Published:Updated:

துர்கா ரூட்டில் பதவி முதல் வேலுமணியைப் போட்டுக்கொடுத்த ட்ரீட்மென்ட் புள்ளி வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து அழைப்பு வந்தது... “செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்... நாளை நேரில் சந்திப்போம்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பார்க்கத்தான் அப்பாவி!
கமிஷன் மேட்டரில் கறார்...

நெல்லை மாவட்டத்தின் ஆளுங்கட்சிப் பிரமுகர் பார்ப்பதற்குத்தான் ‘அப்பாவி’யாம். தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறு திட்டப்பணிகள் நடந்தாலும், கறாராகக் கணக்கு போட்டு கமிஷனைக் கறந்துவிடுகிறார் என்கிறார்கள். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலிருக்கும் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனம் ஒன்று, சி.எஸ்.ஆர் நிதியைவைத்து அருகிலுள்ள கிராமங்களில் குளங்களைத் தூர்வாருவது, பொதுக் காரியங்களுக்கான கட்டடங்களைக் கட்டிக்கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அப்பாவி பிரமுகர், `நீங்கள் நேரடியாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம். நிதியை ஊராட்சி ஒன்றியக் கணக்கில் சேர்த்துவிடுங்கள். நாங்கள் முடித்துக்கொடுக்கிறோம்’ என்றாராம். இவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்று அந்த நிறுவனத்தினர் விசாரணை செய்ததில், `எல்லாம் கமிஷனுக்காகத்தான்’ என்று தெரியவந்ததாம். இதையடுத்து, சி.எஸ்.ஆர் பணிகளைத் தொடங்காமல் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறதாம் அந்த நிறுவனம்!

``அமைச்சர் எனக்குப் பெரியப்பா மாதிரி!’’
அளந்துவிடும் ஆவின் பிரமுகர்

முருகனின் பெயர்கொண்ட ஆவின் பிரமுகரின் வசூல் மோசடி பற்றித்தான் மலைக்கோட்டை மாநகரில் மலைப்பாகப் பேசுகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவினில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி அவர் வசூல்வேட்டை நடத்தியிருக்கிறார். ஆட்சி மாறியும் அவர் அதே பதவியில் தொடரும் நிலையில், எதிர்க் கோஷ்டியினர் அவர் நடத்திய வசூல் விவரங்களை ஆதாரங்களுடன் ஆளுங்கட்சிக்குப் போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.

திருச்சி
திருச்சி

இதைச் சரிக்கட்ட ஆவின் பிரமுகரின் உறவினர் ஒருவர், மீசைக்கார அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். இன்னொருபுறம், புகாரில் சிக்கிய ஆவின் பிரமுகரும், ``மீசைக்கார அமைச்சர் என் பெரியப்பா மாதிரி’’ என்று பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் கதையளந்துவருகிறார். இதையடுத்து, அமைச்சர் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் மலைக்கோட்டை மாநகரின் கட்சி நிர்வாகிகள்!

வேலுமணியைப் போட்டுக்கொடுத்த ட்ரீட்மென்ட் புள்ளி!

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ரெய்டால், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் கிலியில் இருக்கிறார்கள். டெல்டாவில் கோலோச்சும் ட்ரீட்மென்ட் புள்ளி ஒருவர், தி.மு.க அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோரிடம் மறைமுகமாக நட்பு பாராட்டிவருவதாக ஏற்கெனவே ஏரியாவில் புகைச்சல் கிளம்பியது. வேலுமணி மீதான ரெய்டுக்கு முன்பே செந்தில் பாலாஜியை ட்ரீட்மென்ட் புள்ளி சந்தித்துப் பேசியதாகவும், அப்போது வேலுமணி குறித்துச் சில ரகசியங்களை அவர் போட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வேலுமணி
வேலுமணி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றிபெறுவதற்காக 100 கோடி வரை அவர் செலவிட்டதால், ட்ரீட்மென்ட் புள்ளியையும் விசாரணை வளையத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் சொல்லிவந்தார்கள். தனக்கு எதிராக ரெய்டு வந்துவிடக் கூடாது என்பதாலேயே செந்தில் பாலாஜி மூலமாக ட்ரீட்மென்ட் புள்ளி காய்களை நகர்த்திவருகிறாராம்!

துணைப் பிரதமர் ஸ்டாலின்!
பா.ஜ.க தலைவர் பலே ஐடியா...

``மாநில அரசியல்ல கம்பு சுத்திக்கிட்டிருந்த ஸ்டாலினுக்கு நம்ம தம்பியே பிளான் போட்டுக் கொடுத்துடுச்சே!” என்கிற அங்கலாய்ப்பு சத்தம் அதிகம் கேட்கிறது கமலாலயத்தில். விஷயம் இதுதான்... கடந்த சுதந்திர தின விழாவில் வேலூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், ``2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு கட்சிகூட கிடையாது.

அண்ணாமலை, முருகன்
அண்ணாமலை, முருகன்

காங்கிரஸ் கட்சி சிதறிப்போய்க் கிடக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் போன்றோர் மோடியை எதிர்த்து விஷப் பரீட்சை செய்கிறார்கள். `தான் துணை பிரதமர் ஆகிவிட்டால்; தன் மகனை தமிழக முதல்வராக்கிவிடலாம்’ என்ற கனவும் ஸ்டாலினுக்கு இருக்கிறது’’ என்றார். இதையடுத்து, தி.மு.க கட்சியின் மூத்த தலைவர்களோ, ``மல... நல்லத் திட்டம் மல..!” என்று அந்த பா.ஜ.க தலைவரைக் கிண்டலடித்துவருகிறார்கள்!

துர்கா ரூட்டில் பதவி...
சர்ச்சையில் வாகை சந்திரசேகர்..!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமனம் செய்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 2016-21 காலகட்டத்தில் சென்னை வேளச்சேரி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த வாகை சந்திரசேகர் தொகுதிப் பக்கமே தலைகாட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்கெனவே நிலவியது. அத்துடன் ஐபேக் நிறுவனமும், அவருக்குச் சாதகமாக `நோட்’ போடவில்லை என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து கடந்த தேர்தலில் அந்தத் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது.

துர்கா ரூட்டில் பதவி முதல் வேலுமணியைப் போட்டுக்கொடுத்த ட்ரீட்மென்ட் புள்ளி வரை.. கழுகார் அப்டேட்ஸ்!

இந்தநிலையில்தான், தற்போது வாகை சந்திரசேகருக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய பொறுப்பு கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. ``திரைத்துறையைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சிக்காக இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் பதவி கொடுக்காமல் தன் மனைவிக்கும் துர்கா மேடத்துக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்திப் பதவியைப் பிடித்துவிட்டார் சந்திரசேகர்’’ என்று பொருமுகிறார்கள் உடன்பிறப்புகள்!

வேலுமணிக்கு வேல், சேவற்கொடி பரிசு!

அ.தி.மு.க-வில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இணையான தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார் வேலுமணி. அதனாலேயே, கோவை விமான நிலையத்துக்கு வந்த வேலுமணியை வரவேற்கத் தொண்டர்களைக் குவித்து, `இது எஸ்.பி.வி கோட்டை’, ‘கொங்கு முதல்வர்’, `எம்.ஜி.ஆர் வாரிசு...’ என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பவைத்தார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

கோவை விமான நிலையம் - கூட்டம்
கோவை விமான நிலையம் - கூட்டம்

இன்னொரு பக்கம் திருச்செந்தூரில் எதிரிகளை அழிக்கும் சத்ரு சம்ஹார யாகத்தைச் செய்த வேலுமணி, கோவை வந்த பிறகும் வீட்டில்வைத்து பல்வேறு பூஜைகளைச் செய்தாராம். பூஜையில் கலந்துகொள்ளச் சென்ற அவருக்கு நெருக்கமான சிலரும் வேல், சேவற்கொடியெல்லாம் வழங்கி, ``எதிரிகளை சூரசம்ஹாராம் செய்ய முருகனின் ஆயுதத்தை வழங்கியிருக்கிறோம்’’ என்று வேலுமணிக்கு உற்சாகம் தந்துவிட்டு வந்திருக்கிறார்கள்!

``பழிவாங்கல் அப்புறம்...
இப்போ பதவியே முக்கியம்!’’

அவைத்தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி என்று நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க-வில் பவர்ஃபுல் மனிதராக வலம்வந்தவர் பி.ஆர்.சுந்தரம். இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் சீட் பெற தீவிரமாக முயன்றார். சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தான் வகித்துவந்த மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியைக்கூட ராஜினாமா செய்தார். ஆனால், சீட் கிடைக்கவில்லை. `அதற்குக் காரணம், மாவட்டச் செயலாளர் தங்கமணிதான்’ என்று கொந்தளித்த பி.ஆர்.சுந்தரம், சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-விலும் இணைந்துவிட்டார்.

அத்துடன், `முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவேன்’ என்றும் கொக்கரித்தார். ஆனால், திடீரென்று அமைதியாகிவிட்டார். கேட்டால், ``பழிவாங்குவதைவிட பதவிதான் இப்போதைக்கு முக்கியம் என்று முடிவெடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம். பதவி கிடைத்த பிறகு தங்கமணிக்கு எதிராக அரசியல் செய்வார்’’ என்று புது ஆரூடம் சொல்கிறார்கள் சுந்தரத்தின் ஆதரவாளர்கள்!

பாமக-வை வறுத்தெடுத்த எடப்பாடி முதல் மோடிக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி வரை! - கழுகார் அப்டேட்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு