Published:Updated:

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

செருப்பை எடுக்கச் சொன்னாரா அமைச்சர்? | தமிழரசியைப் புறக்கணிக்கிறாரா அமைச்சர் பெரியகருப்பன்? | பார்வையாளர் வரிசையில் சுரேஷ் ராஜன்! | 20 ரூபாய்க்கு இவ்ளோ பிரச்னையா? | தனி ஃபைல் ‘போட்டுக்கொடுத்த’ செல்லப்பாண்டியன்! - கழுகார் அப்டேட்ஸ்

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

செருப்பை எடுக்கச் சொன்னாரா அமைச்சர்? | தமிழரசியைப் புறக்கணிக்கிறாரா அமைச்சர் பெரியகருப்பன்? | பார்வையாளர் வரிசையில் சுரேஷ் ராஜன்! | 20 ரூபாய்க்கு இவ்ளோ பிரச்னையா? | தனி ஃபைல் ‘போட்டுக்கொடுத்த’ செல்லப்பாண்டியன்! - கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
பா.ஜ.க-வுக்குச் செல்கிறாரா மருது அழகுராஜ்?

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும், ‘நமது அம்மா’ ஆசிரியருமான மருது அழகுராஜ், பா.ஜ.க-வுக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்கிறார்கள் இலை வட்டாரத்தில். சமீபகாலமாக எடப்பாடியும் பன்னீரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. கட்சி நாளிதழை நடத்துவதிலும் அவர்கள் பெரிதாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தவிர, மருது அழகுராஜ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, கட்சித் தலைமை அவருக்கு வாக்களித்த சில விஷயங்களைச் செய்யாததால், அவருக்குப் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டது.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில்தான் சமீபகாலமாக, தான் போகிற இடங்களிலெல்லாம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் புகழ்ந்து பேசுகிறார் மருது அழகுராஜ். இதனால் குஷியான அண்ணாமலை, ‘பா.ஜ.க-வில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருகிறேன். விரைவில் நம்ம கட்சியில் அவரைச் சேரச் சொல்லுங்க’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியனுப்பியிருக்கிறார். இதற்கு மருது அழகுராஜ் பதில் சொல்லவில்லையென்றாலும், விரைவில் அவர் பா.ஜ.க-வுக்குச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருடன் நெருக்கமாகப் பழகுபவர்கள்!

செருப்பை எடுக்கச் சொன்னாரா அமைச்சர்?
மதுரையில் கிளம்பிய புதிய சர்ச்சை

‘ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்... பி.டி.ஆர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்’ என்றெல்லாம் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். இந்த நிபந்தனைகள் மேயரின் கணவர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. “நாமளும் கட்சிக்காரங்கதான். மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் தேர்வாகியிருக்கோம்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

சிபாரிசு செஞ்சாருங்கிற ஒரே காரணத்துக்காக அவருக்கு அடிமையா இருக்கணுமா?’’ என்று மேயர் தரப்பில் ஆதங்கப்படுகிறார்கள். இது ஒருபக்கமென்றால், பழனிவேல் தியாகராஜனின் செருப்புகளை, கட்சி நிர்வாகி ஒருவர் குனிந்து எடுத்துக் கொடுப்பது போன்ற பாவனையிலான படம் ஒன்று வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது. ‘சமூகநீதி பேசும் கட்சியில் செருப்பை எடுத்துக் கொடுப்பதுதான் சமூகநீதியா?’ என்ற வாசகத்துடன் இந்தப் படத்தை அமைச்சரின் எதிர்க்கோஷ்டியினர் பரப்பிவருகிறார்கள். ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்களோ, “கட்சி நிர்வாகி ஒருவர் அமைச்சர் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஆசி வாங்குவதற்காகக் குனிந்தார். அதற்கே அமைச்சர் அப்படியெல்லாம் குனியக் கூடாது என்று கண்டித்தார். இதைத்தான் செருப்பை எடுத்துக் கொடுத்தார் என்று அவதூறு பரப்பிவருகிறார்கள்” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்!

தமிழரசியைப் புறக்கணிக்கிறாரா அமைச்சர் பெரியகருப்பன்?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசியைப் புறக்கணிக்கிறார் என்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. ‘தமிழரசியைக் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது; அவரது தொகுதி நிகழ்ச்சிகளில்கூட படமோ, பெயரோ போடாமல் விளம்பரம் செய்ய வேண்டும்’ என்று பெரியகருப்பன் தரப்பிலிருந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

இதையும் மீறி அமைச்சரின் நிகழ்ச்சிகளில் தமிழரசி பங்கேற்கும் சூழல் ஏற்பட்டால், அவரை மட்டம்தட்டிப் பேசுகிறாராம். இது பற்றிப் பேசும் மானாமதுரை கட்சி நிர்வாகிகள், “அமைச்சர் பெரியகருப்பன் சமூகரீதியாகப் பாரபட்சம் காட்டுகிறார். அதன் அடிப்படையில்தான் தமிழரசியையும் புறக்கணிக்கிறார். சமீபத்தில் இளையான்குடி பேருந்து நிலையம் கட்டுவது குறித்து கோரிக்கை வைக்கவந்த சிலரை ‘நாசமாப் போங்க...’ என்கிற ரேஞ்சுக்கு அமைச்சர் பேசியதைத் தொடர்ந்து அவர்கள் முதல்வர் அலுவலகத்துக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்கள்” என்றார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பார்வையாளர் வரிசையில் சுரேஷ் ராஜன்!
கொதிக்கும் ஆதரவாளர்கள்

