Published:Updated:

கீதா ஜீவன், தம்பி மோதல் முதல் ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்!

வாடகை மூன்று லட்சமா? | ஆட்டம்போடும் மா.செ ஆதரவாளர்கள்... | பா.ஜ.க சார்பில் கபடிப் போட்டி... | திண்டாட்டத்தில் அதிகாரிகள்! கழுகார் அப்டேட்ஸ்

கீதா ஜீவன், தம்பி மோதல் முதல் ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ் வரை... கழுகார் அப்டேட்ஸ்

வாடகை மூன்று லட்சமா? | ஆட்டம்போடும் மா.செ ஆதரவாளர்கள்... | பா.ஜ.க சார்பில் கபடிப் போட்டி... | திண்டாட்டத்தில் அதிகாரிகள்! கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
இணைந்த தலைவர்கள்...
இணையாத ஆதரவாளர்கள்!

ஜெயலலிதா எப்போது நத்தம் விசுவநாதனை டம்மியாக்கி, திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சராக்கினாரோ அப்போதிருந்தே அவர்கள் இருவரும் அந்த மாவட்டத்தில் எதிரெதிர் கோஷ்டியாகிவிட்டனர். அவர்களின் ஆதரவாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமூக வலைதளங்களில்கூட எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

கீதா ஜீவன், தம்பி மோதல் முதல் ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ் வரை... கழுகார் அப்டேட்ஸ்

இந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான அணியில் சீனிவாசன் பொருளாளராகவும், விசுவநாதன் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் பழநி முருகன் கோயிலுக்கு எடப்பாடி சாமி கும்பிட வந்தார். அப்போது இருவரும் அவருடன் சிரித்தபடி ஒன்றாகவே பயணித்தனர். ஆனால், அவர்களின் ஆதரவாளர்களோ ஏற்கெனவே இருந்த முட்டல் மோதல்களை மனதில் வைத்துக்கொண்டு, விலகியே இருக்கிறார்களாம். தொண்டர்களின் மோதல், மீண்டும் தலைவர்களின் மோதலாக மாறக்கூடும் என்கிறார்கள்.

வாடகை மூன்று லட்சமா?
ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியையும், கட்சி அலுவலகத்தையும் இழந்திருக்கிறார் ஓ.பி.எஸ். இருந்தாலும் எப்படியும் சட்டப் போராட்டத்தின் மூலம் கட்சியை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவரிடம், “சென்னையில நமக்குன்னு ஒரு அலுவலகம் வேணும் தலைவரே” என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை மந்தைவெளியில் ஓர் அலுவலகம் பார்த்தார் ஓ.பி.எஸ்.

கீதா ஜீவன், தம்பி மோதல் முதல் ஆபீஸ் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்ட ஓ.பி.எஸ் வரை... கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், இப்போது அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். காரணம் கேட்டால், “மாதம் 3 லட்சம் ரூபாய் வாடகை... ஒரு கோடி டெபாசிட் கேட்கிறார்கள். அவ்வளவு தொகையை ஏன் முடக்க வேண்டும்... அதுதான் ராயப்பேட்டை அலுவலகமே நமக்குச் சொந்தமாகப் போகிறதே? என்று சிரிக்காமல் பதில் சொல்கிறாராம் அவர். “காசு விஷயத்தில் இப்படி இருந்துதான் எல்லாவற்றையும் இழந்தார்... இன்னும் அதை உணராமல் இருக்கிறாரே” என்று சோகமாகச் சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

ஆட்டம்போடும் மா.செ ஆதரவாளர்கள்...
பாதிக்கப்படும் பொதுமக்கள்!

பேனர் கலாசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்துவந்தாலும்கூட, தி.மு.க நிர்வாகிகள் பலர் இன்னும் அதைக் கைவிடவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவருக்கு பேனர் மீது அளவில்லாக் காதல். இதனால், காதுகுத்து, கல்யாணம், பிறந்தநாள் என்று எந்த விழா வந்தாலும் அன்னாரின் புகைப்படத்துடன் பெரிய சைஸ் பேனர் வைத்து அமர்க்களப்படுத்துகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். சமீபத்தில் ஆடி கிருத்திகையையொட்டி முருக பக்தர்களை வரவேற்று, அவரின் படத்துடன் சாலையில் வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர்களால் பொதுமக்களும் பக்தர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். சாலையை ஆக்கிரமித்து பேனர் வைக்கப்பட்டதைப் புகைப்பட ஆதாரமாக்கியுள்ள எதிர்க்கட்சியினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்திருக்கிறார்களாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பா.ஜ.க சார்பில் கபடிப் போட்டி...
மோடியுடன் கெட் டுகெதர்!

மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் கபடிப் போட்டி நடத்துவதற்கான திட்டத்தை செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்போகிறார்கள். 234 தொகுதிகளிலிருந்தும் பல்வேறு அணிகள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவரும் அணியினரை டெல்லியில் மோடியுடனான கெட் டுகெதரில் பங்கேற்கவைப்பதாகவும் சொல்லி போட்டிக்கு ஆள் சேர்க்கிறார்கள் சிலர். கபடி, மோடி பெயரைச் சொல்லி நிதி திரட்டுவது தொடர்பாகப் பல புகார்கள் வந்திருப்பதால், கணக்கு வழக்குகள் எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்று எச்சரித்திருக்கிறதாம் கட்சித் தலைமை.

அரசு ரிஜெக்ட் செய்த இடத்தில்
புதிய பேருந்து நிலையம்?!

நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள முதலைப்பட்டி என்ற இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவிருக்கிறார்கள். ‘பேருந்து நிலையம் அமைக்க உகந்தது இல்லை’ என்று சில வருடங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் ரிஜெக்ட் செய்யப்பட்ட இடமாம் அது.

ஆனாலும், இன்றைய ஆட்சியாளர்கள் இவ்வளவு ஆர்வமாக அதே இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கத் துடிப்பதன் பின்னணியில், அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த இரண்டு ரியல் எஸ்டேட் புள்ளிகளின் கைவண்ணம் இருக்கிறதாம். முதலைப்பட்டியில் இருக்கும் தங்கள் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொள்வதற்காக, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளைச் சரிக்கட்டி அந்த இடத்தைத் தேர்வு செய்யவைத்ததே அவர்கள்தான் என்கிறார்கள் புதிய பேருந்து நிலையத்தை எதிர்ப்போர்.

அமைச்சர் கீதா ஜீவன் - தம்பி மோதல்...
திண்டாட்டத்தில் அதிகாரிகள்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும், அவருடைய தம்பியும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயருமான ஜெகனுக்கும் இடையே ‘டேர்ம்ஸ்’ சரியில்லையாம். மாநகராட்சிப் பகுதியில் அமைச்சரிடம் சொல்லாமலேயே, ஆய்வு என்ற பெயரில் ‘சோலோவாக’ அதிரடிகாட்டியிருக்கிறார் தம்பி. இதை ரசிக்காத அக்கா, மாநகராட்சிப் பகுதியில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மேயருக்கு அழைப்பில்லாமல் பார்த்துக்கொண்டாராம்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் அதிகாரிகளோ, மேயர் சொல்வதைக் கேட்பதா, அமைச்சர் சொல்வதைக் கேட்பதா என்று குழப்பத்தில் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்களாம். “அக்காவுக்கும் தம்பிக்கும் அதிகாரப் போட்டியெல்லாம் இல்லை. ஸ்மார்ட் சிட்டி கான்ட்ராக்டர்கள் கொடுத்த ‘இனிப்புகளைப்’ பகிர்ந்துகொள்வதில்தான், ரெண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு” என்கிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.