Published:Updated:

முதல்வரை எச்சரித்த ஓ.எஸ்.மணியன் முதல் அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...

“பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கச் செல்கிறேன்... மெயில் செக் செய்யவும்” என்றபடி போனை கட் செய்தார் கழுகார்.

முதல்வரை எச்சரித்த ஓ.எஸ்.மணியன் முதல் அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

“பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கச் செல்கிறேன்... மெயில் செக் செய்யவும்” என்றபடி போனை கட் செய்தார் கழுகார்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்...
அஞ்சலி செலுத்தியதற்கு கைதா?
கொந்தளிக்கும் தமிழ்த் தேசியவாதிகள்...

2019-ம் ஆண்டு இறந்துபோன மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர்கள் கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் போலீஸாரால் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால், கொதித்தெழுத்த தமிழ்த் தேசியவாதிகள், ‘ஒரு வருடத்துக்கு முன்பு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுக்காக இப்போது கைதுசெய்வது ஏன்?’ என்கிற கேள்வியை எழுப்புகின்றனர். ஜனவரி 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில், ‘தமிழ் மக்கள் விரோத பாசிச பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியதாம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி. இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து சேலம், ஈரோடு, தஞ்சாவூர் எனப் பல்வேறு மாவட்டங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிரான ஆட்களை ஒருங்கிணைக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால், பா.ஜ.க-வினரின் தூண்டுதலின் பேரில் பழைய விவகாரத்தைக் கிளறி போலீஸ் கைதுசெய்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள்.

சொந்தக் கட்சியில சேர்ந்திருக்கிற ரெளடிகளை என்ன பண்ணப்போறீங்க ஜி!

“ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும்!”
உசுப்பேற்றும் அழகிரி ஆதரவாளர்கள்...

தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த மு.க.அழகிரி சைலன்ட்டாக இருப்பது அவரின் ஆதரவாளர்களை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. சமீபத்தில் மதுரை வந்திருந்த தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ‘அழகிரி மீது கருணாநிதி எடுத்த நடவடிக்கை அப்படியே தொடர்கிறது. அதனால் அவர்மீது வேறு நிலைப்பாடு எடுக்கத் தேவையில்லை. அப்படியே தேவையென்றாலும் ஸ்டாலின் முடிவெடுப்பார்’ என்று சொல்லியிருக்கிறார். இதை முன்வைத்துப் பேசும் அழகிரி ஆதரவாளர்கள், ‘பொதுவா, அண்ணனைப் பத்திப் பேசாத கனிமொழியே இப்படிப் பேசியிருக்கு...

அழகிரி
அழகிரி

இதுக்கு மேலயும் அண்ணன் அமைதியா இருக்குறது நல்லதில்லை... சென்னைக்குப் போய் ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும்’ என்று சீறுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், தங்களது அரசியல் எதிர்காலம் அவ்வளவுதானா என்பதுதான் அவர்களின் அப்செட்டுக்குக் காரணமாம்.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தானே அண்ணனை ரணகளமாக்கிவெச்சிருக்கீங்க!

“என் ஆளுங்களை நீக்குறீங்களா?”
கொந்தளித்த உதயநிதி

தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ நீலமேகம், தஞ்சைப் பகுதியிலிருந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலரை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு அளித்தது சர்ச்சையாகியிருக்கிறது. தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரைக் கைக்குள் போட்டுக்கொண்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதனின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த மாற்றங்களை நீலமேகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

உதயநிதி
உதயநிதி

இந்த விவகாரம் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்குப் புகாராகச் சென்றவுடன், நீலமேகத்தை போனில் அழைத்த உதயநிதி, ‘நான் சிபாரிசு செஞ்ச ஆட்களை நீக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா... இளைஞரணியில பொறுப்பு போடுறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்று ஏகத்துக்கும் எகிறிவிட்டாராம். அத்துடன் நீலமேகத்தால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களில் ஒரு சிலரை மட்டும் வைத்துவிட்டு, மற்றவர்களைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் உதயநிதி. பழையபடி உதயநிதியின் ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

என் ஆளு மேல கையைவெச்சது எவன்டா!