நாகர்கோவிலில் தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் ஏப்ரல் 10 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் பார்வையாளர்கள் வரிசையில் அமரவைக்கப்பட்டார். இதையடுத்து, “சுரேஷ் ராஜனின் உதவியாளராக இருக்கும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூதுக்குக்கூட மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கட்சிப் பொறுப்பில் இல்லை என்பதற்காக இப்படி அவரை நோகடித்திருக்க வேண்டாம். முன்னாள் அமைச்சர், கழக முன்னோடி என்ற முறையிலாவது மேடையின் பின்வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கியிருக்கலாம். வேண்டுமென்றே அண்ணனை அவமானப்படுத்திவிட்டார்கள்” என்று கொதிக்கிறார்கள் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள்.

20 ரூபாய்க்கு இவ்ளோ பிரச்னையா?
ஊட்டி அட்ராசிட்டி!

ஊட்டி நகராட்சிச் சந்தையில் காரை நிறுத்தியிருந்த, தி.மு.க கவுன்சிலர் விசாலாட்சியின் கணவர் விஜயகுமாரிடம் பார்க்கிங் கட்டணத்தைக் கேட்டிருக்கிறார் ஊழியர். உடனே கொதிப்படைந்தவர், “நான் யார் தெரியுமா... கவுன்சிலர் கணவர். ஒரு கவுன்சிலர் வண்டிக்கே பார்க்கிங் காசு கேட்பியா... உன்னை என்ன பண்றேன் பாரு!” எகிறியிருக்கிறார்.

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

அதற்கு அந்த ஊழியரோ, “நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை. பார்க்கிங் காசு இருபது ரூபாயைக் கட்டுங்க” என்று கறார் காட்டியிருக்கிறார். இதையடுத்து, விஜயகுமாரின் ஆதரவாளர்களும் அந்த ஊழியரைச் சுற்றிவளைத்து சத்தம் போட, மார்க்கெட்டே சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறது. கடைசியில் வேறு வழியில்லாமல் 20 ரூபாய் கட்டணத்தை கொடுத்துவிட்டுச் சென்றார் விஜயகுமார். இது பற்றிப் பேசும் கட்சி நிர்வாகிகளோ, “இருபது ரூபாய்க்கெல்லாம் கட்சிப் பேரைக் கெடுக்குறாங்க” என்று முணுமுணுக்கிறார்கள்!

சண்முகநாதன் மீது 42 புகார்கள்...
தனி ஃபைல் ‘போட்டுக்கொடுத்த’ செல்லப்பாண்டியன்!

“வடக்கு, தெற்கு என்றிருக்கும் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க-வை மூன்றாகப் பிரித்து, எனக்கு மாநகர், மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வகித்துவரும் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எனக்கு வழங்க வேண்டும்” என்று கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான செல்லப்பாண்டியன்.

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

மேலும் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் மீது 42 புகார்களை தனி ஃபைலாகவே போட்டு தலைமையிடம் அளித்திருக்கிறாராம். இதற்கு பதிலளித்த கட்சித் தலைமை, “ஒரு மாசம் பொறுமையா இருங்க. உட்கட்சித் தேர்தல் முடிஞ்சதும், புதுசா ஒரு வழிகாட்டுதல் குழுவை அமைக்கப்போறோம். அதுக்கு அப்புறம் மாவட்டம் பிரிப்பு பற்றிப் பேசுவோம்” என்று சொல்லியிருக்கிறதாம். இதையடுத்து, “ஏற்கெனவே இருக்குற வழிகாட்டுதல் குழு என்ன ஆச்சுன்னு தெரியலை... இதுல புதுசா ஒரு குழு போடப் போறாங்களாம்” என்று புலம்புகிறது செல்லப்பாண்டியன் தரப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொத்து வாங்க... விற்க கமிஷன்
வசூல் வேட்டையில் விருகம்பாக்கம் ஆளுங்கட்சியினர்!

சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் தொகுதிக்குள் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை யார் வாங்கினாலும், விற்றாலும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆளுங்கட்சியினர் சிலர் வசூலித்துவிடுகிறார்களாம். புதிதாக வீடு கட்டுபவர்களிடமும் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துவிடுகிறார்களாம். இப்படி வசூல் செய்வதற்காகவே சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க தெற்கு மாவட்ட தொண்டரணியைச் சேர்ந்த இரண்டெழுத்து பிரமுகர் ஒருவரை ஆஃப் தி ரிக்கார்டாக நியமித்திருக்கிறார்கள்!

தாம்பரம் மேயர், துணை மேயருக்கு அழைப்பில்லை!
முதல்வர் கூட்டத்திலேயே புறக்கணிப்பு...

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம் மேயர், துணை மேயருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்களின் பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெறவில்லை. தாம்பரம் மாநகராட்சிக்கான முதல் மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் முதல் கூட்டத்திலேயே அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேயர் முதல் ஆளுங்கட்சியினரின் வசூல் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து, “கோஷ்டி மோதலால் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுமென்றே அவர்களைத் தவிர்த்துவிட்டார்” என்று அமைச்சரின் எதிர்க்கோஷ்டினர் விமர்சிக்கும் நிலையில், அமைச்சர் தரப்போ, “கவனக்குறைவால் அவர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன” என்று விளக்கம் கொடுக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism