Published:Updated:

ஏமாந்த துரைமுருகன் முதல் குழம்பித் தவிக்கும் செந்தில் பாலாஜி வரை..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

`மெயில் செக் செய்யவும்...’ கழுகாரிடமிருந்து குறுந்தகவல் ஒளிர்ந்தது. துணுக்குகளைக் கொட்டியிருந்தார் கழுகார்!

துரைமுருகனுக்கே அரோகரா!

கடந்த ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறையில் கோலோச்சிய இரண்டு அதிகாரிகள் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்ததால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார் துறை அமைச்சர் துரைமுருகன். அந்த இருவரில் ஒருவர் பெண் அதிகாரி. அவர் துறையின் முக்கிய அதிகாரிக்கும், முன்னாள் அமைச்சரின் உறவினருக்கும் வேண்டப்பட்டவரும்கூட. அதனால், அந்தப் பெண் அதிகாரியை போனில் அழைத்த முக்கிய அதிகாரி, ‘உங்க இரண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியல்ல போடச் சொல்லிட்டாங்க.

துரைமுருகன்
துரைமுருகன்

நீங்க கொரோனா தொற்றுன்னு சொல்லிட்டு மெடிக்கல் லீவ்ல போயிடுங்க. உங்களுக்கு பதிலாக வேற ஆளை டிரான்ஸ்ஃபர் போட்டுடுறேன். காத்திருப்போர் பட்டியல்ல நீங்க இல்லாத மாதிரி பண்ணிக்கலாம். நிலைமை சரியான பிறகு பதவிக்கு வந்துடலாம்’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படி அந்தப் பெண் அதிகாரி விடுமுறையில் சென்றுவிட, அவர் பணியிடத்துக்கு வேறொருவரை நியமித்துவிட்டு, துரைமுருகனிடம் கணக்கு காட்டிவிட்டாராம் முக்கிய அதிகாரி.

அல்வாவுக்கே அல்வானு சொல்லுங்க!

ஷாக் கொடுத்த கிச்சன்
அதிர்ச்சியில் அமைச்சர்கள்

சமீபத்தில், பசையுள்ள இலாகாக்களை வைத்திருக்கும் இரண்டு அமைச்சர்களைத் தொடர்புகொண்ட சித்தரஞ்சன் சாலை தரப்பு, அந்தந்தத் துறைகளில் வருமானம் வரக்கூடிய தொழில்களின் பட்டியல், அதற்குத் தேவைப்படும் முதலீடு குறித்த விவரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறது. அப்படித் தயாராகும் பட்டியலைச் சரிபார்த்து, முதலீடு செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கென தனியாக ஒரு டீமையும் ரெடி செய்திருக்கிறதாம் கிச்சன் தரப்பு. அந்த அமைச்சர்கள், ‘இப்ப எதுக்குங்க பட்டியல்? நீங்க சொன்னா மொத்த கப்பமும் வீடு தேடி வரப்போகுது’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, ‘எவ்வளவு நாளைக்குத்தான் கப்பம் வசூலிச்சுக்கிட்டே இருக்குறது. நாங்களே நேரடியா இறங்கிட்டா, மொத்த லாபமும் கிடைச்சிடுமே...’ என்று குண்டு வீசவும், அமைச்சர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்களாம். பசையான துறைகளைப் பெற்றும் பலனில்லை என்று புலம்பித் தீர்க்கிறார்கள் அமைச்சர்கள்.

`மேல அள்ளி வீசுங்க, வட்டத்துக்குள்ள விழுறதெல்லாம் உங்களுக்குத்தான்’னு சொல்லிட்டாங்கபோல!

கண்டும் காணாத சுப்ரியா!

நீலகிரி மாவட்டத்தில் காட்டுத்தீயாகப் பரவும் கொரோனா இரண்டாம் அலை பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை. நீலகிரி தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளின் தலைமைச் செயல் அலுவலரும், முதன்மைச் செயலாளருமான சுப்ரியா ஐ.ஏ.எஸ்., மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலராக, கடந்த ஓராண்டாகப் பொறுப்பு வகித்துவருகிறார். கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் இக்கட்டான சூழலில், வனத்துறை அமைச்சர் நடத்திய இரண்டு ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. இவர் குறித்து புலம்பும் சுகாதாரத்துறையினர், “மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள இந்த மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 300 பாசிட்டிவ் கேஸ் என்பது மிகவும் அதிகம்.

ஏமாந்த துரைமுருகன் முதல் குழம்பித் தவிக்கும் செந்தில் பாலாஜி வரை..! கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், அந்தப் பெண் அதிகாரியோ, எப்போதாவது ஒரு மலை கிராமத்துக்குச் சென்று அவர்களைக் கைகழுவச் சொல்லி வீடியோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்” என்று‌ புலம்புகிறார்கள். இனியாவது களத்தில் இறங்குவாரா சுப்ரியா?

பேருல மட்டும் ‘சுப்ரியா’ இருந்தா போதுமா தாயி... நேர்ல போங்கம்மா!

கே.எஸ்.அழகிரி அதிரடி...
அரண்டுகிடக்கும் கதர்கள்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேஷ்குமார் மாற்றப்பட்டு, தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டத் தலைவருக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இது பற்றி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் முறையிட்டிருக்கிறார் தாரகை கத்பர்ட். ‘யார் சட்டமன்றக் கட்சித் தலைவர்’ என்கிற பஞ்சாயத்தே முடிவுறாத நிலையில், இந்தப் பஞ்சாயத்து எழுந்ததால் கடுப்பான அழகிரி, தாரகை கத்பர்ட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் இரண்டு வட்டார தலைவர்களைத் தவிர பிற வட்டாரங்களுக்குப் பொறுப்பாளர்களை அறிவித்துவிட்டாராம். அழகிரியின் அதிரடியால் அரண்டுகிடக்கிறார்கள் ஏரியாவின் கதர் புள்ளிகள்.

கதறுறதே கதர்களுக்கு வேலையாப் போச்சு!

சமாதானம் பேசும் சமூகப் பெரியவர்கள்
குழப்பத்தில் செந்தில் பாலாஜி

தேர்தலுக்கு முன்பு, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் குவித்த சொத்துகள் பட்டியலை, கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் செந்தில் பாலாஜி வெளியிட்டுவந்தார். தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகியிருக்கும் நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை அவர் முடக்கிவிடுவார் என்று சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இவர்கள் இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலர், விஜயபாஸ்கருக்கு ஆதரவாகத் தூது செல்கிறார்களாம். ‘என்ன இருந்தாலும் நம்ம ஆளு அவரு. பழசு எதையும் மனசுலவெச்சுக்காதீங்க. நாம ஒத்துமையா இருக்கோணும்’ என்று அந்தப் பெரியவர்கள் செந்தில் பாலாஜியிடம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.

‘பவரை’ கையிலவெச்சுக்கிட்டு யோசிக்கலாமா, அப்படியே ஷாக் கொடுங்க மினிஸ்டர்!

“புயல், வெள்ளத்துல கூட யாரும் வரலை!”
டென்ஷனான வேளாண் அமைச்சர்

வேளாண்மைத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதவியேற்றவுடன், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் சிலர் மரியாதை நிமித்தமாக அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அவர்களைப் பார்த்ததும் டென்ஷனான பன்னீர்செல்வம், ‘இங்க எங்களுக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கு தெரியுமா... இத்தனை வருஷத்துல ஒரு விவசாயி என்கிற முறையிலயாவது என் தோட்டத்துக்கு யாராவது வந்து பார்வையிட்டிருக்கீங்களா... புயல், வெள்ளம் வந்தப்பக்கூட யாரும் எட்டிப் பார்க்கலை’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

வந்து பார்த்திருந்தா கட்டம் கட்டியிருப்பாங்களே!

நோயாளியுடன் பயணித்த துரை வைகோ

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ம.தி.மு.க சார்பில் ஐந்து கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகோவின் மகன் துரை வைகோ மேற்பார்வையில் நடக்கும் இந்த மையங்களில், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆக்ஸிஜன் வசதியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

துரை வைகோ
துரை வைகோ

சமீபத்தில், ம.தி.மு.க சார்பாக சத்திரப்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் துரை வைகோ இருந்தபோது, கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்புடன், கொரோனா அறிகுறியோடு ஒருவர் வந்திருக்கிறார். உடனடியாக கவச உடையணிந்த துரை வைகோ, அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றியதுடன், அவருக்குத் துணையாக ராஜபாளையம் வரை பயணித்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். துரை வைகோவின் இந்த மனிதாபிமானச் செயல் அந்தப் பகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நல்லா இருங்க துரை!

அடுத்த கட்டுரைக்கு