Published:Updated:

மணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் முதல் நாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள் வரை! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

‘‘அலுவலகம் வருவதற்கு தாமதமாகும். உமக்குத் தேவையான செய்திகளை மெயிலில் அனுப்பிவைக்கிறேன்’’ - என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் மெயிலில் வந்து விழுந்தன செய்திகள்!

விதிமீறிய பட்டாசு ஆலைகள்...
அனுமதி பெற்றுக் கொடுத்தாரா எம்.எல்.ஏ?

கடந்த சில மாதங்களாக, சிவகாசி வட்டாரத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, விதிமீறி பட்டாசுகள் தயாரித்த 34 ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்துசெய்தார்கள். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு ஆய்வுசெய்த பின்னரே, ஆலைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது நடைமுறை.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து:
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து:

ஆனால், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வும், பட்டாசு ஆலை அதிபருமான அசோகன், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் பேசி, 34 ஆலைகளையும் மீண்டும் இயங்க அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். ‘விதிமீறிய பட்டாசு ஆலைகளால் உயிரிழந்த 40 உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பட்டாசு முதலாளிகளின் நலனுக்காக அசோகன் செயல்பட்டுவிட்டாரே...’ எனத் தொகுதி முழுவதும் குமுறல் ஒலிக்கிறது. இந்த டீலிங்குக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை பட்டாசு ஆலை முதலாளிகள் வழங்கியிருப்பதாகக் கசியும் தகவல் சிவகாசியெங்கும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

சிக்கவைக்கும் தி.மு.க...
சிக்கலில் மர வியாபாரி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மர வியாபாரியும், அ.தி.மு.க-வின் மாநில வர்த்தகர் அணி நிர்வாகியுமான சஜ்ஜீவனுக்கு தற்போது எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடி சூழ்ந்துவருகிறதாம். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மூலமாக சஜ்ஜீவனை ஒடுக்கத் திட்டமிட்டிருக்கும் நீலகிரி தி.மு.க நிர்வாகிகள், நடுவட்டம் மரக்கடத்தல் வழக்கில் சஜ்ஜீவன் மீது ஸ்ட்ராங்காக வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறார்களாம்.

சஜ்ஜீவன்
சஜ்ஜீவன்

அதுமட்டுமல்லாமல், சஜ்ஜீவனின் சகோதரர் சுனிலை, கொடநாடு கொலை வழக்கில் முக்கியச் சாட்சியாகச் சேர்க்கவும் தி.மு.க தரப்பு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. சஜ்ஜீவனையும் கொடநாடு வழக்கில் விசாரிக்கும்படி காய்நகர்த்துகிறதாம் தி.மு.க தரப்பு. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி சூழ்ந்துவருவதால், சஜ்ஜீவன் கடும் அப்செட் என்கிறார்கள்.

அகற்றப்பட்ட பேனர்கள்...
பின்னணியில் மாவட்டச் செயலாளர்?

தி.மு.க விவசாய அணிச் செயலாளரும், நாகை முன்னாள் எம்.பி-யுமான ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மற்றும் நகரப்பகுதிகளில் தி.மு.க-வினர் பேனர் வைத்திருந்தார்கள். இந்த பேனர்களை உடனடியாக அகற்றச் சொல்லி காவல்துறையிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

‘இது மேலதிகாரிகள் உத்தரவு’ எனக் காவல்துறை கண்டிப்பு காட்டியதால், நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு பேனர்களை தி.மு.க நிர்வாகிகளே அகற்றிவிட்டார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சியினர் வைத்த பேனர்களை காவல்துறையினர் அகற்றச் சொல்லவில்லை. ‘‘திருவாரூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தரப்பினர் உத்தரவால்தான், காவல்துறையினர் இது மாதிரி நடந்துக்குறாங்க. டெல்லி பிரநிதியா ஏ.கே.எஸ்.விஜயன் அறிவிக்கப்பட்டதை, பூண்டி கலைவாணன் தரப்பினரால பொறுத்துக்க முடியலை’’ என்று பின்னணியை உடைத்து புலம்புகிறது தி.மு.க வட்டாரம்.

மீண்டும் ரோடு...
பதற்றத்தில் தென்காசி!

மதுரை திருமங்கலம் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக தென்காசி மாவட்டத்தின் விளைநிலங்கள் வழியாக சாலை அமையவிருப்பதால், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுச் சாலைக்கான வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ள விவசாயிகள், அந்த வழியாக சாலை அமைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்திவருகிறார்கள். கடந்த இரு வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை, தற்போது தொடங்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மீண்டும் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதால், தென்காசியில் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்திருப்பது பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

மணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர்!