“நாங்க வேற முடிவு எடுக்க வேண்டிவரும்!”
எடப்பாடியை எச்சரித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சசிகலா குடும்பத்தினரின் சிபாரிசில் அமைச்சரானவர் ஓ.எஸ்.மணியன். தற்போது எடப்பாடி கோஷ்டியில் இருந்தாலும், எந்த நேரமும் இவர் சசிகலா பக்கம் சாய்வார் என்கிற பேச்சு இருந்தது. ஆனால், திடீரென தினகரனை விமர்சித்து பேட்டி கொடுத்திருக்கிறார் மணியன். இதற்குப் பின்னணியில் ஒரு டீலிங் இருப்பதாகச் சொல்கிறார்கள், அ.தி.மு.க-வின் உள்விவரம் அறிந்தவர்கள். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவான பிறகு பூம்புகார் எம்.எல்.ஏ-வான பவுன்ராஜை மாவட்டச் செயலாளராக நியமிக்க ஓ.எஸ்.மணியன் சிபாரிசு செய்தாராம். ஆனால், கட்சித் தலைமையோ நகரச் செயலாளராக இருந்த செந்தில்நாதனை மாவட்டச் செயலாளராக நியமித்துவிட்டது. இந்தநிலையில்தான், சசிகலா தமிழகம் வருவதற்கு முன்பாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்த ஓ.எஸ்.மணியன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்திருக்கிறார்.

ஓ.எஸ்.மணியன்.
ஓ.எஸ்.மணியன்.

அப்போது, ‘இக்கட்டான காலகட்டத்தில் உங்களுக்குத் துணையாக இருந்திருக்கிறோம். எங்களை மதித்து செந்தில்நாதனை நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலாளராக பவுன்ராஜை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் வேற முடிவு எடுக்க வேண்டிவரும்’ என்று எச்சரித்தாராம். இதனால், மிரண்டுபோன கட்சித் தலைமை, பவுன்ராஜை மாவட்டச் செயலாளராக நியமித்துவிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்த செந்தில்நாதனை மாவட்ட ஜெ. பேரவைத் தலைவராக நியமித்திருக்கிறது. இந்த மாற்றத்துக்குப் பிரதிபலனாகத்தான் ஓ.எஸ்.மணியன், தினகரனை விமர்சித்துப் பேட்டியளித்தார் என்று கூறப்படுகிறது.

ஓ.எஸ் சாருக்கே ‘ஓயெஸ்’ சொல்லலைன்னா எப்பூடி!

திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் போட்டி?

தி.மு.க கூட்டணியிலிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தனது சொந்தத் தொகுதியான திருச்செங்கோட்டில் போட்டியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, பிப்ரவரி 12-ம் தேதி மேட்டூர் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் திருப்பிவிட வலியுறுத்தி, நடைப்பயணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் ஈஸ்வரன்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

‘தொகுதிக்குள் வேலையை ஆரம்பியுங்கள். ஸ்டாலினிடமே நான் பேசிவிட்டேன், இந்தத் தொகுதி நமக்குத்தான்’ என்று நிர்வாகிகளிடம் ஈஸ்வரன் கூறியிருப்பதால், தேர்தல் வேலை சூடுபறக்கிறதாம். இதைக் கேட்டு பதற்றமான திருச்செங்கோடு தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் போன் போட்டு விசாரிக்க... பொறுமையாகக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறதாம் கட்சித் தலைமை.

காத்திருந்து... காத்திருந்து...

விறுவிறுப்பாகும் கொடநாடு வழக்கு!

கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பில் முனைப்பாக இருக்கிறார்களாம். சமீபத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சசிகலா விடுதலை குறித்தும், கொடநாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறித்தும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

மேலும், சசிகலாவுக்கும் கொடநாடு பங்களாவுக்கும் நெருங்கிய தொடர்பிலிருந்த கூடலூர் சஜ்ஜீவன் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். பதறிப்போன அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘இந்தச் சமயத்தில் இது குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை’ என்று இந்த விவாதத்தை எதிர்த்திருக்கிறார். காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதத்தையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தமிழக அரசியலையே மாற்றியமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

குளிர்லயும் வேர்க்கவெப்பாங்கன்னு சொல்லுங்க!

55 லட்சம் ரூபாய் எங்கே?
நெல்லையில் குடையும் கேள்வி...

நெல்லை மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள், தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காகத் தொடங்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி சேவையில் முறைகேடு நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் மாநகராட்சி நிர்வாகம், ‘கடந்த 2016 ஜூன் முதல் 2020 ஆகஸ்ட் வரை கட்டணமில்லா சேவையைப் பராமரிப்பதற்காக நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 30,36,895 ரூபாய் கொடுக்கப்பட்டது’ என்று பதில் சொல்லியிருக்கிறது.

முதல்வரை எச்சரித்த ஓ.எஸ்.மணியன் முதல் அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இதே கேள்விக்கு, ‘சேவை பராமரிப்புக்காக 85,00,351 ரூபாய் பெறப்பட்டது’ என்று அண்ணா பல்கலைக்கழகம் ஆர்.டி.ஐ-யில் பதிலளித்திருக்கிறது. நெல்லை அண்ணா பலகலைக்கழகம் தெரிவிக்கும் தொகைக்கும், மாநகராட்சி தெரிவித்திருக்கும் தொகைக்கும் சுமார் 55 லட்சம் ரூபாய் வித்தியாசம் இருப்பதால், இதில் பெருமளவுக்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் பிரம்மா வீசியிருக்கும் குண்டு நெல்லையைக் கலங்கடிக்கிறது.

சொக்கா... ஒண்ணா, ரெண்டா 55 லட்சமாச்சே!

“பதவிக்காக முதல்வரைச் சந்திப்பது நன்றாக இருக்காது!”
நாசுக்காக மறுத்த இறையன்பு தரப்பு...

தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்கு நடந்த ரேஸில் இறையன்பு ஐ.ஏ.எஸ் பட்டியலில் இருந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநராகப் பணிபுரியும் இறையன்புவைப் பற்றி சிலர் முதல்வரிடம் தவறாக போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்.

வெ.இறையன்பு
வெ.இறையன்பு

இதனால்தான், தலைமைச் செயலாளர் ரேஸிலிருந்து இறையன்பு கழற்றிவிடப்பட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதையடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இறையன்பு தரப்பிடம் ‘நீங்கள் ஒருமுறை முதல்வரைப் பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், ‘என்னைப் பற்றி முதல்வருக்குத் தெரியும். பதவிக்காக அவரைச் சந்திப்பது நாகரிகமாக இருக்காது’ என்று சொல்லி நாசுக்காக மறுத்துவிட்டாராம்.

நன்றி... வணக்கம்!

தோப்பைக் கண்காணிக்கும் உளவுத்துறை!

சமீபத்தில் நடந்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பெருந்துறை அ.தி.மு.கழக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளாதது அ.தி.மு.க-வில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் இல்லை என்று சூசகமாகத் தலைமையிலிருந்து சொல்லப்பட்டதாலேயே அப்செட்டான தோப்பு, கூட்டத்தொடரை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

 தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

இந்தநிலையில், அவர் சசிகலா பக்கம் எந்நேரமும் சாயலாம் என்று பரவும் தகவலால், தோப்பின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சொல்லி உளவுத்துறைக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம் ஆளும்தரப்பு.

மைக் ஒன்... மைக் டூ... சார், இப்ப மீன் குழம்பு ஊத்தி சாப்பிடறாரு... அடுத்து ரசம்தான்!