Election bannerElection banner
Published:Updated:

கமலைக் குறிவைத்த ரெய்டு முதல் சசிகலாவுக்குத் தூதுவிட்ட தி.மு.க வேட்பாளர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

“தேர்தல் பிரசார களத்தில் இருக்கிறேன். தகவல்களை வாட்ஸ்அப்-பில் அனுப்பியிருக்கிறேன்” என்றபடி போனை கட் செய்தார் கழுகார்...

ஒப்பந்ததாரர்களை மிரட்டும் ஆளும்தரப்பு!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, அரசுத்துறையில் எந்த ஒப்பந்தமும் விடக் கூடாது என்பது விதி. ஆனால், தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்று மாலை மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களுக்கு முன்தேதியிட்டு அனுமதி வழங்கியிருக்கிறார்களாம்.

சட்டசபை
சட்டசபை

இதை எதிர்த்துக் கேட்ட சில ஒப்பந்ததார்களை மிரட்டியதாம் ஆளும்தரப்பு. இதை ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையருக்குப் புகாராக அனுப்பியிருக்கிறது அரசு சாரா நிறுவனம் ஒன்று. நடவடிக்கை இருக்குமா என்பதுதான் கேள்வி!

அப்படியே நடவடிக்கை எடுத்துட்டாலும்...

கமலைக் குறிவைத்து ரெய்டு!

திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரும், அனிதா டெக்ஸ்காட் உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் மார்ச் 17-ம் தேதி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தாராபுரத்தில் சந்திரசேகரின் அண்ணனும், ம.தி.மு.க-வின் மாவட்டத் துணைச் செயலாளருமான கவின் நாகராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கவின் நாகராஜுக்கும், தாராபுரம் தி.மு.க நகரச் செயலாளர் தனசேகருக்கும் பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் கிடைத்த தகவலையொட்டி, தனசேகர் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளின் முடிவில் அனிதா டெக்ஸ்காட் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கமல் தேர்தல் பிரசாரம்
கமல் தேர்தல் பிரசாரம்

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை, முகக்கவசங்கள் மற்றும் கவச ஆடைகளை சந்திரசேகரின் நிறுவனம்தான் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறது. மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ‘அனிதா ஹெல்த் கேர்’ என்ற நிறுவனத்தையும் நடத்திவரும் சந்திரசேகர், திருப்பூரின் முக்கியமான தொழில் பிரமுகர். நடிகர் கமல்ஹாசனுடன் நெருங்கிய தொடர்புகொண்ட இவர், மநீ.ம தொடங்கப்பட்ட பிறகு பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்த திடீர் சோதனை, ம.நீ.ம-வின் அடித்தளத்தை அசைக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிடுகிறார் கமல்ஹாசன். அந்தத் தொகுதியில் கமல்ஹாசனுக்குப் பெருகிவரும் ஆதரவால் கடுப்பான பா.ஜ.க., இந்தச் சோதனைக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எல்லோருக்கும் சோதனைன்னா அந்த ஆண்டவர்கிட்ட போவாங்க... அந்த ஆண்டவருக்கே சோதனைன்னா...

சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி!

கிளர்ச்சியாளர்களைச் சரிக்கட்ட கவனிப்புகள்!

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களமிறங்குகிறார் அமைச்சர் எம்.சி.சம்பத். அதேசமயம் ‘அமைச்சராக இருந்தும் தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை’ என்று போர்க்கொடித் தூக்கும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள், ‘தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றால் கணிசமான தொகை வேண்டும்’ என்று அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம்.

அமைச்சர் எம்.சி.சம்பத்
அமைச்சர் எம்.சி.சம்பத்

வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் அமைச்சரும் வேறு வழியில்லாமல் முன்னாள், இந்நாள் நகரங்களுக்குச் சிலபல லட்டுகளைக் கொடுத்து சரிக்கட்டியிருக்கிறாராம். இதேபோல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் தமிழரசி தேர்தலில் களம்காண்கிறார். தி.மு.க நிர்வாகிகள் சிலர் ‘நாங்க சுயேச்சையாக நிற்கப்போகிறோம். உங்கள் வாக்கு பிரிந்துவிடும்’ என மிரட்டுகிறார்களாம். மிரட்டும் நபர்களுக்கு அவ்வப்போது லட்டுகளைக் கொடுத்து சரிக்கட்டி வருகிறாராம் அவர்.