பாலியல் புகார் தொடர்பாக பெங்களூரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அங்கு தப்பிச் செல்வதற்கு முன்பாக நெல்லையைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரின் பண்ணை வீட்டில்தான் தங்கியிருந்தாராம். இதை அப்போதே மோப்பம் பிடித்த உளவுத்துறை, காவல்துறை வட்டாரங்களை உஷார்படுத்தியிருக்கிறது.

மணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் முதல் நாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள் வரை! கழுகார் அப்டேட்ஸ்

மணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் மீதும் வழக்கு பதிவுசெய்ய காக்கிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பிரமுகர் மீது கை வைத்தால் மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்.

நீதிமன்றப் படியேறும் வேதரத்தினம்...
வெலவெலக்கும் ஓ.எஸ்.மணியன்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக எஸ்.கே.வேதரத்தினம் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது, வேதரத்தினத்தைத் தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்துள்ள சமூகப் பெயரைச் சொல்லி ஓ.எஸ்.மணியன் தாக்கிப் பேசியதாக அப்போது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

தேர்தலில் வெற்றிபெற்று ஓ.எஸ்.மணியன் சட்டமன்றம் சென்றுவிட்ட நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறாராம் வேதரத்தினம். ‘சாதி, மதம் குறித்துப் பேசுவது தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தவறு என்பதால், ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லாது’ என்று வேதரத்தினம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதால், ஓ.எஸ்.மணியன் தரப்பு வெலவெலத்துப்போயிருக்கிறது.

தாமதமாகும் வனத்துறை மாற்றங்கள்...
பின்னணியில் உச்சப்புள்ளி!

கோவை மாவட்டத்தில் காவல்துறை முதல் மாநகராட்சி வரை அனைத்து முக்கியத் துறைகளிலும் அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால், கடந்த ஆட்சியில் கரைவேட்டி கட்டாத அ.தி.மு.க பிரமுகர்களாக வலம்வந்த வனத்துறை அதிகாரிகள் மட்டும் இந்த மாற்றங்களிலிருந்து தப்பிவிட்டனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி

அதேபோல, வனத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களிலும் அதிகாரிகள் மாற்றம் நடைபெறவில்லை. ‘வனத்துறையின் உச்சப்புள்ளி, தனது தொழில் நிமித்தமாக விசுவாசமான அதிகாரிகளை நீலகிரி, கோவைப் பகுதிகளில் பணியமர்த்த விரும்புகிறார். அதற்குத் தோதான ஆட்களைத் தேர்வு செய்ய தாமதமாவதால், வனத்துறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை’ என்கிறது வனத்துறை வட்டாரம்.

நாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள்!

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவர் சம்பாதித்த அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 66 கோடி ரூபாய். அந்தச் சொத்துகளை 1997-ம் வருடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடக்கினார்கள். 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்தச் சொத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3,000 கோடி ரூபாய் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம்.

 போயஸ் கார்டன் - வேதா நிலையம்
 போயஸ் கார்டன் - வேதா நிலையம்

இந்தச் சொத்துகளை நாட்டுடமை ஆக்க, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறாராம். வருவாய்த்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய துறைகளை முடுக்கிவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

கெடுபிடி காட்டும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்!

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 50 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்காக வரும் போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளின் கெடுபிடிகள் தாங்க முடியவில்லையாம். ஜூன் 26-ம் தேதியன்று கொளத்தூர், ரெட்டேரி நெடுஞ்சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வண்ண மீன்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்த முதல்வர் வந்திருக்கிறார். முதல்வரின் வருகையை ஒட்டி, கொளத்தூர் தொகுதியில் செயல்பட்டுவரும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு தினசரி மீன் சப்ளை செய்யும் சந்தையில் இருக்கும் கடைகளை ஐந்து மணி நேரம் மூடச் சொன்னார்களாம்.

ஸ்டாலின் இல்லம் அருகே
ஸ்டாலின் இல்லம் அருகே

‘‘நாங்கள் ஒட்டுமொத்தமாகக் கடையை மூடினால், முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுபோல் ஆகிவிடும்’’ என்று சில கடைக்காரர்கள் போலீஸாரிடம் சொன்னதைப் பாதுகாவலர்கள் கேட்கவில்லையாம். அதேபோல, வண்ண மீன்கள் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ‘கொரானா பரவல் இருப்பதால், மனு எழுதப்பட்ட காகிதம் மூலமாகக்கூட வைரஸ் பரவலாம். எனவே, முதல்வரிடம் கொடுக்க விட மாட்டோம்’ என்று சொல்லித் தடுத்திருக்கிறார்கள். நீண்ட நேரமாக சங்கத்தினர் போராடித்தான் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார்கள். வந்தவர்களிடம் மனுவை வாங்கிப் படித்த முதல்வர், ‘100 ஏக்கரில் வண்ண மீன்கள் பூங்கா, கொளத்தூரில் மீன் சந்தை அமைக்கப்படும்’ என்று அறிவித்தாராம்.

அடுத்த கட்டுரைக்கு