Published:Updated:

எடப்பாடி போட்ட போன் கால் முதல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரை... | கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

அதிகாரிகளுக்கு அடித்தது ‘ஷாக்’! | ராகுலைப் பின்தொடரும் மோடி... | தமிழ்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் கடத்தல்... | உருகிய ராஜேந்திர பாலாஜி! | ‘சைலன்ட் மோடி’ல் மர வியாபாரி!

எடப்பாடி போட்ட போன் கால் முதல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரை... | கழுகார் அப்டேட்ஸ்

அதிகாரிகளுக்கு அடித்தது ‘ஷாக்’! | ராகுலைப் பின்தொடரும் மோடி... | தமிழ்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் கடத்தல்... | உருகிய ராஜேந்திர பாலாஜி! | ‘சைலன்ட் மோடி’ல் மர வியாபாரி!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
துரைமுருகன் நிகழ்ச்சியில் ‘பவர் கட்’...
அதிகாரிகளுக்கு அடித்தது ‘ஷாக்’!

வேலூர், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் நடந்த இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசத் தொடங்கியதும் மின்தடை ஏற்பட்டது அல்லவா... அதன் காரணமாக மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் இருவரை பணியிடமாற்றம் செய்து, ஒட்டுமொத்த துறைக்கும் ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார் துரைமுருகன். மறுநாள் காட்பாடி பிரம்மபுரம் அரசுப் பள்ளியில் கலந்துகொண்டு சைக்கிள் வழங்கி துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோதும், அருகிலிருந்த கோயிலிலிருந்து மணி ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

துரைமுருகன்
துரைமுருகன்

இதனால், மீண்டும் ‘அப்செட்’ ஆன துரைமுருகன், ‘நான் பேசும்போதுதான் இப்படியெல்லாம் நடக்குமா?’ என தனக்கே உரிய நையாண்டி பாணியில் சொல்ல, மேடையில் இருந்தவர்களெல்லாம் வாய்விட்டுச் சிரித்தார்கள். நல்லவேளையாக, கோயில் பூசாரிமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

ராகுலைப் பின்தொடரும் மோடி...
குமரி காந்தி மண்டபத்தில் அஞ்சலி?

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி டு காஷ்மீர் நடைப்பயணம் எதிர்பார்த்ததைவிட கவனம் பெற்றிருக்கிறது. “அவர் அணிந்திருந்த ‘டி சர்ட்’டின் விலை 41,000 ரூபாய்... அவருடன் செல்லும் கேரவன்களுக்கே பல லட்சம் ரூபாய் செலவாகிறது” என்று பா.ஜ.க-வினர் தொடர்ந்து விமர்சனம் செய்தனர். அது அந்த நடைப்பயணத்துக்கு இலவச விளம்பரமாகவே மாறுவதை தாமதமாக உணர்ந்த பா.ஜ.க-வினர், வேறு திட்டம் போட்டிருக்கிறார்களாம்.

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி - மோடி

ராகுல் நடைப்பயணத்துக்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடியையும் கன்னியாகுமரிக்கு வரவழைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் அஸ்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சூரிய ஒளி விழும். அன்றைய தினம் மோடியை அங்கு அஞ்சலி செலுத்தவைப்பதே பா.ஜ.க-வின் திட்டம். “ராகுல் காந்தி நடைப்பயணம் தொடங்கிய அதே காந்தி மண்டபத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்... அப்புறம் பாருங்க, எங்க ஆட்டத்தை...” என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் குமரி பா.ஜ.க-வினர்!

தமிழ்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் கடத்தல்...
அப்டேட் ஆன காரைக்கால்!

புதுவை மாநிலம், காரைக்காலிலிருந்து தமிழக மாவட்டங்களுக்கு மதுபானங்கள் கடத்துவதுதான் வழக்கம். இப்போது பெட்ரோல், டீசலையும் கடத்த ஆரம்பித்துவிட்டார்கள். காரணம், அம்மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்ததால், தமிழ்நாட்டு விலைக்கும், காரைக்கால் விலைக்கும் இடையே 6 ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு பக்கத்து ஊர்க்காரர்களெல்லாம், இங்கு வந்து டேங்க் ஃபுல் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்த காரைக்கால் ‘பங்க்’ உரிமையாளர்கள், சுற்றியுள்ள தமிழக மாவட்ட பங்க் உரிமையாளர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு, டேங்க்கர், டேங்க்கராகவே கடத்தி ‘லம்ப்பாக’ விற்றுவிடுகிறார்களாம். இதில் கிடைக்கும் லாபத்தில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல்துறை மற்றும் ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கும் பங்கு போய்விடுவதால் யாரும் கண்டுகொள்வதில்லையாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எடப்பாடி போட்ட போன் கால்...
உருகிய ராஜேந்திர பாலாஜி!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகப் பண மோசடி செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதில் தளர்வு கோரி அவர் செய்த மனுவை ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதன்படி, ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடத்துக்கும் செல்லலாம். ஆனால், விருதுநகர் மாவட்டத்தைவிட்டு வெளியே செல்லும்போது மட்டும் விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தத் தளர்வையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு போன் செய்த எடப்பாடி, வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

கூடவே, “கட்சி வேலைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள். சீக்கிரம் தலைமை அலுவலகத்தில் சந்திக்கலாம்” என்று சொல்ல... “அண்ணே...” என்று உருகிவிட்டாராம் ராஜேந்திர பாலாஜி. “பல மாதங்களாகத் தீவிர அரசியலில் இல்லையென்றாலும் அண்ணனுக்கு செல்வாக்கைப் பார்த்தியா?!” என்று ஆதரவாளர்களிடம் சொல்லி ஆனந்தமடைந்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு...
‘சைலன்ட் மோடி’ல் மர வியாபாரி!

கொடநாடு பங்களா ‘மேப்’பைக் கையில் வைத்திருக்கும் பிரபல மர வியாபாரிக்கு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநிலப் பொறுப்பைத் தூக்கிக்கொடுத்தார்‌‌ மாஜி கொங்கு அமைச்சர். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை வேட்பாளராக்கியவர், பணத்தை வாரியிறைத்து அவரை எம்.எல்.ஏ-வும் ஆக்கினார்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

அதன் பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கிய அந்த வியாபாரி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை விசாரணையைத் தொடங்கியதிலிருந்து சைலன்ட்டாகிவிட்டாராம். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்துவருகிறாராம். கொடநாடு வழக்கில் அவரையும் சிக்கவைப்பதற்கான வேலை நடப்பதாலேயே அண்ணன் பதுங்கிவிட்டார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.