Published:Updated:

கனிமொழியை அழைக்காத அறிவாலயம் முதல் எடப்பாடி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி வரை! கழுகார் அப்டேட்ஸ்

‘‘தலைமைச் செயலகம் வரை செல்கிறேன். உமக்கான செய்திகளை டெலிகிராமில் அனுப்புகிறேன்’’ - சுருக்கமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் கழுகார். சற்று நேரத்தில் டெலிகிராமில் வந்து விழுந்தன செய்திகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“அத்துமீறிய காவல்துறை”
திருமா கொதிப்பு... ஸ்டாலின் அப்செட்!

சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த காவல்துறையினரை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செப்டம்பர் 28-ம் தேதி போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “சாதி சங்கக் கொடிகள், ரசிகர் மன்றக் கொடிகள், இதர கட்சிக் கொடிகள் எல்லாம் இருக்கும் இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்றுவதற்கு தடையா?” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இதையடுத்து, “கூட்டணியில் இருந்துக்கொண்டே, முதல்வர் கைவசம் உள்ள காவல்துறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது சரியா?” என்று ஆட்சி மேலிடத்தில் புகைச்சல் எழுந்துள்ளது. ஆனால், “நாங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தவில்லை, அத்துமீறிய காவல்துறைக்கு எதிராகவே நடத்துகிறோம். காவல்துறையில் உள்ள சாதிய பாகுபாடுகள்தான் இந்த பிரச்னைக்குக் காரணம்” என்று திருமாவளவன் தரப்பில் சொல்ல, அப்போதும் சமாதானமாகவில்லையாம் அறிவாலயம் தரப்பு!

ஸ்டாலினிடம் புலம்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்!

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். இந்தச் சந்திப்பின் பின்னணியில் வேறொரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதையை தி.மு.க கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதைச் சரிகட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிட்ட சில இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது.

கனிமொழியை அழைக்காத அறிவாலயம் முதல் எடப்பாடி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி வரை! கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், அங்கும்கூட தி.மு.க-வினர் யாரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதில்லை; ஒத்துழைப்பும் தருவதில்லை என்று சத்தியமூர்த்தி பவன் வரை புகார்கள் வரிசைகட்டுகின்றன. மேலும், சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பேசிய வீடியோகள் கூட்டத்தொடர் முடிந்த சில நாள்களிலேயே அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிய சட்டமன்ற உரை வீடியோக்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இந்த குமுறல்களையெல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகவே கொட்டியிருக்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், அனைத்தையும் சரிசெய்வதாக உறுதியளித்திருக்கிறாராம்.

உளறிய துரைமுருகன்...
உதவி செய்த உடன்பிறப்புகள்!

காட்பாடி ஒன்றியத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அமைச்சர் துரைமுருகன், ‘‘உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் தொகுதி எம்.எல்.ஏ-க்களின் வாள், ஈட்டி’’ என்றவர் திடீரென்று, ‘‘1971-லிருந்து 50 ஆண்டுக்காலம் காட்பாடி மக்களாகிய உங்களோடுதான் வளர்ந்துள்ளேன். இரண்டு முறைதான் வாய்ப்பு தவறியது. ஒன்று, இந்திரா காந்தியைச் சுட்டபோது... இன்னொன்று எம்.ஜி.ஆரைச் சுட்டபோது’’ என்றார். உடனே அருகிலிருந்தவர்கள், ‘‘எம்.ஜி.ஆர் இல்லை தலைவரே... ராஜீவ் காந்தி’’ என்று எடுத்துக்கொடுக்க... துரைமுருகனும் ‘‘ஆமாம்... ராஜீவ் காந்தியைச் சுட்டபோது தோற்றுவிட்டோம்’’ என்று மீண்டும் ‘டங் ஸ்லிப்’பாகிப் பேசினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

அப்போதும் அலர்ட்டான நிர்வாகிகள், ‘‘தலைவரே... ராஜீவ் காந்தியை சுடவில்லை. குண்டு வைத்து கொன்றுவிட்டார்கள்’’ என்றார்கள். ‘‘அடப்போங்கப்பா...’’ என்று தனது பாணியில் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அந்த விஷயத்தைக் கடந்துசென்ற துரைமுருகன், ‘‘இந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றுள்ளேன். அடுத்த முறை 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்’’ என்றார் பூரிப்புடன்.

கழுகார் பதில்கள்
'தி ரைஸிங் சன்' வெளியீடு
அழைக்கப்படாத கனிமொழி!

மறைந்த கருணாநிதியின் கனவு இதழான ‘தி ரைஸிங் சன்’ அதிகாரப்பூர்வ ஆங்கில இதழை அறிவாலயத்தில் வைத்து சமீபத்தில் வெளியிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கனிமொழியை அழைக்காத அறிவாலயம் முதல் எடப்பாடி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி வரை! கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், கனிமொழி மட்டும் மிஸ்ஸிங். இதையடுத்து, “மேடம் ஏன் கலந்துகொள்ளவில்லை?” என்று அவரின் ஆதரவாளர்களிடம் கேட்டால், “அழைத்தால்தானே அவர் கலந்துகொள்வார். தந்தையின் கனவு இதழை வெளியிடும் நிகழ்ச்சியில் மகளுக்கே அழைப்பில்லை. அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்த நாகரிகம்!” என்று புலம்புகிறார்கள்!

காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி
கண்டுக்கொள்ளாத எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக விருதுநகர் வந்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் காலில் எடுத்த எடுப்பில் மடாரென விழுந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. வழக்கமாக யாரேனும் காலில் விழுந்து வணங்கினால், லேசாக தடுப்பதோ, தோளில் தட்டி எழுப்புவதோ எடப்பாடியின் வழக்கம். ஆனால், ராஜேந்திர பாலாஜி காலில் விழுவதை எடப்பாடி சற்றும் பொருட்படுத்தவில்லை; தடுக்கவும் இல்லை; எழச் சொல்லவும் இல்லை. அப்படியே நகர்ந்துவிட்டார். இதனால், ராஜேந்திரபாலாஜி கடும் அப்செட் என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க... இதுவரை எதிரும்புதிருமாக இருந்த ராஜேந்திர பாலாஜியும், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனும் கடந்த சில மாதங்களாக கைகோத்தபடியே வலம் வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜவர்மனுக்கு எதிராக நியமிக்கப்பட்ட கிழக்கு மாவட்டச் செயலாளரான வெம்பக்கோட்டை ரவிச்சந்திரனை நீக்கிவிட்டு, ராஜவர்மனை கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க காய்நகர்த்தி வருகிறார் ராஜேந்திர பாலாஜி. அதனாலேயே எடப்பாடி வருகை தந்தபோது ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் “ராஜேந்திர பாலாஜி ஒழிக” என்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பானது. மோதலைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி எதையும் கண்டுகொள்ளாதவராக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

‘‘நான் அவன் இல்ல!’’

செங்கல்பட்டு மாவட்டம், வேங்கைவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் நிலவின் பெயரைக் கொண்ட வேட்பாளர் மீது குற்றச்சாட்டுக்கள் வட்டமடிக்கின்றன. இரண்டு மனைவி சர்ச்சையில் சிக்கிய அவர்மீது, ஆபாச வீடியோ புகாரிலும் எஃப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கிறதாம். அந்த வழக்கில் புகாரளித்த இளம்பெண்ணின் காதலனைக் கைதுசெய்த போலீஸார், நிலவின் பெயரைக் கொண்டவரைக் கைதுசெய்யவில்லையாம்.

`சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை முதல் புதுச்சேரி தலைவரை மிரட்டிய டெல்லி வரை' - கழுகார் அப்டேட்ஸ்

சம்பந்தப்பட்ட காக்கிகளை அவர் நன்றாகக் கவனித்ததால், இவர் தலைமறைவாக இருப்பதாக உயரதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டார்களாம். ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நிலவு பிரமுகர், சுதந்திரமாக வாக்கு கேட்டுவருகிறார். அதுமட்டுமல்ல... “எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருப்பவர் எனது பெயர் கொண்டவர்தான். ஆனால், நான் அவனில்லை’’ என்றும் சொல்லி வருகிறார். அவர்மீது புகார் அளித்த இளம்பெண்ணின் குடும்பத்தினரும், தங்களுக்கு வந்த மிரட்டல்களால் அமைதியாகிவிட்டார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘வன்முறைக்கு அடித்தளமா?’’
ராஜகண்ணப்பன் மீது பாயும் அ.தி.மு.க-வினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது பிரசாரத்தில், ‘‘நாம் வெற்றிபெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ... எல்லாவற்றையும் செய்யுங்கள். பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம். எதிர்க்கட்சிக்காரன் டி.எஸ்.பி-யிடம் புகார் தருகிறான் என்றால், நாம் எஸ்.பி-யிடம் பேசிக்கொள்ளலாம்.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

என்ன நடந்தாலும் ஒருபடி மேலே போய் பார்த்துக்கொள்ளலாம். நான் இருக்கிறேன்’’ என்று பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் அ.தி.மு.க-வினரோ, ‘‘ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிக்கச் சொல்கிறாரா, வன்முறை செய்ய சொல்கிறாரா? இப்போதே இப்படியென்றால் இங்கு உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றால் இன்னும் என்னென்ன செய்வார்கள்?” என்று பொங்குகிறார்கள்!

முதலில் சஸ்பெண்ட்... அடுத்து ரெய்டு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறையில் கொடிகட்டி பறந்த மாவட்டப் பதிவாளர்களான குமார, சாமி பிரமுகர்கள் இருவரை மேலதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அதேபோல், சென்னை கிழக்குக் கடற்கரை பகுதியில் பணியாற்றிய குமார பிரமுகரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த மூவர் மீதும் ஏற்கெனவே இருக்கும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.

மிஸ்டர் கழுகு: டெல்லி அசைன்மென்ட்... கண்காணிப்பில் ஆளுந்தரப்பு வாரிசுகள்!

இந்தநிலையில், இருவரும் பரிகாரம் தேடி மதுரை பக்கம் போகவே... “இந்த விஷயத்துல எல்லாம் தலையிட முடியாது’ என்று கைவிரித்துவிட்டாராம் துறை சார்ந்த மதுரைப்புள்ளி. தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கும் இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த முடிவெடுத்திருக்கிறதாம். அதற்கு ஏதுவாகத்தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு