே நன்கு பழக்கம் இருந்ததுதான். இந்த விவகாரத்தில் உள்ளூரிலுள்ள அதிகாரியை, பெரிய காவல் அதிகாரி அழைத்துப் பேசியது தொடர்பான தகவல்களை நாம் ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

நம் செய்தி வெளியானவுடனே கட்டடப் பணிகளுக்கு ஸ்டாப் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், பல மாதங்களாகியும் முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்து, கட்டடத்தை இடிப்பதற்கான நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவேயில்லை. இதனால், ‘முறையான விசாரணை நடத்தாமல், உரிமையாளருக்குச் சாதகமாகப் போகும் வகையில், அதிகாரிகள் காலம் கடத்திவருவதாக’ புகார் எழுந்திருக்கிறது. இதை உறுதிசெய்யும் வகையில், ஏற்கெனவே முறைகேடாக வழங்கப்பட்டிருந்த போலி வரைபடமும் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.