ஸ்வீட் எடு கொண்டாடு!

பூமராங் ஆன அ.தி.மு.க வியூகம்!

‘தி.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியடையும் நபர்களை அ.தி.மு.க டீம் வளைத்து, போட்டி வேட்பாளராக நிறுத்த முயல்கிறது’ என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அது தற்போது பூமராங்காக அ.தி.மு.க-விலேயே நடக்கத் தொடங்கியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகரன் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார்.

கமலைக் குறிவைத்த ரெய்டு முதல் சசிகலாவுக்குத் தூதுவிட்ட தி.மு.க வேட்பாளர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அமைச்சர் தங்கமணிக்கு எதிராக சந்திரசேகரன் தனி ஆவர்த்தனம் செய்ததால், அமைச்சர் அவருக்கு கல்தா கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ‘சந்திரசேகரன் சுயேச்சையாக நின்றால், அ.தி.மு.க இங்கே தோற்பது இப்போதே உறுதி. அமைச்சரால் ஒரு தொகுதியை இழக்கப்போகிறோம்’ என்று அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், சந்திரசேகரனை அ.தி.மு.க தலைமை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

மந்திரம் செய்வாரா சந்திரசேகரன்?!

சசிகலாவுக்குத் தூதுவிட்ட தி.மு.க வேட்பாளர்!

மார்ச் 18-ம் தேதி தஞ்சாவூர் வந்த சசிகலா, தன் கணவர் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலில் வழிபட்டார். அத்துடன் அங்கேயே நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த பேரக்குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டார்.

கணவர் சமாதியில் சசிகலா
கணவர் சமாதியில் சசிகலா
ம.அரவிந்த்

கோயிலில் வீரனார் வீற்றிருந்த பீடத்தில், ‘நட்பும் நன்றியும் மறவோம்’ என்ற வாசகம் எழுப்பட்டிருந்தது. அதையே கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்த சசிகலா, கண்களில் கண்ணீர் கசிய அருகிலிருந்த தன் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷிடம், ‘நானும் மாமாவும் (நடராசன்) இதைத்தான் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்போம். நான் இதுவரை அப்படித்தான் இருக்கேன். ஆனால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அப்படி இருப்பதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார். கிட்டதட்ட 25 வருடங்களுக்குப் பிறகு கணவரின் குலதெய்வக் கோயிலில் சசிகலா வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூரில் சசிகலா தங்கியிருந்தபோது ஒரத்தநாடு தி.மு.க வேட்பாளரான எம்.ராமச்சந்திரன் தனக்கு நெருக்கமான ஒருவரைத் தூது அனுப்பி, தனக்கு மறைமுக ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எம்.ராமச்சந்திரன் ஒருவகையில் சசிகலாவுக்கு உறவினர். வெளிப்படையாகவே சசிகலா குடும்பத்துடன் நட்பு வைத்துக்கொண்டிருப்பவரான எம்.ராமச்சந்திரன், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சசிகலா குடும்பத்தின் ஆசியுடன்தான் வைத்திலிங்கத்தை தோற்கடித்து வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்டது. அதேபோல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று சசிகலாவுக்குத் தூதுவிட்டிருக்கிறாராம் ராமச்சந்திரன்.

நன்றி மறப்பது நன்றன்று!

புதுச்சேரியில் கூட்டணியைக் கலங்கவைத்த பா.ஜ.க!

‘‘ ‘ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம்’ என்ற பழமொழியை நம் விஷயத்தில் பா.ஜ.க நிஜமாக்கிவிட்டதே” என்று புலம்புகிறார்கள் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள். புதுச்சேரியில் அடித்தளமே இல்லாத பா.ஜ.க., தனது வியூகத்தால் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஒன்பது தொகுதிகளை விடாப்பிடியாகக் கேட்டும் பெற்றது. இதனால், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கும் சீட் கிடைக்காமல் தொகுதி மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு

பா.ஜ.க-வில் இணைந்த வில்லியனூர் சிட்டிங் எம்.எல்.ஏ நமச்சிவாயம், இம்முறை மண்ணாடிப்பட்டு தொகுதிக்குச் செல்வதால், மண்ணாடிப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.பி.ஆர்.செல்வத்துக்கு கல்தா கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல பா.ஜ.க-வில் இணைந்த ஜான்குமாரின் மகனுக்கு நெல்லித்தோப்பு தொகுதி ஒதுக்கப்பட்டதால், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ வேறு வழியில்லாமல் உருளையன்பேட்டைக்கு மாறியிருக்கிறார். “பா.ஜ.க இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ?” என்று புலம்பிவருகிறார்கள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள்.

தலைச்சுத்திக் கிடக்குறாங்கனு சொல்லுங்க!

‘‘செலவு பண்ண முடியாது!’’
காங்கிரஸ் வேட்பாளர் கறார்!

ஆளுங்கட்சி எதிர்ப்பலையால் இம்முறை கோவை தெற்குத் தொகுதியில் வெற்றிபெற்றுவிடலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார். இதனால், சத்தியமூர்த்தி பவனில் பஞ்சாயத்துகளையெல்லாம் கடந்து விடாப்பிடியாக சீட்டும் வாங்கிவிட்டார். ஆனால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதை அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாம்.

கமலைக் குறிவைத்த ரெய்டு முதல் சசிகலாவுக்குத் தூதுவிட்ட தி.மு.க வேட்பாளர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அப்செட்டான மயூரா ஜெயக்குமார், ‘‘போன தடவையே மூன்று கோடி வரை செலவு பண்ணி கடனாளியாகி தோத்ததுதான் மிச்சம். இந்த தடவை நான் பெருசா செலவு பண்ண மாட்டேன். நீங்கதான் பார்த்துக்கணும். இல்லாட்டி எனக்கு சீட்டே வேணாம்’’ என்று தலைமையிடம் புலம்பினாராம். அவரைச் சமாதானப்படுத்தி, தேர்தல் வேலையை உற்சாகமாகப் பார்க்கும்படி சொல்லி அனுப்பியிருக்கிறது தலைமை.

ஜெயக்குமார், இப்போ பயக்குமார்!

மாற்றுக் கட்சியினருக்கு வலைவிரிக்கும் அ.ம.மு.க!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துசெல்விக்கு அ.தி.மு.க-வில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் ராஜலட்சுமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், அதிருப்தியில் இருந்த முத்துசெல்வியை அ.ம.மு.க-வில் சேர்த்து, சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடவைக்க முயற்சி நடந்தது. ஆனால், முத்துசெல்வி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அவர் அ.ம.மு.க-வுக்குச் செல்லாமல் இருந்ததால், அவரை கௌரவிக்கும் வகையில் அ.தி.மு.க-வில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதியில் தி.மு.க-வில் சீட் எதிர்பார்த்திருந்த தொழிலதிபர் அஜய் சேதுபதியை வளைக்க அ.ம.மு.க-வினர் முயன்றிருக்கிறார்கள். அவர் மறுப்பு தெரிவித்து தனது தொழிலை கவனிக்க சென்னைக்குப் பறந்துவிட்டாராம்.

கிரேட் எஸ்கேப்!

அ.தி.மு.க கோஷ்டி மோதல்...
நொந்துபோன பா.ம.க வேட்பாளர்!

அ.தி.மு.க. கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் சித்தமல்லி பழனிசாமி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அ.தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம்.

கமலைக் குறிவைத்த ரெய்டு முதல் சசிகலாவுக்குத் தூதுவிட்ட தி.மு.க வேட்பாளர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அ.தி.மு.க பிரமுகர்களுக்குத் தகவல் தர வேண்டியது எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணன் பொறுப்பாம். தனக்குத் தகவல் தெரிவிக்கப்படாததால் ராதாகிருஷ்ணனுடன் சண்டையிட்டிருக்கிறார் செந்தில்நாதன். வார்த்தைப்போர் ரணகளமான நிலையில், வேட்பாளர் பழனிசாமி, ‘‘நீங்க இப்படி சண்டை போட்டா, நான் எப்படி வேட்புமனுத் தாக்கல் பண்றது? நான் ஒதுங்கிக்கிறேன்’’ என்று ஆவேசமாகியிருக்கிறார். பிறகு ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கிறார்கள். ‘‘ஆரம்பமே இப்படியா?’’ என்று நொந்துகிடக்கிறாராம் பழனிசாமி.

இன்னும் எவ்வளவோ இருக்கு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு